நீங்கள் இந்தக் காட்சியை டிவி விளம்பரத்தில் பார்த்திருக்கலாம். கதவு தட்டும் சத்தம் கேட்டு ஒருவர் கதவை திறப்பார். வெளியில் இருந்து ஓர் மனிதர் உள்ளே வந்து, மிகப் பெரிய தொகை எழுதப்பட்டிருக்கும் ஓர் காசோலையை கொடுப்பார். அதைப் பெற்றுக்கொண்ட மனிதர் ஆடிப்பாடி, குதித்து, மகிழ்ந்து காண்பவர் எல்லோரையும் கட்டி அணைப்பார். “நான் வெற்றி பெற்றுவிட்டேன்! நான் பணக்காரனாகிவிட்டேன்! என்னால் இதை நம்பமுடியவில்லை. என் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிட்டது!” என்று குதூகலிப்பார். திடீரென செல்வம் நம்மை தேடி வந்தால் நாம் இப்படித் தான் கட்டுக்கடங்கா உணர்ச்சிகளை வெளிப்படுத்துவோம்.

வேதாகமத்தில் மிகவும் நீளமான அதிகாரமாகிய சங்கீதம் 119ல் ஓர் அற்புதமான வசனத்தை காணலாம். “திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்” (வச. 14). என்ன அருமையான ஒரு ஒப்பிடுதல்! பெரும் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொள்ளும் பொழுது, நாம் குதூகலிப்பது போல் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நாம் வாழும் பொழுதும் ஆனந்தக் களிப்படைய முடியும்! 16ஆம் வசனத்திலும் இதையே திருப்பி சொல்கிறார். கர்த்தர் கொடுத்த கட்டளைகளுக்காய் நன்றியுள்ள இருதயத்துடன் தன் மகிழ்ச்சியை தெரிவிக்கிறார் சங்கீதக்காரன். “உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்”.

ஆனால், பொக்கிஷத்தைப் பெற்றுக்கொள்ளும்போது ஏற்படும் சந்தோஷத்தைப் போல, தேவனுடைய கட்டளைகளை பெற்றுக்கொள்ளும்பொழுதும் அதே உணர்வுடன் நாம் இல்லாவிட்டால்? தேவனுடைய கட்டளைகள் பொக்கிஷத்தைப் போல எப்படி சந்தோஷப்படுத்தும்? அது யாவும் நன்றியுள்ள இருதயத்தில் தான் தொடங்கும். அப்படிப்பட்ட குணாதிசயத்தை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதன்மேல் தான் நாம் கவனம் செலுத்துவோம். எப்பொழுது தேவனுடைய ஈவுகளுக்காய் நன்றி செலுத்த ஆரம்பிக்கிறோமோ, அப்பொழுதே நம் ஆத்துமாக்கள் பெலனடைய ஆரம்பித்து விடும். அவரது ஜீவ வார்த்தையாகிய களஞ்சியத்தலிருந்து ஞானம், அறிவு மற்றும் சமாதானத்தை காண வேண்டிக்கொள்வோம்.

ஒவ்வொரு நாளும், நாம் இயேசுவை அதிகமாக நேசிக்கும் பொழுது, நிச்சயமாக நாம் ஐஸ்வரியவான்கள் தான்.