முதன்மையாகச் செயல்படுதல்
எங்களது மகன், அவனது குழந்தைபருவத்தில் ஓர் அனாதை இல்லத்தில் வளர்ந்ததால் ஏற்பட்ட பேரதிர்ச்சியினால், மனம் நிலைகுலைந்து காணப்பட்டான். அதனால் அவன் எதையும் எதிர் மறையாக சிந்திக்கவும், செயல்படவும் செய்தான். ஆகவே, அவன் எங்கள் குடும்பத்தோடு இணைந்து ஒத்துப்போக, அவனை பழக்கப்படுத்துவதற்காகவும், அவனது மனநிலை சரியாவதற்கும் நாங்கள் பொறுமையோடு அவனுக்கு உதவி செய்தோம். அவனது குழந்தை பருவத்தில், அவன் கடந்து வந்த கடினமான வாழ்க்கையைக் குறித்து, நான் மிகவும் கரிசனைப்பட்டாலும், அவனது எதிர்மறை நடவடிக்கை காரணமாக, உணர்வளவில் நான் அவனை விட்டு தூரமாக விலக ஆரம்பித்தேன். மன நோய் சிகிச்சை அளிப்பவரிடம் என் மனப் போராட்டத்தைப் பகிர்ந்து கொண்டேன். “நீங்கள் முதலாவது அன்பைக் காட்டுவது அவனுக்கு தேவையாக உள்ளது. அவன் நேசிக்கப்படத் தகுதியானவன் என்று நீங்கள் அவனுக்கு காண்பித்தால், அவனும் அதற்கு ஏற்றபடி தகுதியாக நடந்து கொள்வான்” என்ற அவரது அன்பான ஆலோசனை என் மனதில் ஆழமாக பதிந்தது.
தேவனுடைய அன்பே ஒருவர் மேல் ஒருவர் அன்புகூருவதற்கு வழி நடத்துகிற மூல ஆதாரமாகவும், காரணமாகவும் உள்ளதென்று அப்போஸ்தலனாகிய யோவான் அவரது நிருபத்தை வாசிக்கும் மக்கள் ஒருவரோடொருவர் ஆழமாக அன்புகூரத்தக்கதாக வழிநடத்துகிறார் (1 யோவா. 4:7,11). எனது சினேகிதர்களோ, எனது சொந்த பிள்ளைகளோ அல்லது எனக்கு அறிமுகமாகாதவர்களோ, யாராக இருந்தாலும், அப்படிப்பட்ட உண்மையான அன்பை அவர்கள்மீது காண்பிக்கவில்லை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆயினும், யோவானுடைய வார்த்தைகள் பிறரை உண்மையோடு நேசிக்க வேண்டுமென்ற ஆவலை எனக்குள் தூண்டி எழுப்புகிறது. தேவன் முதலாவது நம்மில் அன்பு கூர்ந்தார். தேவன் அவருடைய பரிபூரண அன்பை நம் ஒவ்வொருவர் மேலும் செயல்படுத்தி காண்பிக்க, அவரது ஒரே பேரான குமாரனை அனுப்பினார். நாம் செய்வதுபோல அவர் அவரது இருதயத்தை நம்மை விட்டு விலக்கிக்கொள்ளாததை எண்ணி நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்.
நமது பாவச் செயல்கள் தேவனுடைய அன்பு நம்மீது வெளிப்பட தடையாக இருந்தாலும், அவர் அவரது அன்பை நம்மீது பொழிவதில் தயக்கம் காட்டாமல் மன உறுதியுடன் இருக்கிறார் (ரோம. 5:8). அவர் முதலாவது நம்மை நேசித்ததால், அந்த அன்பின் பிரதிபலிப்பாக நாமும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்று அவருடைய அன்பு வலியுறுத்துகிறது.
கற்பாறை மேஜை
எங்கள் ஊரைப் பார்த்தவாறு உள்ள கற்பாறை மேஜை (table rock) என்னும் பீடபூமியில் மின்னொளி வீசும் பெரிய சிலுவை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. கற்பாறை மேஜையை சுற்றியுள்ள நிலங்களில் அநேக வீடுகள் உள்ளன. அனால் சமீபத்தில் பாதுகாப்பு கருதி, அவ்வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை காலி செய்யவேண்டிய கட்டாயத்துக்குள்ளானார்கள். மிக உறுதியான கற்பாறை படுகை கொண்ட டேபிள் ராக்கிற்கு அருகில் இருந்தாலும், அவர்களுடைய வீடுகள் பாதுகாப்பாக இல்லை. ஏனென்றால் அவை தங்கள் அஸ்திபாரங்களை விட்டு ஒவ்வொரு நாளும் மூன்று அங்குலங்கள் முன்னும்பின்னும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இவை நகர்ந்து கொண்டே இருப்பதினால் முக்கியமான தண்ணீர் குழாய்கள் உடைந்து போய், அவ்வீடுகள் சரிவதின் வேகம் அதிகரித்துவிடும்.
தன் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செய்கிறவன் தன் வீட்டை கற்பாறையின் மீது கட்டுகிறவனைப் போலிருக்கிறான் என்று இயேசு கூறுகிறார் (லூக். 6:47-48). இவ்வீடுகள் கடும்புயலிலும் உறுதியாய் நிற்கும். ஆனால், அதற்கு எதிர்மாறாக, தன் அறிவுரைகளை கேட்டு அதன்படி செய்ய கவனமாயில்லாதவர்கள், சரியான அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் கட்டப்பட்ட வீட்டைப் போலிருப்பார்கள். கடும் மழையும் வெள்ளமும் உண்டாகும்போது அவ்வீடுகள் விழுந்துவிடும் என்று கூறுகிறார்.
தேவன் என்னிடம் எதிர்பார்த்ததை நான் பரிபூரணமாய் செய்யாவிட்டாலும், அவருடைய எதிர் பார்ப்புகளை நான் நெருங்கிவிட்டதாகவே எண்ணி பல சமயங்கள் என்னுடைய மனச்சாட்சியின் தூண்டுதல்களை அலட்சியப்படுத்தியுள்ளேன். ஆனால், உறுதியான டேபிள் ராக்கின் மலையடி வாரத்தின் ‘அருகே’ ஆட்டங்கண்டு கொண்டிருக்கும் அவ்வீடுகள் நம்முடைய ‘கீழ்ப்படிதல்’ தேவனுடைய எதிர்பார்ப்புகளின் ‘அருகில்’ இருந்தாலும் போதாது என்பதை எனக்கு விவரித்து காட்டியது. நம்முடைய வாழ்வில் நம்மை தாக்கும் புயல்களை எதிர்கொண்டு உறுதியாய் நிற்க, கற்பாறையின் மீது கட்டப்பட்ட வீட்டைப்போல நாம் நம் தேவனுடைய வார்த்தைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டும்.
விட்டுவிடுங்கள்!
எங்களது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடனும், சாகசத்துடனும் கொண்டாடும் விதத்தில் என் கணவர் ‘இருவர் மிதிக்கும் மிதிவண்டியை’ வாடகைக்கு வாங்கிவந்தார். என் கணவர் முன்னால் அமர, நான் பின்னால் அமர்ந்துகொண்டேன். இருவரும் எங்களது பெடல்களை மிதிக்க ஆரம்பித்தோம். அப்போதுதான் பல காரியங்கள் புலப்பட்டது. முதலில், எனக்கு பாதையே தெரியவில்லை. முன்னால் அமர்ந்திருந்த என் கணவரின் பரந்த தோள்கள் அதை மறைத்துவிட்டது. அடுத்து, என் கைப்பிடி ஒரே நிலையில் நிற்கும்படியாக பொருத்தப்படிருந்தது. அதை வைத்துக்கொண்டு வண்டியை திருப்பமுடியாது. முன்னால் அமர்ந்திருக்கும் ஓட்டுநரால்தான் வண்டியின் திசையை மாற்றமுடியும். என்னுடைய கைப்பிடி என்னை தாங்கிப்பிடித்துக்கொள்ளத்தான் உபயோகமாகயிருந்தது. கட்டுப்படுத்தப் பட்ட எனது நிலையை எண்ணி கடுப்பாகியிருக்கலாம் அல்லது எனது கணவர் மைக் பாதுகாப்பாகதான் ஓட்டிச்செல்வார் என நம்பிக்கை வைத்து எல்லாவற்றையும் விட்டு பயணத்தை குதூகலத்துடன் ரசிக்கத் தொடங்கலாம்.
தேவன் ஆபிராமை தன் தாயகத்தையும் குடும்பத்தினரையும் விட்டு வெளியே வரச்சொன்ன பொழுது, அவர் இலக்கை பற்றி அதிகமாக ஒன்றும் கூறவில்லை. புதிய தேசத்தின் நிலப்பகுதி குறித்தும் அதன் இயற்கைவளங்கள் குறித்தும் விவரிக்கவில்லை. அதை சென்றடைய எவ்வளவு காலம் ஆகும் என்றுகூட தேவன் சொல்லவில்லை. அவர் காண்பிக்கப் போகும் தேசத்தை நோக்கி “போ” என்று மாத்திரம் அறிவுறுத்தினார். துல்லியமான விவரங்களை எதிர்பார்க்கும் மக்களைப்போல் அல்லாமல், ஆபிராம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சென்றதே அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது (எபி.11:8).
நம் வாழ்வு கட்டுப்பாடில்லாமல் சென்றுகொண்டிருக்கும் பொழுதும், நிச்சயமற்ற சூழ்நிலைகளை சந்திக்கும் பொழுதும், ஆபிரகாமின் வாழ்க்கை நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கட்டும். அவரைப்போல் நாமும் தேவனை நம்பி பின்தொடரலாம். ஏனெனில் தேவன் நம்மை செவ்வையான பாதையின் வழியே அழகாய் நடத்திச்செல்வார்.
திரைக்குப் பின்னால்!
என் மகள் தன்னுடைய கேள்விக்கு விரிவானதொரு பதிலை எதிர்பார்த்து அவளுடைய தோழிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினாள். அதை அவள் தோழி வாசித்துவிட்டாள் என்பதை குறுஞ்செய்தி சேவை மூலம் அறிந்துகொண்டு எதிர்பார்ப்போடு பதிலுக்காக காத்திருந்தாள். சில நிமிடம்தான் கடந்திருக்கும், ஆனால் அதற்குள் பொறுமையிழந்து அத்தாமதத்தை எண்ணி எரிச்சலோடு புலம்ப ஆரம்பித்தாள். கொஞ்ச நேரத்தில் எரிச்சல் கவலையாக மாறியது. இன்னும் பதில் வராததால் ஒருவேளை தங்களுக்கிடையில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ என எண்ண ஆரம்பித்தாள். ஆனால் ஒரு வழியாக பதில் வந்ததும், அவர்களுடைய நட்பில் எப்பிரச்சனையும் இல்லை என்பதை உணர்ந்து என் மகள் நிம்மதி பெருமூச்சுவிட்டாள். அவ்வளவு நேரம் அவளுடைய தோழி அக்கேள்விக்கு வேண்டிய பதிலை அனுப்புவதில்தான் நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தாள்.
பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியான தானியேலும் கூட ஓர் பதிலை எதிர்பார்த்து கவலையோடு காத்திருந்தான். ஒரு மகா பெரிய யுத்தத்தை குறித்து பயங்கரமான தரிசனத்தை கண்டதும் தேவனைத் தாழ்மையோடு நோக்கி, உபவாசித்து ஜெபத்தில் தரித்திருந்தான் (வச. 10:3,12). மூன்று வாரங்களாக ஒரு பதிலையும் அவன் பெறவில்லை (வச. 2,13). இறுதியாக ஒரு தேவதூதன் வந்து, “முதல் நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது,” என தானியேலுடைய ஜெபத்தை குறித்து உறுதியளித்தான் (வச. 12). அதாவது 21 நாட்களும் தானியேலுடைய ஜெபத்தின் சார்பில் அத்தேவதூதன் போராடிக்கொண்டிருந்தான். இதைக் குறித்து ஒன்றையும் தானியேல் அறியாதிருந்தபோதிலும், முதல் நாள் தான் ஏறெடுத்த ஜெபம் துவங்கி தேவதூதன் பதில் கொண்டு வந்த 21வது நாள் வரையிலும் ஒவ்வொரு நாளும் தேவன் கிரியை செய்து கொண்டுதான் இருந்தார்.
தேவன் நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார் என்கிற நிச்சயம், நாம் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் பொழுது, பதில் வரவில்லை என்றால் மிகுந்த கவலைக்குள்ளாவோம். ஆனால் நாம் அறியாதபொழுதும் தேவன் தாம் அன்புகூருகிறவர்களுக்காக கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை தானியேலின் அனுபவம் நமக்கு நினைவூட்டுகிறது.
பாதுகாப்பான அரவணைப்பில்
பிறந்து நான்கே நாளான தனதருமை மகளை ஏந்திக்கொள்ளும் பாக்கியத்தை என்னை நம்பி என் தோழி என்னிடம் தந்தாள். குழந்தையை நான் கையில் ஏந்திக்கொண்ட சிறிது நேரத்திலேயே அவள் அழத்தொடங்கினாள். அவளை நெருக்கமாக அணைத்து, அவளது தலையில் என் கன்னத்தை வைத்து அழுத்தி, லேசாக அசைத்து, மெல்லிய பாடலை பாடி அவளை அமைதிப்படுத்த முயன்றேன். அக்கறையுடன் நான் செய்த எந்த முயற்சியும் எடுபடவில்லை. பத்தாண்டுகளுக்கு மேலாக பெற்றோராக இருந்த எனது அனுபவம் கைகொடுக்கவில்லை. அவளை என்னால் சமாதானப்படுத்த முடியாமல் போகவே, ஆவலுடன் காத்திருந்த அவளது தாயாரின் கரத்திற்குள் அவளை வைத்தேன். அந்த நிமிடமே அமைதியானாள். அவளது அழுகுரல் ஓய்ந்தது, புதிதாய் பிறந்த அவளது பிஞ்சு உடலும் கலக்கம் மறந்து, பாதுகாப்பான இடத்திற்குள் வந்ததினால் தளர்ந்து நிம்மதியடைந்தது. தனது மகளை எப்படி சரியாக பிடித்து, தட்டிக்கொடுத்து தேற்றுவது என்று எனது தோழிக்கு நன்றாக தெரிந்திருந்தது.
மென்மையாக, நம்பகத்தன்மையுடனும், அக்கறையுடனும் ஒரு தாய் எவ்வாறு தன் குழந்தையை தேற்றுவாளோ, அதைப்போல்தான் தமது பிள்ளைகளை ஆறுதல்படுத்த தேவனும் தமது உதவிக்கரத்தை நீட்டுகிறார். சோர்ந்து போய் வருத்தத்துடன் இருக்கும்போது, அவர் நம்மை தமது கைகளில் அன்புடன் ஏந்திக்கொள்கிறார். நம் பிதாவும் சிருஷ்டிகருமான அவர் நம்மை முற்றிலும் அறிந்திருக்கிறார். ஆதலால், அவரை “உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் (அவரையே) நம்பியிருக்கிறபடியால், (அவர்) அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார்” (ஏசா. 26:3).
இந்த உலகத்தின் பிரச்சனைகள் நமது இருதயத்தை போட்டு அழுத்தும்பொழுது, ஒரு அன்பான தகப்பனாக இருக்கும் அவர், தம் பிள்ளைகளான நம்மைக் காத்து, நமக்காக யுத்தம் செய்து நம்மை வழிநடத்துகிறார் என்பதை அறிந்து, அவருக்குள் ஆறுதலடைவோமாக.
விரல்களின் ஊடாக வழிந்து
உணவக பணம் செலுத்துமிடத்தில் அஜாக்கிரதையாக என் கையிலிருந்த குவளையை தவறவிட்ட பொழுது, அதில் இருந்த பானம் மேஜையில் சிந்தி, வழிந்தோடி கீழே கொட்ட ஆரம்பித்தது. தர்மசங்கடத்துடன் என்ன செய்வது என்று புரியாமல் என் இரண்டு கைகளையும் கூப்பி, அந்நீர்வீழ்ச்சியை பிடிக்க முயன்றேன். ஆனால் என் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஏனென்றால் என் கரங்களில் ஒரு தேக்கரண்டி அளவு பானத்தைத் தவிர மற்றவை என் கால்களைச் சுற்றி சிறுசிறு குட்டைகளாக கொட்டிக்கிடந்தன.
என் வாழ்க்கையும் கூட சில நாட்கள் இப்படித்தான் இருக்கும். பிரச்சனைகளைத் தீர்க்க திணறிக் கொண்டிருப்பேன், அனைத்தையும் மேற்பார்வை செய்யவும் சூழ்நிலைகளை என் கட்டுப்பாட்டில் வைக்கவும் தடுமாறிக் கொண்டிருப்பேன். நான் எவ்வளவு தான் முயன்றாலும் எல்லாவற்றையும் நேர்த்தியாக நிர்வகிக்க இயலாமல் என் கரங்கள் தளர்ந்து போகும். எப்படியோ ஏதாவதொன்று என் விரல்களின் ஊடாய் நழுவி தரையிலே என் காலருகே கொட்டி, என்னை திணறச் செய்துவிடும். என் கைகளை வளைத்து, என் விரல்களை நெருக்கமாக்கினாலும் என்னால் சமாளிக்க முடிவதில்லை.
ஆனாலும் இவை தேவனால் கூடும். அவர் இப்பூமியின் தண்ணீர்களை, அதாவது சமுத்திரங்கள், ஆறுகள் மற்றும் மழையையும் தன்னுடைய கைப்பிடியினால் அளக்கிறார் என்று ஏசாயா கூறுகிறார் (40:12). அது எப்படி சாத்தியம் என்றால், அவருடைய கரங்கள் அவ்வளவு பெரிதாக உள்ளது. அப்படியென்றால், ஒரு தேக்கரண்டி அளவு தண்ணீருக்கு மேலாக நம்முடைய கரங்களில் நாம் ஏந்தும்படி தேவன் நம்மை சிருஷ்டிக்காததால், அதற்கும் மேலாக எந்த முயற்சிக்கத் தேவையில்லை. சமாளிக்க முடியாமல் திணற நேரிட்டால், நாம் நம்முடைய கவலைகளையெல்லாம் அவருடைய வல்லமையான கரங்களில் ஒப்படைத்து விடுவோமாக.