எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கேரன் ஹுவாங்கட்டுரைகள்

நீங்கள் தேவனை விசுவாசிக்கலாம்

என் பூனை மிக்கிக்கு கண் தொற்றுநோய் ஏற்பட்டபோது, தினமும் கண்களில் சொட்டு மருந்து போட்டேன். அதை நான் இருக்கையில் அமர்த்தி அதற்கு சொட்டு மருந்து போட முயற்சிக்கும்போது, அது சரியாய் உட்கார்ந்து, அந்த மருந்தை வாங்கிக்கொள்வதற்காக தன்னுடைய கண்களை திறந்து காண்பிக்கும். “நல்ல பையன்” என்று அதற்கு பாராட்டுக்கொடுப்பேன். நான் என்ன செய்கிறேன் என்பது அதற்கு புரியவில்லை என்றாலும், அது ஒருபோதும் குதிக்கவோ, சீண்டவோ அல்லது என்னைக் கீறவோ முயற்சிக்கவில்லை. மாறாக, அது என்னிடமாய் நெருங்கி வருவதற்கே முயற்சித்தது. அது சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. என்னை அதனால் நம்ப முடியும் என்பது அதற்கு நன்றாய் தெரியும். 

தாவீது, சங்கீதம் 9ஐ எழுதியபோது, தேவனின் அன்பையும் உண்மைத்தன்மையையும் அவர் ஏற்கனவே அனுபவித்திருக்கவேண்டும். அவர் தன்னுடைய எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தேவனை நாடுகிறார். தேவனுடைய அவருடைய சார்பில் செயல்படுகிறார் (வச. 3-6). தாவீதின் தேவையின் போது, தேவன் அவரை கைவிடவில்லை. இதன் விளைவாக, தாவீது தேவன் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்கிறார். அவர் வல்லமையும் நீதியும், அன்பும் உண்மையும் கொண்டவர். அதனால் தாவீது தேவனை நம்புகிறார். தேவன் நம்பகமானவர் என்பதை அவர் அறிந்திருந்தார்.

நான் மிக்கியை அதன் சிறுபிராயத்தில் தெருவில் ஒரு பட்டினி கிடக்கும் பூனைக்குட்டியாகக் கண்ட இரவு முதல், பல நோய்கள் தருவாயில் அதை கவனித்துக்கொண்டேன். அதனால்; நான் அவருக்குப் புரியாத விஷயங்களைச் செய்தாலும் கூட, என்னை நம்ப முடியும் என்று அதற்குத் தெரியும். இதேபோல், தேவன் செய்யும் சில காரியங்களை விளங்கிக்கொள்ள முடியாவிட்டாலும் அவர் இதுவரை செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து அவரை அணுகுவது நல்லது. வாழ்க்கையில் கடினமான தருணங்களில் தேவனையே நம்ப முற்படுவோம்.

நம் நம்பிக்கையின் நங்கூரம்

ஒரு மங்கலான சந்தில் அட்டைத் துண்டுகளுக்கு அடியில் மக்கள் தூங்கும் காட்சியை நான் படம்பிடித்தேன். “அவர்களுக்கு என்ன தேவை?” என்று என்னும் ஆறாம் வகுப்பு ஞாயிறுபள்ளியில் கேட்டேன். “உணவு” என்று யாரோ சொன்னார்கள். “பணம்” என்றான் இன்னொருவன். “பாதுகாப்பான இடம்,” என்று ஒரு சிறுவன் யோசித்து பதில் சொன்னான். பின்னர் ஒரு சிறுமி, “நம்பிக்கை” என்று பதில் சொன்னாள். 

“நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பதே நம்பிக்கை” என்று அவள்; விளக்கம்கொடுத்தாள். சவால்கள் காரணமாக, வாழ்க்கையில் நல்லதை எதிர்பார்ப்பது சாத்தியமேயில்லாதபட்சத்தில், அவள் அவ்வாறு பேசியது எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. ஆயினும்கூட, என் மாணவர்களுடன் ஒத்துப்போகும் விதத்தில் வேதாகமம் நம்பிக்கையைக் குறித்து பேசுகிறது. “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதி” (எபிரெயர் 11:1) என்பது நிஜமானால், நல்லதே நடக்கும் என்று நாம் விசுவாசிப்பது சிறந்தது.

எந்த மேன்மையான நன்மையை கிறிஸ்தவர்களாகிய நாம் நம்பிக்கையோடே எதிர்பார்க்கலாம்? “அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பது” (4:1). விசுவாசிகளைப் பொறுத்தவரை, தேவன் கொடுக்கிற இளைப்பாறுதல் என்பது அவரது சமாதானம், இரட்சிப்பின் நம்பிக்கை, அவருடைய வல்லமையின் மீதான நம்பிக்கை மற்றும் எதிர்கால பரலோக வீட்டின் உறுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. நம்முடைய தேவைகளின் மத்தியில், ஏன் தேவனுடைய உத்திரவாதமும் இயேசுவின் இரட்சிப்பும் நம்முடைய வாழ்க்கையின் நங்கூரமாய் இருக்கிறது என்பதை விவரிக்கிறது (6:18-20). உலகத்திற்கும் நம்பிக்கை தேவை: சரியான மற்றும் மோசமான தருணங்களில் தேவன் நம்மை கைவிடாமல் பாதுகாப்பார் என்பது உறுதி. நாம் அவரை நம்பும்போது, அவர் தம்முடைய காலத்தில் நமக்காக எல்லாவற்றையும் செய்வார் என்பதை நாம் அறிய முற்படுவோம். 

விட்டுவிடுங்கள்

கீத் பணிபுரிந்த புத்தகக் கடையின் உரிமையாளர் இரண்டு நாட்கள் விடுமுறையில் சென்றிருந்தார். ஆனால் அவரது உதவியாளரான கீத் ஏற்கனவே பீதியில் இருந்தார். புத்தகக் கடை சீராக இயங்கினாலும், அதை தன்னால் நேர்த்தியாய் மேற்பார்வையிட முடியாது என்று கீத் சற்று பதற்றத்திலிருந்தார். ஆகையால் வெறித்தனமாய் தன்னால் முடிந்த அனைத்திலும் மூக்கை நுழைத்து செயல்பட துவங்கினார். 

“போதும் நிறுத்து” என்று அவரது முதலாளி ஒரு வீடியோ அழைப்பின் மூலம் அவரிடம் கூறினார். “நான் தினமும் உனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தும் வேலைகளை மட்டும் நீ செய்தால் போதும். கவலைப்படாதே கீத். சுமை உன் மீது இல்லை; அது என் மீது உள்ளது" என்று தெரியப்படுத்தினார். 

மற்ற நாடுகளோடு இஸ்ரவேலுக்கு கலகம் ஏற்படும்போது, தேவன் அவர்களை அமர்ந்திருக்கும்படி சொல்லுகிறார் (சங்கீதம் 46:10). அதாவது, “சுயமாய் முயற்சிசெய்வதை நிறுத்துங்கள், நான் சொல்வதைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்காக யுத்தஞ்செய்வேன்” என்று சொல்லுகிறார். எதுவும் செய்யாமல் இஸ்ரவேல் அமைதிகாக்கவில்லை; மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, சூழ்நிலையை கட்டுப்படுத்தும் தேவனை சார்;ந்துகொண்டனர். 

நாமும் அதையே செய்வதற்காய் அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் நம்பும் தேவன் சர்வத்தையும் ஆளுகிறவர் என்பதினால் அதை நம்மால் நேர்த்தியாய் செய்யமுடியும். “அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று,” “அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்” (வச. 6,9). ஆகையால் அவருடைய அடைக்கலத்தையும் பெலத்தையும் நாம் நம்பலாம் (வச. 1). நம்முடைய வாழ்க்கையின் மீதான கட்டுப்பாடு நம்மிடத்தில் இல்லை, அது தேவனிடத்தில் இருக்கிறது.

எனது நோக்கம் என்ன?

"நான் மிகவும் பயனற்றவனாக உணருகிறேன்" என ஹெரால்டு கூறினார். "விதவைகள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் சொந்த குடும்பங்களுடன் மும்முரமாக இருக்கிறார்கள், சுவரில் நிழல்களைப் பார்த்துக்கொண்டு அமைதியான மதியங்களை செலவிடுகிறார்கள்"‌ என‌ அவர் தனது மகளிடம் அடிக்கடி கூறுவார். “நான் வயதாகிவிட்டேன், நிறைவான வாழ்க்கையையும் வாழ்ந்து விட்டேன். இனி எனக்கு எந்த நோக்கமும் இல்லை. தேவன் என்னை எந்த நேரத்திலும் தம்மிடத்திற்கு அழைத்துச் செல்வார்” என்பார்.

 

இருப்பினும், ஒரு பிற்பகல் உரையாடல் ஹெரால்டின் மனதை மாற்றியது. "என் பக்கத்து வீட்டுக்காரருக்கு, அவருடைய குழந்தைகளுடன் சில பிரச்சனைகள் இருந்தது. அதனால் நான் அவருக்காக ஜெபித்தேன்" என்று ஹெரால்டு கூறினார். “பின்னர், நான் அவருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டேன்". அப்பொழுதுதான் என் வாழ்க்கைக்கு இன்னும் ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்! இயேசுவைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்கும் வரை, நான் அவர்களுக்கு இரட்சகரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றார்.

 

ஹெரால்டு தனது விசுவாசத்தை எப்போதும் போன்ற சாதாரண சந்திப்பில் பகிர்ந்தபோது, அவரது அயலாகத்தாரின் வாழ்கை மாறியது. 2தீமோத்தேயு 1 ல், அப்போஸ்தலனாகிய பவுல் இன்னொருவரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு, தேவனால் பயன்படுத்தப்பட்ட இரண்டு பெண்களைப் பற்றி குறிப்பிடுகிறார்: பவுலின் இளம் சக ஊழியனான தீமோத்தேயுவின் வாழ்க்கையில் அவரது பாட்டி லோவிசாள் மற்றும் தாயார் ஐனிக்கேயாள் ஆகியோர் "மாயமற்ற விசுவாசத்தை" கொண்டிருந்தனர் (வ.5) எனக் காண்கிறோம். ஒரு சாதாரண குடும்பத்தில் அன்றாட நிகழ்வுகள் மூலம், இளம் தீமோத்தேயு ஒரு மாயமற்ற விசுவாசத்தைக் கற்றுக்கொண்டார். அவனுடைய வளர்ச்சி, இயேசுவின் உண்மையுள்ள சீஷனாகவும், இறுதியில்‌ எபேசு தேவாலயத்தின் தலைவனாக அவனுடைய ஊழியத்தை வடிவமைத்தது.

 

நம்முடைய வயது, பின்னணி அல்லது சூழ்நிலை எதுவாக இருந்தாலும், இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் நமக்கும் உண்டு

நீங்கள் தனிமையாயிருக்கும்போது

இரவு 7 மணியளவில், ஹ_ய்-லியாங் தனது சமையலறையில் அரிசி உணவையும் மீதியான மீன்களையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பக்கத்து அபார்ட்மெண்டில் இருந்த சுவா குடும்பமும் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அங்கு எழுந்த அவர்களின் சிரிப்பு மற்றும்  உரையாடலின் சத்தமானது ஹ_ய்-லியாங்கின் அமைதியை பாதித்தது. அவருடைய மனைவி இறந்ததிலிருந்து அவர் அந்த வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். அவர் தனிமையோடு வாழக் கற்றுக்கொண்டார். அது ஒருவகையான மனவலியை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அவருடைய மேசையில் இருந்த உணவும் அதை உண்ணும் குச்சியும் அவரை வெகுவாய் பாதித்தது. 

அவர் படுக்கைக்கு செல்லும் முன்பு, ஹ_ய்-லியாங் அவருக்கு பிரியமான சங்கீதம் 23ஐ வாசித்தார். அவரை வெகுவாய் பாதித்த வார்த்தைகள் “தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” (வச. 4) என்பதே. ஒரு மேய்ப்பன் ஆடுகளோடு இடைபடும் இயல்பான செய்கையை விடுத்து, அந்த ஆட்டின் அனைத்து காரியங்களிலும் தலையிட்டு அதைப் பாதுகாக்கும் மேய்ப்பனை இவ்வார்த்தை பிரதிபலிக்கிறது (வச. 2-5). அது ஹ_ய்-லியாங்கிற்கு ஆறுதலளித்தது. 

நமக்காக அல்லது நம்முடன் யாரோ இருக்கிறார்கள் என்பது தனிமையான நேரங்களில் மிகவும் ஆறுதலாயிருக்கிறது. தேவனுடைய தெய்வீக அன்பானது அவருடைய பிள்ளைகளின் மீது எப்போதும் இருக்கும் என்று வாக்களிக்கிறார் (சங்கீதம் 103:17). அவர் நம்மை விட்டு விலகுவதில்லை (எபிரெயர் 13:5). நம்முடைய சமையலறையிலோ, பேருந்தும் வேலைக்கு செல்லும்போதோ, ஜனநெருக்கடியான சந்தைகளிலோ, எங்கெல்லாம் நாம் தனிமையாய் உணருகிறோமோ, அங்கெல்லாம் நம் மேய்ப்பன் நம்மோடிருக்கிறார். “தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” என்று நாமும் சொல்வோம்.

உங்கள் வியாகுலங்கள் கேட்கப்பட்டது

“இயற்பியல்” என்ற புத்தகத்தில், ஆசிரியர்கள் சார்லஸ் ரிபோர்க் மான் மற்றும் ஜார்ஜ் ரான்சம் ட்விஸ் ஆகியோர், “யாருமில்லாத தனிமையான காட்டில் மரம் விழுந்தால், அந்த சத்தத்தைக் கேட்க அருகில் எந்த மிருகமும் இல்லையென்றால், அது ஒலி எழுப்புமா?” என்ற கேள்வியை கேட்கிறார்கள். பல ஆண்டுகளாக, இந்த கேள்வி, ஒலி, உணர்தல் மற்றும் இருப்பு பற்றிய தத்துவ மற்றும் அறிவியல் விவாதங்களைத் தூண்டியது. இருப்பினும், ஒரு உறுதியான பதில் இன்னும் கண்டறியப்படவில்லை. 

ஒரு நாள் இரவில் நான் சோர்ந்துபோய் கவலையாயிருந்த தருணத்தில், நான் யாரிடத்திலும் சொல்லாமல், இந்த கேள்வியைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தேன்: “உதவிக்கான என்னுடைய அழுகுரலுக்கு யாருமே செவிகொடுக்காத வேளையில், தேவன் அதைக் கேட்கிறாரா?”

116-ம் சங்கீதத்தை எழுதியவர், மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டு, பாடுகள் அனுபவித்ததால், கைவிடப்பட்டவராக உணர்ந்திருக்கலாம். எனவே அவர் தேவனை அழைத்தார். அழைத்தால் அவர் கேட்கிறார், கேட்டு அவருக்கு உதவிசெய்வார் என்பதை அறிந்திருந்தார். “கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால்… அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால்..” அவரை தொழுதுகொள்வதாக சங்கீதக்காரன் அறிவிக்கிறான் (வச. 1-2). நம்முடைய வேதனையை யாரும் அறியாத நேரத்தில் தேவன் அறிகிறார். நம்முடைய அழுகுரலை யாரும் கேட்காதவேளையில் தேவன் கேட்கிறார். 

கடினமான தருணங்களில் தேவன் தன்னுடைய அன்பையும் பாதுகாப்பையும் அருளுவார் என்று அறிந்து, இளைப்பாறலாம் (வச. 7). “இளைப்பாறுதல்” (மனோக்) என்பதற்கு பயன்படுத்தப்படும் எபிரெய வார்த்தையானது யாருமில்லாத பாதுகாப்பான ஓர் இடத்தைக் குறிக்கிறது. தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற உறுதியுடன் நாம் இளைப்பாறுதலையும் உதவியையும் பெற்றுக்கொள்ளலாம். 

அந்த இரண்டு இயற்பியல் ஆசிரியர்கள் கேட்ட கேள்வியானது பல்வேறு பதில்களை கொண்டுவந்தது. ஆனால் தேவன் நம்முடைய வியாகுலத்தைக் கேட்கிறாரா? என்னும் கேள்விக்கு ஆம்! என்ற ஒற்றை பதில் மட்டுமே உள்ளது.

சுவிசேஷத்திற்காக

1917 ஆம் ஆண்டு தனது 23ம் வயதில் நெல்சன் தனது சொந்த மாநிலமாகிய வெர்ஜீனியாவில் தனது மருத்துவப் படிப்பை முடித்தார். பிறகு சீனாவில் சுமார் இரண்டு மில்லியன் சீன குடியிருப்புகள் உள்ள ஒரு பகுதியில் "லவ் அண்ட் மெர்சி" என்ற அந்த ஒரே மருத்துவமனையில் புதிய கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார். அவர் தனது குடும்பத்துடன் 24 வருடங்கள் அப்பகுதியில் வசித்து, அம்மருத்துவமனையை நடத்தி , அறுவை சிகிச்சை செய்தும், ஆயிரக்கணக்கான மக்களிடம் நற்செய்தியைப் பகிர்ந்தும் வந்தார். அம்மக்களால் முன்னர் "அயல்நாட்டுப் பிசாசு" என்ற பெயர் பெற்ற அதே நெல்சன் பெல் இப்பொழுது "சீன மக்களை நேசிக்கும் பெல்" என்ற பெயர் பெற்றார். அவரின் மகள்தான் சுவிசேஷகர் பில்லி கிரஹாமின் மனைவி ரூத் ஆவார்.        

நெல்சன், திறமையான அறுவை சிகிச்சை நிபுணராகவும், வேதாகம ஆசிரியராக இருந்தாலும், அவருடைய பண்பும், வாழ்க்கை முறையும் தான் அநேக மக்களை இயேசுவிடம் திருப்பியது. புறஜாதியாருக்குத் தலைவனாய் கிரேத்தாவில் உள்ள சபையைக் கண்காணித்துக் கொண்டிருந்த அந்த இளம் தீத்துவுக்கு, பவுல் தனது கடிதத்தில் கிறிஸ்துவைப் போல் வாழ்வது மிகவும் முக்கியம் எனவும், அது சுவிசேஷத்தை அலங்கரிக்கிறதெனவும் குறிப்பிடுகிறார் (தீத்து 2 : 10). ஆனாலும் நாம் நமது சுயபலத்தில் இதைச் செய்வதில்லை. தேவனுடைய கிருபை நம்மை சுயக் கட்டுப்பாட்டோடும், நேர்மையோடும், தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்ந்து, விசுவாசத்தின் சத்தியத்தைப் பிரதிபலிக்கச் செய்கிறது (வ 1,12).

நம்மை சுற்றியுள்ள அநேகருக்கு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பற்றித் தெரியாது, ஆனால் அவர்களுக்கு நம்மைத் தெரியும். தேவன் தாமே நற்செய்தியை மற்றவர்கள் ஏற்கும் வண்ணம், நாம் பிரதிபலிக்கவும், வெளிப்படுத்தவும் உதவி செய்வாராக.-

தேவனிடம் வீட்டிற்கு திரும்புதல்

ஒரு மாலை வேளையில், ஒரு கட்டுமான பகுதியருகில் நான் ஜாகிங் செய்து கொண்டிருந்தபோது, ​​ஒல்லியான, அழுக்கான பூனைக்குட்டி ஒன்று என்னையே ஏக்கத்தோடு பார்த்து, பின்தொடர்ந்து வீட்டிற்கு வந்தது. இன்று, மிக்கி ஒர் ஆரோக்கியமான, அழகான வளர்ந்த  பூனை. எங்கள் வீட்டில் வசதியான வாழ்க்கையை அனுபவித்து, என் குடும்பத்தினரால் மிகவும் நேசிக்கப்படுகிறது. நான் அதைக் கண்ட சாலையில் ஜாகிங் செய்யும்போதெல்லாம், "நன்றி தேவனே" என்று அடிக்கடி நினைப்பேன். மிக்கி தெருவிலிருந்து மீட்கப்பட்டது. அதற்கு இப்போது வீடு உள்ளது.

சங்கீதம் 91, தேவனை தங்கள் அடைக்கலமாக்கி "உன்னதமானவரின் மறைவில்" இருப்பவர்களைப் பற்றிப் பேசுகிறது (வ.1) . இதிலுள்ள "தங்குவான்" என்பதின் எபிரேய பதத்திற்கு "நிலைத்திருத்தல், நிரந்தரமாகத் தங்குதல்" என்று அர்த்தம். நாம் அவரில் நிலைத்திருக்கும்போது, ​​அவருடைய ஞானத்தின்படி வாழவும், எல்லாவற்றிற்கும் மேலாக அவரை நேசிக்கவும் நமக்கு உதவுகிறார் (வ.14; யோவான் 15:10). நித்தியத்திற்கும் அவருடன் இருக்கப்போகும் ஆறுதலையும், பூமிக்குரிய கடினங்களிலும் நம்முடன் இருக்கும் அவரது  பாதுகாப்பையும் தேவன் நமக்கு வாக்களிக்கிறார். பிரச்சினைகள் வந்தாலும் அவருடைய சர்வ ஆளுகை, ஞானம், அன்பு நம்மைப் பாதுகாத்து விடுவிக்குமென்ற அவருடைய வாக்குத்தத்தங்களில் நாம் இளைப்பாறலாம்.

நாம் தேவனை அடைக்கலமாகக் கொள்கையில், ​​நாம் "சர்வ வல்லவரின் நிழலில்" வாழ்கிறோம் (சங்கீதம் 91:1). அவருடைய எல்லையற்ற ஞானமும் அன்பும் அனுமதிப்பதைத் தவிர எந்த பிரச்சினையும் நம்மைத் தொட முடியாது. இதுவே நமது கூடாரமாகிய தேவனின் பாதுகாப்பு.

நஷ்டம் இல்லை

எனது நண்பர் ரூயல், அவருடைய வகுப்பு மாணவர்கள் ஒருவருடைய வீட்டில் பழைய மாணவர்கள் கூடுகை நிகழ்வு ஒன்றிற்கு சென்றிருந்தார். அந்த மாளிகையில் ஏறத்தாழ இருநூறு பேர் பங்கேற்கும் அளவிற்கு பிரம்மாண்டமாய் இருந்தது. அது இவருக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது. 

ரூயல் என்னிடத்தில், “நான் பல ஆண்டுகள் கிராமப்புறங்களில் இருக்கும் தேவாலயங்களில் ஊழியம் செய்திருக்கிறேன். சில வேளைகளில் என்னுடைய வகுப்பு மாணவர்களின் பொருளாதார வளர்ச்சியை பார்க்கும்போது நான் பொறாமைப்படக்கூடாது என்று எண்ணினாலும் என்னால் தவிர்க்கமுடியவில்லை. நான் ஊழியனாகாமல், பெரிய வியாபாரியாய் மாறியிருந்தால் என் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்று நான் சிலவேளைகளில் யோசிப்பதுண்டு” என்று சொன்னார். 

மேலும் ரூயல் புன்னகையுடன், “அவர்கள் மீது பொறாமைப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை பின்பாக உணர்ந்துகொண்டேன். நான் தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறேன். அது நித்தியமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.” இதை அவர் சொல்லும்போது அவருடைய முகத்தில் தென்பட்ட சமாதானத்தை நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. 

ரூயல் தன்னுடைய சமாதானத்தை மத்தேயு 13:44-46லிருந்து கண்டுபிடித்தார். தேவனுடைய இராஜ்யம் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது என்பதை அவர் அறிந்திருந்தார். அவருடைய இராஜ்யத்தை நாடி அதற்காய் வாழும் வாழ்க்கை என்பது சற்று வித்தியாசமானது. சிலருக்கு அது முழுநேர ஊழியமாய் தெரியலாம், இன்னும் சிலருக்கு தங்களுடைய வேலையிலிருந்தே பகுதிநேரமாய் செய்யும் ஊழியமாய் தெரியலாம். நம்மை தேவன் எந்த ஊழியத்தை செய்ய தெரிந்துகொண்டாலும், இயேசு சொன்ன உவமையில் இடம்பெற்றிருந்த நபர்களைப்போல புதையுண்டிருக்கிற பொக்கிஷமாய் அதைக் கருதி, தொடர்ந்து  அவருடைய நடத்துதலை விசுவாசித்து கீழ்ப்படிவோம். தேவனைப் பின்பற்றுவதைக் காட்டிலும் இந்த உலகத்தில் மேன்மையான ஒன்றை நாம் சுதந்தரிக்க முடியாது (1 பேதுரு 1:4-5). 

நம்முடைய ஜீவியம் அவருடைய கரத்தில் இருக்கும்போது, அது நித்திய கனிகளைக் கொடுக்கும்.