எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஷெரிடன் வாய்ஸிகட்டுரைகள்

இன்றைய வேதவாசிப்பு

நான் சமீபத்தில் கீரிஸில் இருக்கும் ஏதென்ஸ்க்கு சென்றிருந்தேன். அதில் தத்துவவாதிகள் கற்பித்த மற்றும் ஏதெனியர்கள் வழிபட்ட சந்தை வழியாய் நாங்கள் நடந்துசென்றபோது, அப்போலோ மற்றும் ஜீயஸ் தெய்வங்களுக்கென்று கட்டப்பட்டிருந்த பலிபீடங்களைக் கண்டேன். இவை அனைத்தும் ஒரு காலத்தில் அதீனா தெய்வத்தின் சிலை நிறுவப்பட்டிருந்த அக்ரோபோலிஸின் நிழலில் இருந்தன.

நாம் இன்று அப்போலோ அல்லது ஜீயஸ் போன்ற விக்கிரகங்களை வணங்காமல் இருக்கலாம். ஆனால் மக்களின் ஆன்மீக உணர்வுகள் இன்னும் குறையவில்லை. “எல்லோரும் ஆராதிக்கிறார்கள்” என்று நாவலாசிரியர் டேவிட் ஃபாஸ்டர் வாலஸ் கூறுகிறார். மேலும், “நீங்கள் பணத்தையும் பொருட்களையும் வணங்கினால்... அது உங்களுக்கு போதுமானதாக இருக்காது... உங்கள் உடலையும் அழகையும் வணங்குங்கள்... அது உங்களை அசிங்கமாக உணரச்செய்யும்... உங்கள் புத்தியை வணங்குங்கள்... நீங்கள் முட்டாள்தனமாய் உணருவீர்கள்” என்றும் சொல்லுகிறார். நம்முடைய காலகட்டத்தில் அநேக கடவுள்கள் உள்ளனர். அவர்கள் ஆபத்தற்றவர்கள் என்று சொல்லமுடியாது. 

பவுல் சந்தைவழியாய் கடந்துவந்தபோது, “அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்” (அப்போஸ்தலர் 17:22) என்று கூறுகிறார். ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதலின் மூலம் (வச. 31) மக்களுக்கு தன்னை அறியச்செய்யும் தேவன் (வச. 27) உலகத்தின் அனைத்தையும் உண்டாக்கிய சிருஷ்டிகர்த்தருமான (வச. 24-26) ஒரே தேவனைக் குறித்து பவுல் அவர்களுக்கு விவரிக்கிறார். அப்போலோ மற்றும் ஜீயஸ் போல இந்த கடவுள் மனித கைகளால் உருவாக்கப்படவில்லை. பணம், தோற்றம் அல்லது புத்திசாலித்தனம் நம்மை அழிப்பதுபோல அவரை ஆராதிப்பது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. 

நமக்கு நோக்கத்தையும் பாதுகாப்பையும் வழங்க நாம் எதை நம்பியிருக்கிறோமோ அதுவே நமது “கடவுள்.” அதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு பூமிக்குரிய கடவுளும் நம்மைத் தோல்வியடையச் செய்யும் போது, ஒரே உண்மையான தேவனை கண்டறிதல் சாத்தியம் (வச. 27).

ஸ்மார்ட்போன் இரக்கம்

உங்களுக்கு வாகனத்தில் உணவு கொண்டுவருபவர் தாமதமாக வந்தாரா? அவருக்கு ஒரு நட்சத்திர மதிப்பீட்டை வழங்க உங்களது மொபைலைப் பயன்படுத்தலாம். கடைக்காரர் உன்னிடம் குறும்பாக நடந்து கொண்டாரா? நீங்கள் அவளுக்கு ஒரு விமர்சன மதிப்பாய்வை எழுதலாம். ஸ்மார்ட்போன்கள், ஷாப்பிங் செய்ய, நண்பர்களுடன் பழக, மேலும் பலவற்றைச் செய்ய உதவும் அதே வேளையில், அவை ஒருவருக்கொருவர் மதிப்பிடும் சக்தியையும் கொடுக்கின்றது. மேலும் இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.

ஒருவரையொருவர் இவ்வாறு மதிப்பிடுவது சிலவேளைகளில் சிக்கலாகவும் இருக்கிறது. ஏனெனில் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் மதிப்பீடுகள் வழங்கப்படலாம். ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலை காரணமாக தாமதமாய் உணவுகொண்டுவந்ததற்காக மோசமாக மதிப்பிடப்படுகிறார். தன்னுடைய நோய்வாய்ப்பட்ட குழந்தையுடன் இரவு முழுவதும் விழித்திருந்ததினால் கடைக்கார பெண் எதிர்மறையான விமர்சனத்தைப் பெறுகிறார். மற்றவர்களை இப்படி அநியாயமாக மதிப்பிடுவதை எப்படி தவிர்க்கலாம்?

தேவனுடைய சுபாவத்தை தத்தெடுப்பதின் மூலம் இதைத் தவிர்க்கக்கூடும். யாத்திராகமம் 34:6-7 இல், தேவன் தன்னை “இரக்கமும், கிருபையும்” உள்ளவராக காண்பிக்கிறார். அதாவது சூழ்நிலை புரியாமல் நம்முடைய தோல்விகளை அவர் நியாயந்தீர்க்கமாட்டார். “நீடிய சாந்தம்” உள்ளவர் - அதாவது, ஒரு தவறு நிகழ்ந்த மாத்திரத்தில் அதை எதிர்மறையாய் மதிப்பிடமாட்டார். “மகா தயையும்” கொண்டவர் - அதாவது அவருடைய சிட்சைகள் நமது நன்மைக்காகவே, பழிவாங்குவதற்காக அல்ல. “பாவத்தையும் மன்னிக்கிறவர்” - அதாவது நமது வாழ்க்கையை நமது ஒரு நட்சத்திர அந்தஸ்தினால் வரையறுக்க வேண்டியதில்லை. தேவனுடைய குணாதிசயமே நம்முடைய அடிப்படையாக இருக்க வேண்டும் (மத்தேயு 6:33). கிறிஸ்துவின் சுபாவத்தை செயல்படுத்துவதின் மூலம் ஸ்மார்ட்ஃபோன்களின் கடுமையான தன்மையைத் தவிர்க்கலாம்.

ஆன்லைன் யுகத்தில், நாம் அனைவரும் மற்றவர்களை கடுமையாக மதிப்பிடலாம். இன்று ஒரு சிறிய இரக்கத்தைக் கொண்டுவர பரிசுத்த ஆவியானவர் நமக்கு கிருபையளிப்பாராக!

அந்நியர்களை உபசரித்தல்

ஆயிரக்கணக்கான உக்ரேனிய பெண்களும் குழந்தைகளும் போரிலிருந்து தப்பி பெர்லினின் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, அவர்கள் ஒரு ஆச்சரியத்தை எதிர்கொண்டனர். ஜெர்மன் குடும்பங்கள் அகதிகளுக்கு ஆதரவளிப்பதாக தங்கள் கைகளினால் எழுதப்பட்ட வாசகங்களை கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். “இரண்டு பேரை உபசரிக்க முடியம்” என்று ஒரு அடையாளம் வாசிக்கப்பட்டது. “பெரிய அறை இருக்கிறது” என்று இன்னொரு வாசகம் தென்பட்டது. அந்நியர்களுக்கு ஏன் இத்தகைய உபசரிப்பு வழங்குகிறீர்கள் என்று ஒரு பெண்ணை கேட்டதற்கு, அவள், நாசிசவாதிகளிடமிருந்து தப்பிச்செல்லும் போது தனது தாய்க்கு அடைக்கலம் தேவைப்பட்டதாகவும், அத்தகைய தேவையில் இருக்கும் மற்றவர்களுக்கு தான் உதவ விரும்புவதாகவும் அவள் கூறினாள். 

உபாகமத்தில், தேவன் வெகுதொலைவிலிருந்து வரும் அயலகத்தார்களை உபசரிக்கும்படிக்கு இஸ்ரவேலர்களுக்கு அறிவுறுத்துகிறார். ஏன்? ஏனென்றால் “அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்” (10:18). மேலும் அவர்களைப் பார்த்து, “எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக” (வச. 19) என்றும் அறிவுறுத்துகிறார். அவர்களை பட்சாதாபத்துடன் பராமரிக்கும்படிக்கு தூண்கிறார். 

ஆனால் அதற்கு மறுபக்கமும் இருக்கிறது. ஆபிரகாம் தன்னுடைய வீட்டிற்கு வந்த விருந்தினர்களை உபசரித்து ஆசீர்வதிக்கப்பட்டதுபோல (ஆதியாகமம் 18:1-5), சாரிபாத் விதவை எலியாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து உபசரித்து ஆசீர்வதிக்கப்பட்டாள் (1 இராஜாக்கள் 17:9-24). தேவன் விருந்தினர்களை ஆசீர்வதிப்பதற்காக அல்லாமல், அவர்களை உபசரிக்கிறவர்களை ஆசீர்வதிப்பதையே அதிகம் விரும்புகிறார். 

ஒரு புதிய நபரை உங்கள் வீட்டில் வைத்து உபசரிப்பது என்பது கடினமானது. ஆனால், அந்த ஜெர்மானிய குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நாமும் பெலவீனமானவர்கள் மீது அக்கறைகொள்ளும்போது, அவர்கள் மூலமாய் தேவன் நமக்கு அருளும் ஆசீர்வாதங்களுக்கு பாத்திரராக முடியும்.

எந்த ஞானம்?

2018, ஈஸ்டர் தினத்திற்கு சற்று முன்பு, தீவிரவாதி ஒருவன் மார்க்கெட் ஒன்றில் நுழைந்து அங்கிருந்த இருவரை சுட்டுக்கொன்று, ஒரு பெண்ணை பிணையக் கைதியாய் கொண்டுசென்றான். அந்த பெண்ணைக் காப்பாற்றும் காவலர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. ஆனால் அந்த பெண்ணுக்கு பதிலாக தன்னை பிடித்துக்கொண்டு அந்த பெண்ணை விடுவிக்குமாறு ஒரு காவல் அதிகாரி துணிச்சலாய் முன்வந்தார். 

அந்த வழக்கத்திற்கு மாறான துணிச்சல் அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. பிரபலமான நபர்கள் சொல்லும் வாழ்க்கைத் தத்துவங்களையே நீங்கள் கலாச்சார அடையாளமாய் பார்ப்பதுண்டு. அவற்றை ஊடகங்களிலும் அவ்வப்போது பதிவிட்டு, மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவதுண்டு. “நீங்கள் கனவுகண்ட வாழ்க்கையை வாழ்வதே மிக சுவாரஸ்யமான வாழ்க்கை” என்பது அப்படிப்பட்ட ஒரு பிரபல தத்துவம். “உன்னை முதலில் நீ நேசி, மற்றதெல்லாம் தானாய் உன்னிடத்தில் சேரும்” என்பதும் இன்னொரு தத்துவம். “உனக்காய் என்ன செய்யவேண்டுமோ, அதை செய்” என்பது மூன்றாவது தத்துவம். இந்த தத்துவங்களையெல்லாம் அந்த காவல் அதிகாரி கடைபிடித்திருந்திருப்பாராகில், முதலில் ஓடி ஒளிந்து தன்னுடைய உயிரை காப்பாற்ற முயற்சித்திருப்பார். 

இந்த உலகத்தில் இரண்டு வகையான ஞானம் இருப்பதாக அப்போஸ்தலர் யாக்கோபு குறிப்பிடுகிறார்: ஒன்று, பூமிக்குரிய ஞானம், மற்றது பரலோக ஞானம். முதலாவது ஞானம், சுயநலத்தினாலும் ஓழுங்கீனங்களினாலும் அடையாளப்படுத்தப்படுகிறது (யாக்கோபு 3:14-16); இரண்டாவது ஞானம், தாழ்மை, கீழ்ப்படிதல், சமாதானம் செய்தல் ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படுகிறது (வச. 13, 17-18). பூமிக்குரிய ஞானமானது சுயத்தை முன்னிலைப்படுத்துகிறது. ஆனால் பரலோக ஞானமானது, மற்றவர்களை முன்னிலைப்படுத்தி, தாழ்மையான கிரியைகளை நடப்பிக்க தூண்டுகிறது (வச. 13). 

காவல் அதிகாரி சொன்ன நிபந்தனையை அந்த தீவிரவாதி ஏற்றுக்கொண்டான். பிணையக்கைதியாயிருந்த பெண் விடுவிக்கப்பட்டாள். ஆனால் அந்த காவல் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த ஆண்டின் ஈஸ்டர் தினத்தன்று, யாரோ ஒருவருக்காய் தவறுசெய்யாத ஒரு மனிதன் உயிர்கொடுத்த சம்பவத்தை உலகம் சாட்சியிட்டது. 

பரலோகத்தின் ஞானமானது சுயத்தின் மீது தேவனை வைப்பதால், தாழ்மையான கிரியைகளை செய்ய நம்மை தூண்டுகிறது (நீதிமொழிகள் 9:10). நீங்கள் எந்த ஞானத்தை இன்று பின்பற்றுகிறீர்கள்?

கிறிஸ்துவுக்குள் வேற்றுமையில் ஒற்றுமை

வணிக ஆய்வாளர் ஃபிரான்சிஸ் எவன்ஸ் ஒருமுறை, 125 காப்பீட்டு விற்பனையாளர்களை ஆய்வு செய்து, அவர்களை வெற்றிகரமாக்கியது என்ன என்பதைக் கண்டறிந்தார். அவர்களின் திறமை காரணமாய் அமையவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது. மாறாக, வாடிக்கையாளர்கள் அரசியல், கல்வி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் தங்களோடு சரிநிகராய் இருப்பவர்களிடமே காப்பீடு எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அறிஞர்கள் இதை ஹோமோபிலி என்றழைக்கின்றனர். அதாவது, நம்மைப்போல் இருப்பவர்களை விரும்பும் போக்கு என்று அர்த்தம்.

நம்மைப் போன்ற சிந்தை கொண்டவர்களை விரும்பும்போக்கானது, திருமணம் மற்றும் சிநேகிதர்களை ஏற்படுத்திக்கொள்வது போன்ற செய்கைகளிலும் பிரதிபலிக்கிறது. ஆனால் அதுபோன்ற சிந்தை ஆபத்தானது. நம்மைப் போன்ற சிந்தை மற்றும் எண்ணம் கொண்டவர்களை நாம் தேர்ந்தெடுக்கும்போது, சமுதாயமானது இனம், அரசியல், பொருளாதாரம் என்று பல பிரிவுகளாய் பிரியக்கூடிய அபாயம் நேரிடுகிறது.

முதலாம் நூற்றாண்டில், யூதர்கள் யூதர்களோடும், கிரேக்கர்கள் கிரேக்கர்களோடுமே பழக்கம் வைத்திருந்தனர். பணக்காரனும் ஏழையும் சேருவதேயில்லை. ரோமர் 16:1-16இல் ரோமத் திருச்சபையில், ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் (யூதர்கள்), எப்பனெத் (கிரேக்கன்), பெபேயாள் (அநேகருக்கு உதவிசெய்தவள் என்பதினால் ஐசுவரியவாட்டியாய் இருந்திருக்கக்கூடும்), மற்றும் பிலொலோகு (பொதுவாக அடிமைகளுக்கு கொடுக்கப்படும் பெயர்) என்று பல பெயர்களை பவுல் பட்டியலிடுகிறார். இந்த வித்தியாசமான மக்களை ஒன்றிணைத்தது எது? “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை” (கலாத்தியர் 3:28) என்னும் இயேசுவே அவர்களை ஒன்றிணைக்கிறார்.

நம்மைப் போன்ற சுபாவம் கொண்டவர்களோடு வாழ்வதும், திருச்சபைக்கு செல்வதும் இயல்பானது. ஆனால் இயேசு அதைக் கடந்துசெல்வதற்கு நம்மை உந்துகிறார். பல பிரிவுகளினாலே பிளவுபட்டிருக்கும் உலகத்தில், வித்தியாசமான மனிதர்களை ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களாய் கூட்டிச் சேர்க்கிறார்.

கீழ்த்தளத்தில்

எனது நண்பர் ஒருவர், ஆப்பிரிக்காவின் மெர்சி என்ற மருத்துவமனைக் கப்பலில் பணிபுரிகிறார். இம்மருத்துவமனை வளரும் நாடுகளுக்கு இலவச சுகாதார சேவையை எடுத்துச் செல்கிறது. அங்கே பணிபுரிபவர்கள் தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சேவை செய்கிறார்கள். இல்லையெனில், அவர்களின் நோய்கள் சிகிச்சை அளிக்கப்படாமல் போய்விடும்.

 

அவ்வப்போது கப்பலில் ஏறும் தொலைக்காட்சிக் குழுவினர், அங்கே அற்புதமாக பணி புரியும் மருத்துவப் பணியாளர்களின் சேவைகளை படமெடுப்பர். சில நேரங்களில், அவர்கள் அங்கே உள்ள மற்ற குழு உறுப்பினர்களை நேர்காணல் செய்ய, தளத்தின் கீழே செல்வார்கள். அங்கே மிக் என்பவர் செய்யும் வேலை பொதுவாக கவனிக்கப்படாமல் இருந்தது.

 

மிக், ஒரு பொறியாளர், கப்பலின் கழிவுநீர் ஆலையில் வேலை செய்ய நியமிக்கப்பட்ட பொறுப்பை, முதலில் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் நாற்பதாயிரம் லிட்டர் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதால், இந்த நச்சுப் பொருளை நிர்வகிப்பது கடினமான பணியாகும். மிக் அதன் குழாய்கள் மற்றும் பம்புகளை பராமரிக்காவிட்டால், ஆப்பிரிக்காவின் மெர்சி மருத்துவமனையின் உயிர் கொடுக்கும் செயல்பாடுகள் நின்றுவிடும்.

 

கிறிஸ்தவ ஊழியத்தின் "மேல் தளத்தில்" இருப்பவர்களைப் பாராட்டுவது எளிது, அதே சமயம் கீழே உள்ள தாழ்வான இடங்களில் இருப்பவர்களைக் கண்டும் காணாதது போல் இருக்கிறோம். கொரிந்தியர்கள், அசாதாரணமான வரங்களைக் கொண்டவர்களை பிறரைக்காட்டிலும் உயர்த்தியபோது, கிறிஸ்துவின் வேலையில் அனைத்து விசுவாசிகளுக்கும் பங்குண்டென்று பவுல் அவர்களுக்கு நினைவூட்டினார் (1 கொரிந்தியர் 12:7-20). அற்புத சுகமளிப்பதோ, பிறருக்கு உதவுவதோ, ஒவ்வொரு வரமும் முக்கியமானது (வ.27–31). உண்மையில், குறைவான முக்கியத்துவம் என்று நாம் எண்ணும் பணியே அதிக மரியாதைக்குரியது (வ. 22-24).

 

நீங்கள் ஒரு "கீழ்த்தளத்தில்" உள்ள நபரா? உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.உங்கள் பணி தேவனால் மதிக்கப்படுகிறது மற்றும் அனைவருக்கும் இன்றியமையாதது.

தனிமைப்படுத்தப்பட்டவர்களின் நம்பிக்கை

ஜூன் 1965 இல், ஆறு டோங்கன் இன இளைஞர்கள் சாகசத்தைத் தேடி தங்கள் தீவிலிருந்து படகில் சென்றனர். ஆனால் முதல் இரவில் ஒரு புயல் அவர்களின் பாய் மரம் மற்றும் சுக்கானை உடைத்தபோது, ​​அவர்கள் தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மக்கள் வசிக்காத ‘அட்டா’ தீவை அடைவதற்கு முன்பு உணவு, தண்ணீரின்றி பல நாட்கள் அலைந்து திரிந்தனர். அவர்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு பதினைந்து மாதங்கள் ஆனது.

 

சிறுவர்கள் இணைந்து அட்டா தீவில் உயிர் பிழைக்க, சிறிய உணவுத் தோட்டம் அமைப்பது, மழைநீரைச் சேமிக்க மரத்தடிகளை குழிபறிப்பது, தற்காலிக உடற்பயிற்சி கூடம் கட்டுவது போன்றவற்றில் இணைந்து பணியாற்றினார்கள். ஒரு சிறுவன் பாறை விழுந்ததில் கால் முறிந்தபோது, மற்றவர்கள் குச்சிகள் மற்றும் இலைகளைப் பயன்படுத்தி அதை குணப்படுத்த உதவினர். வாக்குவாதங்கள் கட்டாய சமரசத்துடன் ஒப்புரவாக்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு நாளும் பாடல் மற்றும் ஜெபத்துடன் துவங்கியது. அவர்கள் மரித்துவிட்டதாக எண்ணி இறுதிச் சடங்குகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்திருந்ததால், அவர்கள் ஆரோக்கியமாக வெளிவந்ததை எண்ணி அவர்களது குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டனர்.

 

முதல் நூற்றாண்டில் இயேசுவின் விசுவாசியாக இருப்பது ஒரு தனிமைப்படுத்தப்படும் அனுபவமாக இருக்கலாம். உங்கள் நம்பிக்கைக்காக துன்புறுத்தப்பட்டு, அடிக்கடி குடும்பத்தில் இருந்து விலகியிருப்பதால், நீங்கள் அலைந்து கொண்டிருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு ஒழுக்கத்துடனும், ஜெபத்துடனும் இருக்க வேண்டும் (1 பேதுரு 4:7), ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ள வேண்டும் (வ. 8), வேலையைச் செய்ய திறமைகளைப் பயன்படுத்த வேண்டும் (வவ.10-11) எனக் குறிப்பிடுகிறார் . காலப்போக்கில், தேவன் அவர்களை அவர்களின் சோதனையின் மூலம் "சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவார்” (5:10)

 

சோதனைக் காலங்களில், "விசுவாசம் மற்றும் நம்பிக்கை" நமக்கு தேவை. நாம் ஜெபித்து ஒற்றுமையுடன் வேலை செய்யும் போது, தேவன் நம்மையும் நிலைநிறுத்துவார்.

கோ-கார்ட் வாகனத்தை சரிசெய்தல்

எனது சிறுவயதில் நான் தங்கியிருந்த வீட்டின் கேரேஜ் பல நினைவுகளை எனக்கு வைத்திருக்கிறது. சனிக்கிழமைகளில் காலை நேரத்தில், என்னுடைய தந்தை காரில் எங்களை கேரேஜிக்கு அழைத்துச் செல்வார். அங்கே உடைந்துபோன கோ-கார்ட் எனப்படும் ஒரு சிறிய ரக பந்தய கார் தென்பட்டது. அதை பழுதுபார்த்து புதுப்பிக்க எண்ணினோம். அதற்கு புதிய சக்கரங்கள், பிளாஸ்டிக் கண்ணாடி என்று அதை புதுப்பித்து, நான் அதை பந்தய சாலையில் ஓட்ட முயற்சிக்கும்போது எனது தகப்பனார் வேறு ஏதாகிலும் வாகனம் அப்பக்கம் வருகிறதா என்று பார்த்துக்கொள்வார். இந்த சிறிய ரக வாகனத்தை ஓட்டுவதைக்காட்டிலும் பெரிய காரியங்களை அந்த கேரேஜில் நான் அனுபவித்தேன். ஆம்! ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு தேவனை ருசித்துப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். 

தேவனுடைய மெய்யான சுபாவத்துடன் மனிதன் வடிவமைக்கப்பட்டிருக்கிறான் (ஆதியாகமம் 1:27-28). அவர் “பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய” தகப்பனாய் வீற்றிருக்கிறார் (எபேசியர் 3:14-15). பிள்ளைகளுக்கு ஜீவனைக் கொடுத்து இந்த உலகத்திற்கு கொண்டு வருவதன் மூலம் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் பெற்றோர்கள், அவர்களை வளர்க்கும்போது அவர்களுக்குள் இருக்கும் சுபாவத்தினால் அல்லாமல், பிதாவாகிய தேவனுடைய தன்மையை வெளிப்படுத்துகிறார்கள். அனைத்து பெற்றோர்களும் பின்பற்றுவதற்கு உகந்த மாதிரியாய் தேவன் திகழ்கிறார். 

என்னுடைய தகப்பன் எல்லாவிதத்திலும் நேர்த்தியானவர் இல்லை. ஒவ்வொரு தகப்பன் தாயைப் போல அவரும் சிலவேளைகளில் பரலோகத்தை பிரதிபலிக்க தவறலாம். ஆனால் அந்த கேரேஜில் இருந்த அந்த கோ-கார்ட் பந்தய காரை சரிசெய்வதில் அவருடைய பராமரிப்பையும் பாதுகாப்பையும் பார்த்தபோது, தேவனுடைய குணாதிசயங்களை என்னால் நினைவுகூர முடிந்தது. 

காலங்கள்

நான் சமீபத்தில் ஒரு பயனுள்ள வார்த்தையைக் கண்டறிந்தேன்: “குளிர்காலம்.” இயற்கை உலகின் பெரும்பகுதியை இந்த குளிர்காலம் அமைதிப்படுத்துவது போல, வாழ்க்கையின் “குளிர்” பருவங்களில் ஓய்வெடுக்கவும், குணமடையவும் வேண்டியதன் அவசியத்தை விவரிக்க, எழுத்தாளர் கேத்தரின் மே இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் தந்தையை நான் இழந்த பிறகு இந்த ஒப்புமை எனக்கு உதவியாயிருந்தது. இது எனது ஆற்றலை பல மாதங்கள் புதுப்பித்தது. இந்த குளிரானது வலுக்கட்டாயமாய் என் வேகத்தைக் குறைத்ததால் கோபமடைந்த நான், எனது குளிர்காலத்தை எதிர்த்துப் போராடினேன். கோடைக்கால வாழ்க்கை திரும்ப வேண்டும் என்று ஜெபித்தேன். ஆனால் நான் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருந்தது.

பிரசங்கி, “வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” என்று சொல்லுகிறார் (3:1-4). நடவும் நட்டதை பிடுங்கவும், அழவும் நகைக்கவும், புலம்பவும் நடனம் பண்ணவும் ஒவ்வொரு காலமுண்டு. இந்த வேதவாக்கியத்தை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். ஆனால் குளிர்காலத்தில் தான் அதின் அர்த்தம் எனக்கு விளங்கியது. அவர்கள் மீது நமக்குக் கட்டுப்பாடு இல்லை என்றாலும், ஒவ்வொரு பருவமும் வரையறுக்கப்பட்டதாக இருக்கும், அதன் வேலை முடிந்ததும் கடந்து போகும். அது என்னவென்று நம்மால் எப்பொழுதும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், தேவன் அவைகள் மூலமாக நம்மில் கிரியை செய்கிறார் (வச. 11). என் துக்கநாட்கள் இன்னும் முடியவில்லை. அது முடியும்போது நான் நடனம்பண்ணும் காலம் வரும். தாவரங்களும் விலங்குகளும் குளிர்காலத்தை எதிர்த்துப் போராடாதது போல, நானும் அதை எதிர்த்துபோராட வேண்டியதில்லை. அது அதனுடைய வேலையை செய்வதற்கு அதை முழுமையாய் அனுமதிக்கவேண்டும். 

ஒரு சிநேகிதன், “கர்த்தாவே, உம்முடைய நற்கிரியைகளை இந்த காலத்தில் ஷெரிடனுக்குள் செய்வீர்களா?” என்று சொல்லி எனக்காக ஜெபித்தான். அது என்னுடைய ஜெபத்தைக் காட்டிலும் சிறந்த ஜெபம். தேவனுடைய கரத்தில் காலங்கள் ஒரு நோக்கத்தோடு அனுமதிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றிலும் அவருடைய புதுப்பிக்கும் கிரியைகளை காண நம்மை அர்ப்பணிப்போம்.