அற்புதமான இரட்சிப்பு
வலைப்பதிவு எழுத்தாளர் கெவின் லின்னின் வாழ்வில் பெரும் வீழ்ச்சி உண்டானது. சமீபத்திய கட்டுரையொன்றில் "நான் என் தலையில் துப்பாக்கி ஒன்றை வைத்து அழுத்தப்போனேன், ஆனால் இயற்கைக்கப்பாற்பட்ட விதமாக தேவன் அந்த அறைக்குள் வந்தார். என் வாழ்விலும் வந்தார். அந்த நொடியில் தேவன் என்றால் யாரென்று அறிந்துகொண்டேன்" என்றெழுதினார். லின் தற்கொலை செய்வதைத் தேவன் தடுத்தார். தேவன் உண்டென்ற நம்பிக்கையை அவருக்குள் ஆழமாய் வேரூன்றச் செய்து, தம் அன்பின் பிரசன்னத்தை அவருக்கு நினைப்பூட்டினார். இந்த வியத்தகு சந்திப்பை தனக்குள் மறைத்துவைப்பதற்குப் பதிலாக தன் அனுபவத்தை உலகத்தோடு லின் பகிர்ந்துகொண்டார். யூட்யூப் சேனல் மூலம் ஊழியம் ஓன்றைத் துவங்கி, தன் மனமாற்ற அனுபவத்தையும், அதுபோன்ற மற்றவர்களின் அனுபவத்தையும் உலகத்தோடு பகிர்ந்துகொள்கிறார்.
இயேசுவின் நண்பனும் சீஷனுமான லாசரு மரித்தபோது, அநேகர் இயேசு தாமதமாக வந்ததாக எண்ணினர் (யோவான் 11:32). கிறிஸ்து வருமுன் லாசரு நான்கு நாட்களாகக் கல்லறையில் வைக்கப்பட்டிருந்தான். ஆனால் அவர் அவனை உயிரோடெழுப்பி, அந்தத் துயரமான நேரத்தை ஒரு அற்புதமான நேரமாக மாற்றினார் (வ. 38). "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா" (வ.40) என்றார்.
தம் ஜீவனைச் சிலுவையில் தியாகமாய்த் தந்து, நமது பாவங்களுக்கான தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டு, லாசருவை மரணத்திலிருந்து எழுப்பியதுபோலவே, நமக்கும் இயேசு புதுவாழ்வளிக்கிறார். நாம் நமது பாவக்கட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருடைய நித்திய அன்பினால் புதிதாக்கப்பட்டுள்ளோம். மேலும் நமது வாழ்வின் போக்கை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுள்ளோம்.
துணிச்சலாய் நிற்பது
இந்திய வரலாற்றில் பெண்களுக்கு அநேக வன்கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பண்டித ரமாபாய் வெட்கப்பட்டு ஒளிந்துகொள்ளாமல், துணிச்சலாய் முன்வந்து, ஆரிய மகளிர் சமாஜத்தை நிறுவினார். பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சமுதாயத் தடைகள் மத்தியிலும் பெண் கல்விக்காகவும், மகளிர் மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டார். அவர் ஒருமுறை, “தேவனோடு முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையில் பயமோ, இழப்போ, வேதனையோ இல்லை” என்று கூறியிருக்கிறார்.
தன் ஜனத்தின் மீது நடத்தப்படவிருந்த இனப்படுகொலைக்கு விரோதமாக பேசுவதற்கு பெர்சிய தேசத்தின் அரசியான எஸ்தர் தயங்கினாள். அவள் பேசுவதற்கு தயங்கினால் அவளும் அவளுடைய குடும்பமும் அழிந்துபோகும் என அவளுடைய மாமன் அவளை எச்சரித்தான் (எஸ்தர் 4:13-14). இது துணிச்சலாய் செயல்படவேண்டிய தருணம் என்று எண்ணி, “நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்” (வச. 14) என்று அறிவித்தான். அநீதிக்கு விரோதமாய் குரல் கொடுப்பதா? நமக்கு பிரச்சனை கொடுக்கிறவர்களை மன்னிப்பதா? இதுபோன்ற சவாலான தருணங்களில், தேவன் நம்மை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை என்று வேதம் நமக்கு உறுதியளிக்கிறது (எபி. 13:5-6). நம்மை மிரட்டும் தருணங்களில் நாம் தேவனின் உதவியை நாடுவோமாகில், “பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை” கொடுத்து நம்மை முடிவுபரியந்தம் நடத்த தேவன் போதுமானவராயிருக்கிறார் (2 தீமோத்தேயு 1:7).
தேவனில் நம்பிக்கை
2020ஆம் ஆண்டில் ஏறெடுக்கப்பட்ட இந்தியாவின் நடுத்தர வயதுள்ளவர்களைப் பற்றிய ஆய்வில், சராசரியாக இந்தியர்கள் இயந்திர திரை கருவிகளைப் பார்வையிடும் நேரம் தினசரி 2 மணிநேரத்தில் இருந்து 4.5 மணிநேரமாக அதிகரித்துள்ளது. ஆனால் உண்மையைச் சொல்வதென்றால், ஒரு கேள்விக்கான பதிலைக் கண்டறிய கூகிளில் நான் எவ்வளவு தேடுகிறேன் அல்லது நாள் முழுவதும் என் தொலைபேசியில் வரும் உரைகள், அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களின் முடிவில்லாத விழிப்பூட்டல்களுக்கு பதிலளிப்பேன் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இந்த புள்ளிவிவரம் மிகவும் குறைவாய் தெரிகிறது. நம்மை ஒழுங்கமைக்கவும், தகவல் தெரிந்துகொள்ளவும், நம்மில் பலர் கருவிகளையே தொடர்ந்து சார்ந்துகொள்ளுகிறோம்.
கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் ஸ்மார்ட்போனை விட சிறந்த உபகரணங்கள் உள்ளது. தேவன் நம்மை நேசிக்கிறார்; பராமரிக்கிறார். மேலும் நம் தேவைகளுக்காய் நாம் அவரை சார்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறார். நாம் ஜெபிக்கும்போது, “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்” (1 யோவான் 5:14) என்ற நம்பிக்கையுடன் இருக்கலாம் என்று வேதாகமம் அறிவுறுத்துகிறது. வேதத்தை வாசித்து அவற்றை நம் இருதயத்தில் பதிய வைப்பதின் மூலம், சமாதானம், ஞானம், விசுவாசம் போன்ற காரியங்களை அவர் நமக்கு அருளுவார் என்ற நம்பிக்கையுடன் அவரிடத்தில் நாம் ஜெபிக்கலாம் (வச. 15).
சில சமயங்களில் நம்முடைய சூழ்நிலையில் எந்த மாற்றமும் நேராதபோது, தேவன் நம் ஜெபத்தைக் கேட்கவில்லை என்று தோன்றலாம். ஆனால் எல்லா சூழ்நிலையிலும் நம்முடைய தேவைக்காய் அவரை சார்ந்துகொள்ளும்போது, அவர் மீதான நம்முடைய விசுவாசம் பெருகத் துவங்குகிறது (சங்கீதம் 116:2). அவர் நாம் கேட்ட அனைத்தையும் கொடுக்கவில்லையென்றாலும், நம்முடைய தேவைக்கேற்ப காரியங்களை ஏற்ற நேரத்தில் அருளுவார் என்ற விசுவாசத்தில் வளர நமக்கு உறுதுணையாயிருக்கிறது.
சேவை மனப்பான்மை
மெக்சிகோவில் உள்ள ஒரு ஊழிய ஸ்தாபனம் ஒவ்வொரு மாதமும் உள்ளூர்வாசிகளுக்கு, சுமார் 11000கி எடை உணவை இலவசமாய் கொடுத்து உதவுகிறது. அதின் தலைவர், “எவராயினும் இங்கே வரலாம். நாங்கள் அவர்களை ஏற்றுக்கொண்டு, அவர்கள் இருக்குமிடத்திலேயே அவர்களை சந்திக்கிறோம். அவர்களின் நடைமுறைத் தேவைகளை சந்திப்பதின் மூலம் அவர்களின் ஆவிக்குரிய தேவையை சந்திப்பதே எங்கள் இலக்கு” என்கிறார். கிறிஸ்தவர்களாய் தேவன் நமக்குக் கொடுத்தவைகளை தேவையுள்ளவர்களுக்குக் கொடுத்து, மக்களை தேவனிடம் வழிநடத்தவேண்டும் என்பதே தேவனுடைய சித்தம். தேவனை மகிமைப்படுத்தும் சேவை மனப்பான்மையை நாம் எப்படி வளர்க்கமுடியும்?
தேவன் நமக்குக் கொடுத்த வரங்களை மற்றவர்களின் பிரயோஜனத்திற்கு பயன்படுத்துவது எப்படி என்று அவரிடம் கேட்பதின் மூலம் சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளலாம் (1 பேதுரு 4:10). தேவன் நமக்குக் கொடுத்ததை மற்றவர்களுக்கு அளிக்கையில், “அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரண பலனுள்ளதாயும் இருக்கும்” (2 கொரிந்தியர் 9:12).
மற்றவர்களுக்கு சேவை செய்வது இயேசுவின் ஊழியத்தில் முக்கிய அம்சம். அவர் வியாதியஸ்தரை சொஸ்தமாக்கி, பசித்தோருக்கு உணவளித்தபோது, பலரும் தேவனுடைய நற்குணத்தையும், அன்பையும் ருசித்தனர். நம் ஜனத்தின் மீது அக்கறை கொள்கையில், நாம் அவருடைய சீஷராகிறோம். நம்முடைய கிரியைகளின் மூலம் தேவ அன்பை நாம் பிரதிபலிக்கும்போது, ''மற்றவர்கள் தேவனை மகிமைப்படுத்துவார்கள்'' (வச. 13) என்று அவருடைய ஞானமான யோசனை நமக்கு நினைவூட்டுகிறது. சேவை என்பது சுயதிருப்திக்கானது அல்ல; மாறாக, பிறர் தேவனுடைய அன்பை அறியவும், அவருடைய நாமத்தை தரித்தவர்கள் மூலம் அவர் செய்யும் அதிசயமான நடத்துதலை பிறர் பார்க்கவுமே.
விசுவாசத்தில் வளர்தல்
என் தோட்டக்கலை பயணத்தின் ஆரம்பத்தில், நான் காலமே எழுந்து என் காய்கறி தோட்டத்திற்கு விரைந்தோடி, ஏதாகிலும் புதிதாய் முளைத்துள்ளதா என பார்ப்பேன். ஒன்றுமிருக்காது! “விரைவான தோட்ட வளர்ச்சி” என்று இணையத்தில் தேடுகையில், செடியின் வாழ்நாளில் நாற்று பருவமே மிக முக்கியமென்று கற்றுக்கொண்டேன். இம்முறையை விரைவாக்க இயலாது என அறிந்தவளாக, விண்ணை நோக்கி மண்ணிலிருந்து முளைத்தெழும் தளிர்களின் வலிமையையும், பருவநிலை மாற்றத்திற்கேற்ற அவைகளின் எதிர்பாற்றலையும் வெகுவாய் ரசித்தேன். சில வாரங்கள் பொறுமையாய் காத்திருந்தபின், பச்சை மொட்டுக்கள் மண்ணிலிருந்து வெடித்தெழும்பி என்னை வரவேற்றன.
சிலவேளைகளில், நம் சுபாவத்தின் வளர்ச்சியானது காலப்போக்கிலும், போராட்டத்தின் மூலமாகவும் தான் உண்டாகுமென்று நாம் அறிவதில்லை. அதினால் நம் வாழ்வின் வெற்றிகளையும், அதினால் உண்டாகும் மகிழ்ச்சியையும் சுலபமாக கொண்டாடுகிறோம். யாக்கோபு, “நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, ... அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக்கோபு 1:2-3) என்று நம்மை அறிவுறுத்துகிறார். ஆனால் சோதனைகளைக் குறித்து சந்தோஷப்பட என்ன இருக்கிறது?
சிலசமயம், தேவன் நம்மை சவால்களினூடும், கஷ்டங்களினூடும் செல்ல அனுமதிக்கிறார். அதினால் நாம் அவருடைய அழைப்பிற்கேற்றபடி வனையப்பட முடியும். “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும்” (வச. 4) நம் வாழ்வின் சோதனைகளிலிருந்து நாம் வெளியே வர தேவன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இயேசுவில் உறுதியாய் நாம் நிலைத்திருக்கையில், எத்தகைய சவாலிலும் நீடியபொறுமையாய், வலிமையாக வளர்ந்து முடிவில் ஆவிக்குரிய கனியானது நம் வாழ்வில் மலரக் காண்போம் (கலாத்தியர் 5:22–23). ஒவ்வொரு நாளும் நாம் உண்மையாக செழித்தோங்க தேவையான ஊட்டச்சத்தை, அவருடைய ஞானமே நமக்குக் கொடுக்கிறது (யோவான் 15:5).
தடுமாற்றத்தை கையாளுதல்
காகிதத் துண்டுகள் முதல் ஆயுள்காப்பீட்டு திட்டங்கள் வரை பல்வேறு வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் உலகத்தில் நாம் வாழுகிறோம். 2004ஆம் ஆண்டு “தேர்ந்தெடுப்பில் முரண்பாடு” (The Paradox of Choice) என்ற புத்தகத்தை ஓர் உளவியலாளர் எழுதியிருக்கிறார். அதில்அவர், தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவரின் நல்வாழ்வுக்கும் முக்கியம் என்றாலும் அதிக தேர்வுகள் நம்மை சோர்வுக்கும், உறுதியற்ற தன்மைக்கும் வழிநடத்தும் என்கிறார். தேர்வுகள் குறைவாயிருக்கும் போது, காகித துண்டுகளை தேர்வு செய்வதில் சிரமமில்லாத போதிலும், வாழ்வின் முக்கியமான முடிவுகளை எடுக்கையில் உறுதியற்ற நிலை பெரும் பங்கு வகித்து பாதிப்புக்குள்ளாக்கும். இந்த தீர்மான தடுமாற்றத்தை மேற்கொண்டு எவ்வாறு உறுதியுடன் முன்னேறி இயேசுவுக்காய் வாழ முடியும்?
கிறிஸ்துவின் விசுவாசிகளாய் தெய்வீக ஞானத்தை நாம் தேடுவது, கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள உதவும். நாம்வாழ்க்கையில் சிறியதோ அல்லது பெரியதோ, எந்த தீர்மானங்களை எடுத்தாலும், “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு” (நீதிமொழிகள் 3:5) என்று வேதம் நமக்கு ஆலோசனைக் கொடுக்கிறது. நம்முடைய சுயதீர்மானங்களை சார்ந்துகொள்ளும்போது, நாம் குழப்பத்திற்குள்ளாகவும், கவலைக்குள்ளாகவும் கடந்து போய் முக்கியமானதை தவறவிட்டு விடுகிறோம். அல்லது, தவறான தேர்வுகளை தேர்ந்தெடுக்கிறோம். எனினும் நாம் பதிலுக்காய் தேவனை சார்ந்துகொள்ளும்போது, அவர் “(நம்) பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (வச.6). நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் எடுக்கும் தீர்மானங்களில் சமாதானத்தையும், தெளிவையும் உண்டுபண்ணுவார்.
நம்முடைய சுயதீர்மானங்களின் சுமையினால் நாம் முடக்கப்படுவதையும், மேற்கொள்ளப்படுவதையும் தேவன் விரும்பவில்லை. நம்முடைய தேவைகளை விண்ணப்பங்களாய் அவருடைய சமுகத்திற்கு கொண்டு வரும்போது, அவர் கொடுக்கும் வழிநடத்துதலிலும், ஞானத்திலும் இளைப்பாறுதலை நாம் பெறுகிறோம்.
தேவனை அடையாளம் காணுதல்
கால் பெருவிரலை ஊன்றி சுற்றாட்டம் ஆடும் முறை (பிரு எட்) என்பது கூட்டு நடனக்குழுவில் நடனமாடும் முக்கிய பெண் நடன கலைஞர்களும் அதைப்போல மற்ற நடன கலைஞர்களும் பயன்படுத்தும் ஒரு நடன முறையாகும். சிறுமியாக எனது நவீன நடன வகுப்பில் அவ்வாறு ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். சுழன்று, சுழன்று, மயக்கமுண்டாகி தரையில் விழுமட்டும் அவ்வாறு ஆடுவேன். ஆனால் நான் பெரியவளானபோதோ, என் சமநிலையை, கட்டுப்பாட்டை பேணுவதற்கு நான் ஒரு யுத்தியை கற்றுக்கொண்டேன், அதுதான் " அடையாளம் காணுதல்" ஒரு புள்ளியை அடையாளம் வைத்துக்கொண்டு ஒவ்வொரு சுற்றிலும் என் கண்கள் அதையே பார்க்கும்படி இருக்கையில் நான் முழு சுற்று வட்டமடித்தேன். என் "பிரு எட்" கலையில் கைதேர்ந்தவளாகவும், அதை அற்புதமாக ஆடவும் எனக்கு தேவைப்பட்டதெல்லாம் ஒரே ஒரு மையப்புள்ளி.
நாம் அனைவருமே வாழ்வில் பல திருப்பங்களையும், வளைவுகளையும் சந்திக்கிறோம். நாம் பிரச்சனைகளையே கணித்துக்கொண்டிருந்தால், நாம் எதிர்கொள்ளும் காரியங்கள் கையாள முடியாதவைகளாய் தோன்றும், நம்மை மயக்கமடைய செய்து கிழே விழத்தள்ளும். வேதம் நம்மை நினைவூட்டுகிறது, நாம் நமது மனதை உறுதியாய் வைத்துக்கொண்டால் அதாவது தேவனை கவனிப்போமானால், அவர் நம்மை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார். (ஏசாயா 26:3). பூரண சமாதானமென்றால் நம் வாழ்வில் எவ்வளவு திருப்பங்கள் வந்தாலும், நாம் அமைதியாக இருக்கலாம், நம்முடைய பிரச்சனைகள், சோதனைகள் அனைத்திலும் தேவன் நம்மோடிருப்பார் என்ற நிச்சயத்தோடு இருக்கலாம். அவரே "நித்திய கன்மலையாயிருக்கிறார்" (வ.4) நம்முடைய கண்கள் பதியவேண்டிய முக்கியபுள்ளி அவரே ஏனெனில் அவருடைய வாக்குத்தத்தங்கள் மாறாதவைகள்.
அவரிடம் ஜெபத்தின் மூலமாக சேர்ந்து அவருடைய வாக்குத்தத்தங்களை வேத வசனங்களில் வாசித்து, நம் கண்களை அவர் மேலேயே பதித்து ஒவ்வொரு நாளையும் கடந்துசெல்வோமாக. வாழ்நாள் முழுதும் நாம் அற்புதமாய் கடந்துச் செல்ல நம் தேவனை, நம் நித்திய கன்மலையை உதவிக்காக சார்ந்துகொள்வோமாக.
கருத்து வேறுபாடுகளைக் கையாளுவது
சமூக ஊடகமான ட்விட்டர் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட ஒரு தளத்தை உருவாக்கியது. சமீபத்தில் இது சிக்கலாகிவிட்டது. அது ஒத்துவராத அணுகுமுறைகள், வாழ்க்கை முறைகளைப் பற்றிய கண்டனங்களை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகிவிட்டது. நாம் அதில் லாக்ஆன் செய்தால், ஒரு நபராவது “டிரெண்டிங்”ல் உலவுவார். அவர் பெயரை சொடுக்கினால்; அதனால் ஏற்பட்ட சர்ச்சையைப் பற்றி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
நாம் மக்கள் உடுத்தும் ஆடைகளைக் குறித்த நம்முடைய கருத்துக்களை வெளிப்படையாய் விமர்சிக்க கற்றுக்கொண்டோம். ஆனால் கிறிஸ்தவ விசுவாசிகளாய் அழைக்கப்பட்டவர்களுக்கு விமர்சன சிந்தனையும், அக்கறையற்ற அணுகுமுறையும் ஏற்புடையதல்ல. கருத்து வேறுபாடுகளைக் கையாள நாம் விசுவாசிகளாய் “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு” வாழவேண்டும் (கொலோசெயர் 3:12). “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" (வ.13) என்றும் வலியுறுத்துகிறார்.
நம்மோடு ஒத்துப்போகும் சுபாவம் கொண்டவர்களிடம் மட்டும் இணங்கிப்போவது போதுமானது அல்ல. நாமும் கிறிஸ்துவின் அன்பினால் மீட்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, கிறிஸ்து வழிகாட்டியது போல, நாமும் கிருபையையும் அன்பையும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும்.