இஸ்ரவேலரின் தலைமைத்துவத்தை யோசுவா பொறுப்பேற்கவிருந்த தருணத்தில் மோசே அவரை உற்சாகப்படுத்தியதை உபாகமம் 3ல் நாம் வாசிக்கிறோம். மோசேயினுடைய இடத்தை நிரப்புமளவிற்கு தகுதியில்லை என்கிற உணர்வோடும் பயத்தோடும் யோசுவா நிரம்பி இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. எனவே, யோசுவாவை உற்சாகப்படுத்தும்படியாக கர்த்தர் மோசேயிடம் கூறினார்.

ஒரு பெரிதான புதிய சவாலுக்கு நாம் முகம் கொடுக்கும்போது நமக்குத் தூண்தல் தருவதற்கு அவ்வப்போது ஊக்கமளிக்கக்கூடிய ஒரு வார்த்தை நம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. ஆனால், எமது இல்லத்திலோ அல்லது பணியிடத்திலோ எமது அன்றாட பொறுப்புக்களை நிறைவேற்றுகையில் பாராட்டும் மெச்சுதலும்கூட நமக்கு தேவைப்படுகிறது.

பெருநிறுவன கணக்காளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டபோது, அவரின் தற்கொலைக்கான காரணத்தை கண்டறிவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நிறுவனத்தின் புத்தகங்கள் ஆராயப்பட்டன, ஆனால் எதுவிதமான குறையும் கண்டறியப்படவில்லை. ஒரு குறிப்பு கண்டுபிடிக்கப்படும் வரையிலும், அவரது தற்கொலைக்கான காரணத்தை அறிவதற்கான எந்தவொரு துப்பும் வெளிப்பட வில்லை. அந்தக் குறிப்பு சொல்லுவதாவது: “30 வருடங்களில் எந்தவொரு ஊக்கமளிக்கும் வார்த்தையும் எனக்குக் கிடைக்கவில்லை. இதனால், நான் வெறுப்படைந்திருக்கிறேன்!” என்று வெறுமனே எழுதப்பட்டிருந்தது.

ஒரு சிறிய அங்கீகார வார்த்தையின் அடையாளமாவது கிடைக்காதா என்று பலர் ஏங்குகின்றனர். அங்கீகாரத்துக்குரிய ஒரு வார்த்தை, அக்கறையுள்ள ஒரு புன்சிரிப்பு, ஒரு அன்பான கைகுலுக்கல், மற்றும் அவர்களிலோ அல்லது அவர்களின் பணியிலோ நாம் காணக்கூடிய சிறப்பைக் குறித்தான நேர்மையான பாராட்டு போன்றவை அவர்களுக்குத் தேவை.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபரையேனும் ஊக்குவிப்பதற்கு (முகஸ்துதி அல்ல) தீர்மானிப்போம். ஊக்குவிப்பிற்காக எப்படியாவது முயற்சிக்கவேண்டுமென்று நம்மைச் சுற்றிலும் இருக்கிறவர்களுக்கு உதவிசெய்வதில் நமது பங்களிப்பைக் கொடுப்போமாக.