இக்காலத்து வேதாகம மொழிபெயர்ப்பாளர் ஒருவர் கூறிய சொற்றொடரை, ஒருவர் மேற்கோள் காட்டிய பொழுது அதிர்ச்சிக்குள்ளானேன். “நம் வாழ்க்கை முறை” என்ற சொற்றொடரைப்பற்றி கூகுளில் நான் தேடிப்பார்த்த பொழுது, மக்கள் தாங்கள் எதிர்பார்த்த வாழ்க்கை முறைகள் அச்சுறுத்துபவைகளாக இருப்பதைத் தாங்கள் உணர்வதை மையமாகக் கொண்டே அநேக பதில்கள் கூகுளில் காணப்பட்டது. அவ்வாறு உணரப்பட்ட அச்சுறுத்தல்கள் சீதோஷ்ணநிலை மாற்றம், தீவிரவாதம், அரசாங்கத்தின் அரசியல் போக்கு ஆகியவை ஆகும்.

கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய, உண்மையில் நமது வாழ்க்கை முறை உண்மையில் எப்படிப்பட்டது? வசதியான, பாதுகாப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையா? அல்லது இன்னும் வேறு ஏதாவதா? என்று எண்ணிப்பார்த்தேன்.

பவுல் அப்போஸ்தலன் எபேசு சபை கிறிஸ்தவர்களின் வாழ்க்கையை மிகச்சிறந்த முறையில் மாற்றியமைத்த விதத்தைப்பற்றி கூறுகிறார். “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மை கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்” (எபே. 2:4–5). இதன் விளைவாக“நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு… அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்” (எபே. 2:10).

நற்கிரியைகளைச் செய்வது, பிறருக்கு உதவி செய்வது, கொடுப்பது, அன்பு செலுத்துவது, இயேசுவின் நாமத்தில் ஊழியம் செய்வது – இவைதான் நமது வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும். விசுவாசிகள், விருப்பமிருந்தால் செய்யலாம்; இல்லையென்றால்  விட்டு விடலாம் என்றல்ல. கட்டாயம் செய்ய வேண்டும். தேவன் இக்காரியங்களைச் செய்யவே ஜீவனை நமக்கு கொடுத்திருக்கிறார்.

இந்த மாறிவரும் உலகத்தில், பிறரைத் தொடும் விதத்தில் வாழ்ந்து தேவனைக் கனப்படுத்த தேவன் நம்மை அழைத்து, பலப்படுத்துகிறார்.