அன்பின் அடுத்த படி
தன் போட்டியாளருக்கு யாராவது உதவ என்ன காரணம்? விஸ்கான்சினில் உள்ள அடோல்போ என்ற உணவக உரிமையாளருக்கு, கோவிட் விதிமுறைகளுக்கு ஏற்ப போராடும் மற்ற உள்ளூர் உணவக உரிமையாளர்களை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இது அமைந்தது. ஒரு தொற்றுநோய் சமயத்தில் வணிகம் செய்வதில் உள்ள சவால்களை அடோல்போ நன்கு அறிந்திருந்தார். மற்றொரு உள்ளூர் வணிகரின் பெருந்தன்மையால் ஊக்கமடைந்த அடோல்போ, தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து, இரண்டாயிரம் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள கூப்பன்களை வாங்கினார். அவற்றை தனது வாடிக்கையாளர்களுக்கு, அவரருகே உள்ள மற்ற உணவகங்களில் பயன்படுத்துவதற்காகக் கொடுத்தார். இது அன்பின் வெளிப்பாடாகும், வெறும் வார்த்தைகள் அல்ல கிரியைகள்.
மனிதகுலத்திற்காக தனது வாழ்க்கையை தானே முன்வந்து அர்ப்பணித்த இயேசுவின் வெளிப்படுத்தப்பட்ட அன்பின் மீது (1 யோவான் 3:16) கட்டும்படிக்கு, யோவான் தனது வாசகர்களை அடுத்த படியெடுத்து அன்பை செயல்படுதிட ஊக்கப்படுத்தினார். யோவானை பொறுத்தவரை, " நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்" (வ. 16) என்பது இயேசுவால் எடுத்துக்காட்டப்பட்ட அதே வகையான அன்பை வெளிப்படுத்துவதாகும்; மேலும் இது பெரும்பாலும் அன்றாட, நடைமுறைச் செயல்களின் வடிவத்தை எடுக்கும், அதாவது பொருள் உடைமைகளைப் பகிர்ந்து கொள்வது போன்றது. வார்த்தைகளால் நேசித்தால் போதாது; அன்புக்கு நேர்மையான, அர்த்தமுள்ள செயல்கள் தேவை (வ.18).
அன்பை செயலில் காட்டுவது கடினமாக இருக்கலாம், ஏனென்றால் அதற்கு பெரும்பாலும் தனிப்பட்ட தியாகமும் அல்லது மற்றொரு நபருக்காக நம்மை நாமே விட்டுக்கொடுப்பதும் வேண்டும். தேவனின் ஆவியால் பலப்பட்டு, நம்மீது அவர் வைத்திருக்கும் அளவில்லா அன்பை நினைத்து, அன்பின் அடுத்த படியை நாம் எடுக்க முடியும்.
தேவன் நமது அடைக்கலம்
2019 ஆம் ஆண்டின் வியத்தகு திரைப்படமான 'லிட்டில் வுமன்', என்னிடமிருந்த அதின் மூல நாவலின் பழையதாகிப்போன பிரதியை படிக்க உந்தியது. குறிப்பாக, விவேகமும் மென்மையும் படைத்த தாயார் மர்மியின் ஆறுதல் வார்த்தைகளை. அந்த நாவல் சித்தரித்த அவளுடைய உறுதியான நம்பிக்கையால் நான் ஈர்க்கப்பட்டேன், இது அவளுடைய மகள்களுக்கு ஊக்கமளிக்கும் பல வார்த்தைகளில் அடிக்கோடிட்டுக் காட்டபட்டுள்ளது. எனக்குப் பிரத்யேகமாகத் தெரிந்தது இதுதான்: “சிக்கல்கள் மற்றும் சோதனைகள் . . . பல இருக்கலாம், ஆனால் உங்கள் பரலோகத் தகப்பனின் பலத்தையும் மென்மையையும் நீங்கள் உணரக் கற்றுக்கொண்டால், அவற்றையெல்லாம் வென்று வாழலாம்."
மர்மியின் வார்த்தைகள் நீதிமொழிகளில் காணப்படும் சத்தியத்தை எதிரொலிக்கின்றன, “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” (18:10). எதிரிகளின் தாக்குதல் போன்ற காரணமாக, ஆபத்தின் போது பாதுகாப்பு இடங்களாக பழங்கால நகரங்களில் துருகங்கள் கட்டப்பட்டன. அதுபோலவே, தேவனிடம் ஓடுவதன் மூலமே, இயேசுவை நம்புபவர்கள், “நமக்கு அடைக்கலமும் பெலனுமாக" (சங்கீதம் 46:1) உள்ளவரின் பராமரிப்பில் சமாதானத்தை அனுபவிக்க முடியும்.
நீதிமொழிகள் 18:10, பாதுகாப்பு என்பது தேவனின் " நாமத்தில்" இருந்து வருகிறது என்று சொல்கிறது. அவர் நாமமானது அவர் யார் என்ற அனைத்தையும் குறிக்கிறது. வேதவசனம் தேவனை, "இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்" (யாத்திராகமம் 34:6) என்கிறது. தேவனின் பாதுகாப்பு அவரது வல்லமையான பலத்திலிருந்து வருகிறது, அதே போல் அவரது மென்மையும் அன்பும் காயப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க அவரை ஏக்கமுற செய்கிறது. போராடும் அனைவருக்கும், நம்முடைய பரலோகத் தகப்பன் தம்முடைய பலத்திலும் மென்மையிலும் அடைக்கலம் அருள்கிறார்.
தேவனின் உண்மைத்தன்மையை கண்டுள்ளேன்
பிரிட்டனின் ஆட்சியாளராக இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 70 ஆண்டுகள் ஆட்சியின் போது எழுதப்பட்ட "தி சர்வன்ட் குயின் அண்ட் தி கிங் ஷீ சர்வ்ஸ்" என்ற தன் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை அங்கீகரித்து அதற்குத் தனிப்பட்ட முன்னுரையை எழுதினார். இந்த புத்தகம் அவரது தொண்ணூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் போது வெளியிடப்பட்டது. தனது நாட்டிற்குச் சேவை செய்தபோது அவரது விசுவாசம் அவரை எவ்வாறு வழிநடத்தியது என்பதை இது விவரிக்கிறது. முன்னுரையில், ராணி எலிசபெத் தனக்காக ஜெபித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார் மேலும் தேவனின் மாறாத அன்புக்கு நன்றி தெரிவித்தார். "நிச்சயமாகவே அவரது நம்பகத்தன்மையைக் கண்டேன்" என்று நிறைவுசெய்தார்.
வரலாற்றில் ஆண்களும் பெண்களும் அனுபவித்த தேவனின் தனிப்பட்ட, உண்மையான கரிசனையைத்தான் எலிசபெத் மகாராணியின் எளிமையான கூற்று பிரதிபலிக்கிறது.இந்த கருப்பொருள்தான் தாவீது ராஜா தனது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும்படி எழுதிய ஒரு அழகான பாடலின் அடிப்படை. 2 சாமுவேல் 22-ல் இந்தப் பாடல், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே. ஸ்துதிக்குப் பத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன் (வ.3-4, 44). என்று தேவன் உண்மையுள்ளவராக இருந்ததை விவரிக்கிறது. தனது இந்த அனுபவத்திற்கு பிரதியுத்தரமாக, "இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்" (வ.50) என எழுதியுள்ளார்.
நீண்ட ஆயுளில் தேவனின் உண்மைத்தன்மையைக் காணுவது கூடுதல் அழகாக இருந்தாலும், நம் வாழ்வில் அவருடைய அக்கறையை விவரிக்க நாம் காத்திருக்க வேண்டியதில்லை. வாழ்க்கையில் நம்மைச் சுமந்து செல்வது நம்முடைய சொந்த திறன்கள் அல்ல, ஆனால் அன்பான தந்தையின் உண்மையுள்ள கவனிப்பு என்பதை நாம் அங்கீகரிக்கும்போது, நன்றி செலுத்தவும் துதிக்கவும் நாம் உந்தப்படுகிறோம்.
புத்துணர்ச்சியூட்டும் வார்த்தைகள்
சமையலறையில் நின்றுகொண்டிருந்த என் மகள், “அம்மா, தேனில் ஒரு ஈ இருக்கிறது!” என்றாள். “வினிகரை விட தேனில் எப்பொழுதும் அதிக ஈக்களை நீ கண்டெடுப்பாய்” என்ற வழக்கமான பழமொழியைச் சொல்லி நான் அவளை கேலி செய்தேன். நான் தேனில் ஒரு ஈயை காண்பது இதுவே முதல்முறை என்றாலும், ஞானத்தைக் கற்றுத்தரும் நோக்கத்தோடு இந்த பழமொழியை மேற்கோள் காண்பித்தேன். அதின் நியதி என்னவென்றால், கசப்பான அணுகுமுறையை விட அன்பான கோரிக்கைகள் மற்றவர்களை எளிமையாய் வசப்படச் செய்யும்.
நீதிமொழிகள் புத்தகம் தேவனுடைய ஆவியால் ஈர்க்கப்பட்ட ஞானமான பழமொழிகள் மற்றும் சொற்களின் தொகுப்பை நமக்கு வழங்குகிறது. இந்த வெளிப்படுத்தப்பட்ட வசனங்கள் நம்மை வழிநடத்தவும், தேவனை கனப்படுத்தும் விதங்களில் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றிய முக்கியமான உண்மைகளை கற்பிக்கவும் உதவுகின்றன. பல பழமொழிகள், நமது வார்த்தைகள் மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தை உள்ளடக்கி, ஒருவரோடு ஒருவருக்கு இருக்கவேண்டிய உறவுகளில் அதிக கவனம் செலுத்துகின்றன.
சாலெமோன் ராஜாவின் பழமொழி தொகுப்பின் ஒரு பகுதியில், அண்டை வீட்டாருக்கு எதிராகப் பொய்யாகப் பேசுவதால் ஏற்படும் தீமைக்கு எதிராக அவர் எச்சரிப்பை பதிவுசெய்கிறார் (நீதிமொழிகள் 25:18). “புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்” (வச. 23) என்று ஆலோசனை கூறுகிறார். தொடர்ந்த சண்டையிட்டுக்கொண்டேயிருப்பதினால் ஏற்படும் விளைவுகளையும் சாலெமோன் தொடர்ந்து பதிவிடுகிறார் (வச. 24). நன்மையை அறிவிக்கும் நம்முடைய வார்த்தைகள் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரக்கூடியது என்று ராஜா வலியுறுத்துகிறார் (வச. 25).
இந்த சத்தியங்களைப் பிரயோகிக்க நாம் முற்படுகையில், நம்முடைய நாவிலிருந்து “திவ்ய வாக்கு” பிறக்கக்கூடும் (16:10). அவரிடத்திலிருந்து ஊக்கத்தைப் பெறும்போது, நமது வார்த்தைகள் இனிமையாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
நன்றிசெலுத்தும் ஆசீர்வாதம்
2016 ஆம் ஆண்டில், வாண்டா டென்ச் தனது பேரனை நன்றி தெரிவிக்கும் விருந்துக்கு அழைப்பதாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். ஆனால் அவருடைய பேரன் தன்னுடைய தொலைபேசி என்னை சமீபத்தில் மாற்றியதை அவர் அறியவில்லை. அதற்குப் பதிலாக ஜமால் என்ற வேறொரு நபருக்கு அந்த குறுஞ்செய்தி போய்விட்டது. ஜமால் தான் யார் என்பதை தெளிவுபடுத்திய பிறகும், நான் இரவு உணவிற்கு உங்களோடு சேர்ந்துகொள்ளலாமா என்று கேட்டார். “நிச்சயமாக” என்று வாண்டா அவரை வரவேற்றார். ஜமால் குடும்ப விருந்தில் சேர்ந்தார். அது அவருக்கு வருட பாரம்பரியமாகிவிட்டது. ஒரு தவறான அழைப்பு, வருடாந்திர ஆசீர்வாதமாக மாறியது.
முகமறியாத புதிய நபரை இரவு உணவிற்கு அழைத்த வாண்டாவின் கருணை, லூக்காவின் நற்செய்தியில் இயேசுவின் ஊக்கத்தை எனக்கு நினைவூட்டுகிறது. ஒரு பிரபலமான பரிசேயரின் வீட்டில் இரவு விருந்தின் போது (லூக்கா 14:1), அழைக்கப்பட்டவர்கள் யார் என்பதையும் அவர்கள் தங்களுக்கான இருக்கைக்காய் எவ்விதம் போராடினார்கள் என்பதையும் இயேசு பார்த்தார் (வச. 7). விருந்துபண்ணுகிறவனிடம், மற்றவர்கள் பதிலுக்கு என்ன செய்வார்கள் என்று எதிர்பார்த்து அவர்களை விருந்துக்கு அழைத்தால் ஆசீர்வாதம் குறைவாய் இருக்கும் என்கிறார் (வச. 12). ஆனால் ஏழைகளையும் இயலாதவர்களையும் அழைப்பித்து அவர்களுக்கு விருந்துபண்ணினால், மேன்மையான ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கக்கூடும் (வச. 14) என்று சொல்லுகிறார்.
வாண்டாவைப் பொறுத்தவரை, நன்றி தெரிவிக்கும் இரவு உணவிற்கு ஜமாலை தனது குடும்பத்துடன் சேர அழைத்ததன் விளைவாக நீடித்த நட்பின் எதிர்பாராத ஆசீர்வாதம் அவரது கணவரின் மரணத்திற்குப் பிறகு அவருக்கு பெரும் ஊக்கமாக இருந்தது. நாம் மற்றவர்களை அணுகும்போது, நாம் எதைப் பெறலாம் என்னும் நோக்கத்தோடு அல்லாமல், கிறிஸ்துவின் அன்பு நம்மூலமாய் வழிந்தோடுவதால், நாம் அதிக ஆசீர்வாதத்தையும் ஊக்கத்தையும் பெறுகிறோம்.
பொன்னைக் காட்டிலும் விலையேறப்பெற்ற
நீங்கள் எப்போதாவது ஒரு கண்காட்சி விற்பனையில் குறைந்த விலை பொருட்களை வாங்கி, அது நம்பமுடியாத விலைமதிப்புள்ள ஒன்றாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டா? கனெக்டிகட்டில் நடந்த ஒரு மலர் வடிவம்கொண்ட சீன பழங்கால கிண்ணம் வெறும் 35 டாலருக்கு (சுமார் 2800 ரூபாய்) வாங்கப்பட்டது. அதே கிண்ணம், 2021 ஏலத்தில் 700,000 டாலருக்கு (கிட்டத்தட்ட 6 கோடி இந்திய ரூபாய்) விற்கப்பட்டது. இந்த கிண்ணம் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து ஒரு அரிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருளாக மாறியது. சிலர் சிறிய மதிப்புடையதாகக் கருதுவது உண்மையில் பெரிய மதிப்பைக் கொண்டிருக்கும் என்பதற்கு இது ஒரு அற்புதமான உதாரணம்.
உலகம் முழுவதும் பரவியுள்ள விசுவாசிகளுக்கு எழுதும்போது, பேதுரு இயேசுவின் மீதான அவர்களின் நம்பிக்கை எல்லா கலாச்சாரத்தினராலும் நிராகரிக்கப்பட்ட ஒருவர் மீதான நம்பிக்கை என்று விளக்குகிறார். பெரும்பாலான யூத மதத் தலைவர்களால் வெறுக்கப்பட்டு, ரோமானிய அரசாங்கத்தால் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து அவர்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றாததால், பலரால் பிரயோஜனமற்றவராகக் கருதப்பட்டார். ஆனால் மற்றவர்கள் இயேசுவின் மதிப்பை நிராகரித்த போதிலும், அவர் “தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய” (1 பேதுரு 2:4) மதிப்பு மிக்கவராய் திகழ்ந்தார். நமக்கான அவரது மதிப்பு வெள்ளி அல்லது தங்கத்தை விட விலையேறப்பெற்றது (1:18-19). மேலும், இயேசுவை நம்புவதற்குத் தேர்ந்தெடுக்கும் எவரும் தங்கள் விருப்பத்தைப் பற்றி ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள் என்ற உறுதி நமக்கு இருக்கிறது (2:6).
மற்றவர்கள் இயேசுவை மதிப்பற்றவர் என்று நிராகரிக்கும்போது, நாம் வேறுவிதத்தில் பார்ப்போம். கர்த்தருடைய ஆவியானவர் கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற பரிசைக் காண நமக்கு உதவுவார். அவர் தேவ குடும்பத்தின் ஒரு அங்கத்தினராய் மாறுவதற்கான விலைமதிப்பற்ற அழைப்பை எல்லாருக்கும் கொடுக்கிறார் (வச. 10).
நொருங்குண்டவர்களின் நம்பிக்கை
“மற்றவர்களால் பார்க்கமுடியாத வகையில் பெரும்பாலானோர் தழும்புகளை உடையவர்களாயிருப்பர்.” இந்த ஆழமான வார்த்தைகள் மேஜர் லீக் பேஸ்பால் வீரர் ஆண்ட்ரெல்டன் சிம்மன்ஸிடமிருந்து வந்தது. அவர் மனநலப் போராட்டங்கள் காரணமாக 2020 சீசன் விளையாட்டின் இறுதியாட்டத்திலிருந்து விலகினார். சிம்மன்ஸ் தனது முடிவைப் பிரதிபலிக்கும் வகையில், இதேபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் மற்றவர்களை ஊக்குவிக்கவும், இரக்கம் காட்ட மற்றவர்களுக்கு நினைவூட்டவும் தனது கதையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.
கண்ணிற்கு புலப்படாத தழும்புகள் என்பது வெளிப்படையாய் தெரியாவிட்டாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சங்கீதம் 6 இல், தாவீது தனது சொந்த ஆழமான போராட்டத்தைப் பற்றி வேதனையான மற்றும் நேர்மையான வார்த்தைகளை எழுதுகிறார். அவர் பெலனற்றுப்போய் (வச. 2) மிகுந்த வியாகுலத்தில் (வச. 3) இருந்தார். அவர் பெருமூச்சினால் இளைத்து, கண்ணீரினால் படுக்கையை நனைத்தார் (வச. 6). தாவீது தனது வியாகுலத்திற்கான காரணத்தை பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், நம்மில் பலர் அவருடைய வேதனையை உணரக்கூடும்.
தாவீது தன்னுடைய வேதனையை எவ்வாறு மேற்கொண்டார் என்பதை நாம் அறிந்து ஊக்கம்பெறக்கூடும். அவருடைய அதிகமான வியாகுலத்தில் அவர் தேவனை நோக்கிக் கதறுகிறார். அவருடைய இருதயத்தை நேர்மையாக ஊற்றி, சுகத்திற்காகவும் (வச. 2), மீட்பிற்காகவும் (வச. 4), இரக்கத்திற்காகவும் (வச. 9) விண்ணப்பிக்கிறார். “எதுவரைக்கும்?” (வச. 3) என்னும் கேள்வியை கேட்டு தன்னுடைய பாடுகளின் வீரியத்தை தாவீது வெளிப்படுத்தினாலும், “கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்” (வச. 8) என்றும் நிச்சயமாய் தன்னுடைய “பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்” (வச. 10) என்றும் உறுதியுடன் இருக்கிறார்.
நம்முடைய தேவன் யார் என்று அறிவதில் நம்முடைய நம்பிக்கை உதயமாகிறது.
தேவனை அறிதல்
நான் அயர்லாந்திற்குச் சென்றபோது, மூன்று இலைகள் கொண்ட ஏராளமான அலங்கார ஷாம்ராக்ஸைக் கண்டு வியந்தேன். அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆடைகள், தொப்பிகள், நகைகள் என்று எல்லாவற்றிலும் இந்த சிறிய பச்சை இலைகளின் வடிவங்கள் தென்பட்டது.
அயர்லாந்து முழுவதும் பிரபலமாயிருக்கும் ஒரு தாவரம் என்பதைக் காட்டிலும், இந்த ஷாம்ராக்ஸ_கள் பல தலைமுறைகளுக்கு திரித்துவத்தை பிரதிபலிக்கும் எளிமையான வழிமுறையாக இருந்துள்ளது. திரித்துவம் என்பது ஒரே கர்த்தர்த்துவத்துக்குள் இருக்கும் மூன்று நபர்களை பிரதிபலிக்கிறது: பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர். திரித்துவத்தை விளக்கும் அனைத்து மனித முயற்சிகளும் போதுமானதாக இல்லாதபட்சத்தில், மூன்று இலைகளால் ஆன இந்த தாவரத்தை வைத்து அதை புரிந்துகொள்ளும் முயற்சி பயனுள்ளதாய் இருக்கிறது.
திரித்துவம் என்னும் வார்த்தை வேதாகமத்தில் இடம்பெறவில்லை. ஆனால் திரித்துவத்தின் மூன்று நபர்களும் ஒருசேர இடம்பெறும் ஒரே சம்பவம் வேதாகமத்தில் இருக்கிறது. தேவ குமாரனாகிய இயேசு ஞானஸ்நானம் எடுக்கும் வேளையில், பரிசுத்த ஆவியானவர் வானத்திலிருந்து புறாவைப்போல இறங்கிவர, பரலோகத்திலிருக்கிற பிதாவாகிய தேவன் “நீர் என்னுடைய நேசக்குமாரன்” (மாற்கு 1:11) என்று சத்தமிடுவதைப் பார்க்கமுடியும்.
அயர்லாந்து மக்கள் தேவனைக் குறித்து மற்றவர்களுக்கு அறிவிக்க இந்த ஷாம்ராக்ஸ் தாவரத்தை உதாரணமாய் பயன்படுத்திக்கொள்கின்றனர். திரித்துவத்தைக் குறித்து நாம் இன்னும் ஆழமாய் அறிந்துகொள்ளும்போது, தேவனைக் குறித்த நம்முடைய அறிவு விஸ்தாரமாக்கப்பட்டு, “ஆவியோடும் உண்மையோடும்” (யோவான் 4:24) அவரை நாம் தொழுதுகொள்ளச் செய்கிறது.
தனிமை, ஆனால் மறக்கப்படவில்லை!
நீங்கள் அவர்களின் கதைகளைக் கேட்கும்போது, கைதியாக இருப்பதில் மிகவும் கடினமான காரியம் தனிமைப்படுத்தபடுதல் என்பதை புரிந்துகொள்வீர்கள். சிறைக் கம்பிகளுக்கு உள்ளே அடைபட்டிருக்கும் கைதிகள் ஆண்டுக்கு இரண்டுமுறை மாத்திரமே அவர்களின் சிநேகிதரையோ அல்லது பிரியமானவர்களையோ பார்க்க அனுமதிக்கப்படுவர் என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. தனிமை என்பது ஒரு நிலையான உண்மை.
யோசேப்பு தவறாய் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசத்தை அனுபவித்தது மிகவும் வேதனையளிக்கக்கூடிய அனுபவமாய் நான் எண்ணுகிறேன். அங்கே நம்பிக்கையின் ஒளி உதித்தது. பார்வோனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனுடைய சொப்பனத்தை சரியாய் வியாக்கியானம் செய்யும்பொருட்டு தேவன் யோசேப்பைப் பயன்படுத்தினார். யோசேப்பு அவனிடம் பார்வோன் தன்னை விடுவிக்கும்பொருட்டு தன்னைக் குறித்து பார்வோனிடம் அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டான் (ஆதியாகமம் 40:14). “ஆனாலும் பானபத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்” (வச. 23). யோசேப்பு மேலும் இரண்டு வருடங்கள் காத்திருக்கவேண்டியதாயிற்று. அந்தக் காத்திருப்பு நாட்களில், அவனுடைய சூழ்நிலைகள் மாறும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாதபோதிலும், யோசேப்பு தனிமையில் இல்லை; தேவன் அவனோடிருந்தார். இறுதியில், பார்வோனின் வேலைக்காரன் அவனுடைய வாக்குறுதியை நினைவு கூர்ந்தான். யோசேப்பு இன்னுமொரு சொப்பனத்திற்கு விளக்கமளித்த பின்பே விடுவிக்கப்படுகிறான் (41:9-14).
நாம் மறக்கப்பட்டதாக உணரும்போதும், தனிமையின் சோகம் நம்மை ஆழ்த்தும்போதும், “நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15) என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை நாம் உறுதியாய் பற்றிக்கொள்வோம்.