“முதல் முறை நான் விண்வெளிக்கு சென்ற பொழுது, பூமியை குறித்ததான என்னுடைய கண்ணோட்டம் வியத்தகு வண்ணம் மாறியது,” என்று விண்வெளி வீரர் சார்லஸ் ஃபிராங்க் போல்டன் ஜூனியர் (Charles Frank Bolden Jr.) கூறினார். பூமியிலிருந்து நானூறு மைல்களுக்கு அப்பால், எல்லாம் அமைதியாகவும், அழகாகவும் அவருக்கு காட்சியளித்தது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளை கடந்து சென்றபொழுது, அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் சச்சரவுகளை நினைவு கூர்ந்த பொழுது, “நிஜம் அவரை உலுக்கியது.” அத்தருணத்தைக் குறித்து தயாரிப்பாளர் ஜாரெட் லேடோ (Jared Leto) பேட்டிகண்ட பொழுது, அத்தருணத்திலே, பூமி எவ்வாறு இருக்க வேண்டும் என்ற உணர்வும், அதை செவ்வைப்படுத்த வேண்டும் என்ற வைராக்கியத்தையும் உணர்ந்ததாக தெரிவித்தார்.

இயேசு பெத்லகேமிலே பிறந்த பொழுது, இந்த பூமி தேவன் விரும்பிய வண்ணம் இருக்கவில்லை. ஒழுக்கமின்றி, ஆவிக்குரிய இருளில் இருந்த நம் அனைவருக்கும், இயேசு, ஜீவனையும், வெளிச்சத்தையும் கொண்டு வந்தார் (யோவா. 1:4). இந்த உலகம் அவரை அறிந்துகொள்ளவில்லை என்றாலும், “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (வச. 12).

குடும்பங்களில் பிரிவினைகள் ஏற்படும் பொழுது, பிள்ளைகள் பட்டினியாய் இருக்கும் பொழுது, உலகத்தில் யுத்தங்கள் ஏற்படும் பொழுது, மொத்தத்தில் நம்முடைய வாழ்வு இருக்க வேண்டிய வண்ணம் இல்லாத பொழுது, நமக்கு மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது. ஆனால் நாம் அனைவரும் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து, ஒரு புதிய வழியில் பயணிக்க முடியும் என்று தேவன் நமக்கு வாக்களிக்கிறார்.

உலக இரட்சகராகிய இயேசு, தம்மை ஏற்றுக்கொண்டு, பின்பற்றுகிற அனைவருக்கும் தன் ஜீவனையும், வெளிச்சத்தையும் ஈவாகக் கொடுக்கிறார் என்பதை இந்த கிறிஸ்துமஸ் காலம் நமக்கு நினைவூட்டுகிறது.