
ஜீவக்கிரீடம
பன்னிரண்டு வயதான லீஅடியானெஸ் ரோட்ரிகஸ்-எஸ்பாடா, 5-கே ஓட்டத்திற்கு (3 மைல்களுக்கு மேல்) தாமதமாகிவிடுமோ என்று கவலைப்பட்டார். அரை-மராத்தானில் பங்கேற்பாளர்களுடன் (13 மைல்களுக்கு மேல்!) அவள் தொடங்கும் நேரத்துக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே, ஓட்டப்பந்தய வீரர்களின் குழுவுடன் கிளம்பினாள். லீஅடியானெஸ் மற்ற ஓட்டப்பந்தய வீரர்களோடு ஓடுக்கொண்டிருக்கையில், அவர்களுக்கு சிறிது முன்னிலையில் இருந்தாள். நான்காவது மைலில், இறுதிக்கோடு அவளுடைய கண்களுக்கு தென்படாததால், அவள் நீண்ட மற்றும் கடினமான பந்தயத்தில் பங்கேற்றிருப்பதாக உணர்ந்தாள். அவள் ஆட்டத்தைக் கைவிடுவதற்குப் பதிலாக, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தாள். இந்த திடீர் ஓட்டப்பந்தய வீராங்கணை தனது 13.1-மைல் பந்தயத்தை நிறைவு செய்து, ஆட்டத்தை நிறைவுசெய்த 2,111 பேர்களில் 1,885வது இடத்தைப் பிடித்தார். இதுவே விடாமுயற்சி!
ஆதித்திருச்சபை முதலாம் நூற்றாண்டில் உபத்திரவத்தை சந்தித்தபோது, பல கிறிஸ்தவர்கள் தங்கள் ஓட்டத்தை நிறுத்திக்கொள்ள தீர்மானித்தனர். ஆனால் அவர்களை தொடர்ந்து ஓடும்படிக்கு யாக்கோபு அவர்களை ஊக்கப்படுத்தினார். அவர்கள் சோதனையை பொறுமையோடே சகித்தால், தேவன் இரட்டிப்பான ஆசீர்வாதங்களை அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்குப்பண்ணுகிறார் (யாக்கோபு 1:4,12). முதலாவதாக, “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (வச. 4). இரண்டாவது, இம்மையிலும் மறுமையிலும் வாழும் வாழ்க்கையில் தேவனுடைய மகிமையில் இருக்கும் வாய்ப்பான ஜீவக்கிரீடத்தை தருவேன் என்று வாக்குப்பண்ணுகிறார் (வச. 12).
கிறிஸ்தவ ஓட்டத்தின் இடையில், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஓட்டத்தின் கடினத்தை உணர்ந்து இது தங்களுக்கான ஓட்டமில்லை என்று ஓட்டத்தை நிறுத்திக்கொள்ள விழைகின்றனர். ஆனால் தேவன் நமக்குத் தேவையானதை கொடுப்பதால், நாம் விடாமுயற்சியுடன் ஓடிக்கொண்டேயிருக்க முடியும்.

மற்றவர்களின் தேவையை சந்தித்தல்
பிலிப்பின் தந்தை கடுமையான மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் வாழ்ந்தார். சிண்டியும் அவளது இளம் மகன் பிலிப்பும் அவரை ஒரு நாள் முழுவதும் தேடினர். பிலிப் அவரது நலனில் அக்கறை கொண்டிருந்தான். அவன் தனது அம்மாவிடம், தனது தந்தையையும் சேர்த்து, வீதியில் வசிக்கும் மக்கள் உஷ்ணமாய் இருக்கிறார்களா என்று கேட்டான். அந்த கேள்விக்கு பதிலாக, அப்பகுதியில் உள்ள வீடற்ற மக்களுக்கு போர்வைகள் மற்றும் குளிர் காலநிலை உபகரணங்களை சேகரித்து விநியோகிக்கும் முயற்சியை அவர்கள் தொடங்கினர். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, சிண்டி அதை தனது வாழ்க்கையின் முக்கிய வேலையாகக் கருதினாள். உறங்குவதற்கு ஒரு சூடான இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய அவளை தூண்டியதற்காக தனது மகனுக்கும், தேவன் மீதான அவளுடைய ஆழ்ந்த நம்பிக்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மற்றவர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய வேதாகமம் நீண்ட காலமாக நமக்குக் கற்பித்துக்கொண்டிருக்கிறது. யாத்திராகமம் புத்தகத்தில், போதுமான பொருளாதாரம் இல்லாதவர்களுடன் நமது தொடர்புகளை வழிநடத்துவதற்கான கொள்கைகளின் தொகுப்பை மோசே பதிவு செய்கிறார். மற்றவரின் தேவைகளை சந்திப்பதற்கு நாம் தூண்டப்பட்டால், நாம் “அதை ஒரு வணிக ஒப்பந்தம் போல் கருதக்கூடாது.” மேலும் அதில் எந்த ஆதாயமும் லாபத்தையும் நாம் எதிர்நோக்கக்கூடாது (யாத்திராகமம் 22:25). ஒரு நபரின் வஸ்திரத்தை அடைமானமாய் எடுத்துக் கொண்டால், அது சூரிய அஸ்தமனத்திற்குள் திருப்பித் தரப்பட வேண்டும். ஏனெனில் அந்த ஆடை மட்டுமே அவர்களிடம் இருக்கக்கூடிய சொத்து. அது இல்லாமல் அவர்கள் எவ்வாறு தூங்குவார்கள்? (வச. 27).
துன்பப்படுபவர்களின் வலியை நாம் எவ்வாறு குறைக்கலாம் என்பதைப் பார்க்க நம் கண்களையும் இதயங்களையும் திறக்கும்படி தேவனிடம் கேட்போம். சிண்டி மற்றும் பிலிப் போன்று பலரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்பினாலும் அல்லது ஒரு தனி நபரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்பினாலும், அவர்களை கண்ணியத்துடனும் அக்கறையுடனும் நடத்துவதன் மூலம் நாம் அவரை கனப்படுத்துகிறோம்.

தெய்வீக ஞானம் உயிர்களை இரட்சிக்கிறது
ஒரு தபால்காரர், தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு கொடுத்த தபால்கள் அந்த பெட்டியிலிருந்து எடுக்கப்படாமல் அதிலேயே நாளுக்கு நாள் தேங்கியிருப்பதைக் கண்டு சந்தேகப்பட்டார். அந்த வீட்டில் ஒரு வயதான பெண்மணி தனியாக வசித்து வருவது அவருக்கு தெரியும். அவரும் அனுதிமும் தபாலை சேகரித்துக்கொள்வார் என்பதை அறிந்திருந்த அந்த தபால்காரர், அந்தப் பெண்மணியின் அண்டை வீட்டாரில் ஒருவரிடம் அதைக் குறித்து விசாரித்தார். சந்தேகப்பட்ட அவர்கள் இருவரும், ஒரு உதிரி சாவியின் மூலம் அந்த பெண்மணியின் வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அவள் நான்கு நாட்களுக்கு முன்பு தரையில் மயங்கி விழுந்துகிடப்பதை கண்டறிந்தனர். அவளால் எழுந்திருக்கவோ உதவிக்கு அழைக்கவோ முடியவில்லை. தபால் ஊழியரின் ஞானமும், அக்கறையும், செயலூக்கமான செய்கையும் அவளுடைய உயிரைக் காப்பாற்றியது.
“ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்” (11:30) என்று நீதிமொழிகள் கூறுகின்றன. சரியானதைச் செய்வதன் மூலமும், கடவுளுடைய ஞானத்தின்படி வாழ்வதன் மூலமும் வரும் பகுத்தறிவு நம்மை மட்டுமல்ல, நாம் சந்திப்பவர்களையும் ஆசீர்வதிக்கும். அவரையும் அவருடைய வழிகளையும் கனப்படுத்துகிற கனிகொடுக்கிற வாழ்க்கையானது, நல்ல மற்றும் புத்துணர்ச்சியூட்டும் வாழ்க்கையாக அமையும். நம்முடைய கனிகள் மற்றவர்களை பராமரித்துக்கொள்ளவும், அவர்களின் வாழ்க்கையை பொருட்படுத்தவும் நம்மைத் தூண்டுகிறது.
நீதிமொழிகளின் எழுத்தாளர் புத்தகம் முழுவதும் வலியுறுத்துவது போல, கர்த்தரை சார்ந்திருப்பதிலேயே நம்முடைய ஞானம் வெளிப்படுகிறது. “முத்துக்களைப் பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல” (நீதிமொழிகள் 8:11). தேவன் தரும் ஞானம் நம் வாழ்நாள் முழுவதும் நம்மை வழிநடத்த போதுமானது. இது நித்தியத்திற்கு நேராய் ஆத்துமாக்களை வழிநடத்தக்கூடியது.

கிறிஸ்மஸ_க்கு அடுத்த நாள்
கிறிஸ்துமஸ் தினத்தின் மகிழ்ச்சிக்குப் பிறகு, அடுத்த நாள் கொஞ்சம் மந்தமாவதாக உணர்ந்தேன். நாங்கள் இரவு முழுவதும் நண்பர்களுடன் தங்கியிருந்தோம். ஆகையால் சரியாக தூங்கவில்லை. பின்னர் நாங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்லும் போது எங்கள் கார் பழுதடைந்தது. பின்னர் பனி பெய்யத் தொடங்கியது. நாங்கள் காரை அங்கேயே விட்டுவிட்டு, பனிமூட்டமான உணர்வில் டாக்ஸியில் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.
கிறிஸ்துமஸ் தினத்திற்குப் பிறகு மந்தமான உணர்வை பெற்றுக்கொண்டவர்கள் நாங்கள் மட்டுமல்ல. அளவுக்கு அதிகமாக உண்பதாலோ, வானொலியில் இருந்து பாடல்கள் திடீரென காணாமல் போனதாலோ, போன வாரம் வாங்கிய பரிசுப் பொருட்கள் பாதி விலையில் விற்பனையாகிவிட்டதாலோ, கிறிஸ்துமஸ் தினத்தின் மாயாஜால மகிழ்ச்சியானது விரைவில் கலைந்துவிடும்!
இயேசு பிறந்த நாளின் அடுத்த தினத்தைப் பற்றி வேதாகமம் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் பெத்லகேமுக்கு நடைபயணமாய் வந்து, தங்குமிடமில்லாமல் அலைந்து, பிள்ளைபேறு பெற்றெடுத்த பிரசவ வலியோடு மரியாள் இருக்க, கூடியிருந்த மேய்ப்பர்கள் சொல்லாமல் கலைந்து சென்றது (லூக்கா 2:4-18) போன்ற தொடர் சம்பவங்களினால் மரியாளும் யோசேப்பும் சோர்ந்துபோயிருந்திருக்கக்கூடும் என்று நாம் கற்பனை செய்து பார்க்கலாம். ஆயினும், மரியாள் தனது பிறந்த குழந்தையைத் தொட்டிலில் வைத்து, தேவ தூதன் அவளை சந்தித்த சம்பவம் (1:30-33), எலிசபத்தின் ஆசீர்வாதம் (வச. 42-45), மற்றும் அவளுடைய குழந்தையின் மகிமையான எதிர்காலம் என்று அவைகளைக் குறித்தே யோசித்துக்கொண்டிருக்கக்கூடும் என்று நான் கற்பனை செய்கிறேன். மரியாள் தன் இருதயத்தில் இதுபோன்ற விஷயங்களை “சிந்தனைபண்ணினாள்” (2:19) என்று வேதம் சொல்கிறது. அது அவளுடைய அன்றைய மனச்சோர்வையும் உடல் வலியையும் குறைத்திருக்க வேண்டும்.
ஒருவேளை நம்முடைய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் அடுத்த நாள், வெறுமனே கழிகிற நாளாய் இருக்கக்கூடும். ஆனால் அந்த நாட்களில் நாமும் மரியாளைப் போலவே, நம் உலகத்திற்கு வந்தவரைப் பற்றி சிந்திப்பதன் மூலம், அவருடைய பிரசன்னத்தால் நிறைவோம்.
