கிறிஸ்தவ புத்தக வெளியீட்டு மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்று வந்தது. 280 நபர்கள் 50 நாடுகளில் இருந்து வந்திருந்தனர். கடைசி நாளில் அவர்கள் அனைவரும் சேர்ந்து குழுவாக புகைப்படம் எடுத்துகொள்ள ஹோட்டலின் வெளியே திரண்டனர். இரண்டாம் தளத்தில் இருந்த பால்கனியில் இருந்து புகைப்படக்காரர் பல புகைப்படங்களை எடுத்துத் தள்ளினார். பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்த பின்பு “எல்லாம் முடிந்தது” என்று சொன்னார். உடனே கூட்டத்தில் இருந்து ஒருவர் “ஜாய் டூ த வேர்ல்டு!” (Joy to the world) என்று கத்தினார். உடனடியாக மற்றொருவர் “த லார்ட் இஸ் கம்” (The Lord is Come) என்ற பாடலின் அடுத்தவரியை மறுமொழியாக பாடினார். உடனே குழுவாய் சேர்ந்து அக்கிறிஸ்துமஸ் பாடலை அனைவரும் அழகாய் பாடினர். மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிறைந்த அக்காட்சியை என்னால் மறக்கவே முடியாது.

லூக்கா விவரிக்கும் கிறிஸ்துமஸ் செய்தியில் ஓர் தேவ தூதன் இயேசுவின் பிறப்பை மேய்ப்பர்களுக்கு இவ்வாறு அறிவிப்பதை காணலாம். “பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று காத்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக். 2:10-11).

இது சிலருக்கான மகிழ்ச்சி அல்ல, இது எல்லோரும் அனுபவிப்பதற்கே. “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை… தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவா. 3:16).

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையை மாற்றிப்போடும் இயேசுவின் நற்செய்தியை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் போது, நாம் அவர்களோடு ஒருமனப்பட்டு அவரது நீதியின் மகிமையையும் அன்பின் மகத்துவங்களையும் புகழ்ந்து பாடுகின்றோம்.

“ஆர்ப்பரிப்போம் இந்நாளில், கிறிஸ்து இன்று பிறந்தாரே!”