எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கேரன் ஹுவாங்கட்டுரைகள்

எனது நோக்கம் என்ன?

"நான் மிகவும் பயனற்றவனாக உணருகிறேன்" என ஹெரால்டு கூறினார். "விதவைகள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் சொந்த குடும்பங்களுடன் மும்முரமாக இருக்கிறார்கள், சுவரில் நிழல்களைப் பார்த்துக்கொண்டு அமைதியான மதியங்களைச் செலவிடுகிறார்கள்" என அவர் தனது மகளிடம் அடிக்கடி கூறுவார்."நான் வயதாகிவிட்டேன், நிறைவான வாழ்க்கையையும் வாழ்ந்து விட்டேன். இனி எனக்கு எந்த நோக்கமும் இல்லை. தேவன் என்னை எந்த நேரத்திலும் தம்மிடத்திற்கு அழைத்துச் செல்வார்" என்பார். 
  
இருப்பினும், ஒரு பிற்பகல் உரையாடல், ஹெரால்ட்டின் மனதை மாற்றியது. "என் பக்கத்து வீட்டுக்காரருக்கு, அவருடைய குழந்தைகளுடன் சில பிரச்சனைகள் இருந்தது. அதனால் நான் அவருக்காக ஜெபித்தேன்" என்று ஹெரால்டு கூறினார். "பின்னர், நான் அவருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டேன்". அப்பொழுதுதான் என் வாழ்க்கைக்கு இன்னும் ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்! இயேசுவைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்கும் வரை, நான் அவர்களுக்கு இரட்சகரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றார். 
  
ஹெரால்டு தனது விசுவாசத்தை எப்போதும் போன்ற சாதாரண சந்திப்பில் பகிர்ந்தபோது, அவரது அயலகத்தாரின் வாழ்கை மாறியது. 2தீமோத்தேயு 1 ல், அப்போஸ்தலனாகிய பவுல் இன்னொருவரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு, தேவனால் பயன்படுத்தப்பட்ட இரண்டு பெண்களைப் பற்றி குறிப்பிடுகிறார்: 
பவுலின் இளம் சக ஊழியனான தீமோத்தேயுவின் வாழ்க்கையில் அவரது பாட்டி லோவிசாள் மற்றும் தாயார் ஐனிக்கேயாள் ஆகியோர் "மாயமற்ற விசுவாசத்தை" கொண்டிருந்தனர் (வ.5) எனக் காண்கிறோம். ஒரு சாதாரண குடும்பத்தில் அன்றாட நிகழ்வுகள் மூலம், இளம் தீமோத்தேயு ஒரு மாயமற்ற விசுவாசத்தைக் கற்றுக்கொண்டார். அவனுடைய வள வளர்ச்சி, இயேசுவின் உண்மையுள்ள சீஷனாகவும், இறுதியில் எபேசு தேவாலயத்தின் தலைவனாக அவனுடைய ஊழியத்தை வடிவமைத்தது. 
  
நம்முடைய வயது, பின்னணி அல்லது சூழ்நிலை எதுவாக இருந்தாலும், இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் நமக்கும் உண்டு

நீங்கள் தனிமையாயிருக்கும்போது

இரவு 7 மணியளவில், ஹ_ய்-லியாங் தனது சமையலறையில் அரிசி உணவையும் மீதியான மீன்களையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பக்கத்து அபார்ட்மெண்டில் இருந்த சுவா குடும்பமும் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அங்கு எழுந்த அவர்களின் சிரிப்பு மற்றும்  உரையாடலின் சத்தமானது ஹ_ய்-லியாங்கின் அமைதியை பாதித்தது. அவருடைய மனைவி இறந்ததிலிருந்து அவர் அந்த வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். அவர் தனிமையோடு வாழக் கற்றுக்கொண்டார். அது ஒருவகையான மனவலியை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அவருடைய மேசையில் இருந்த உணவும் அதை உண்ணும் குச்சியும் அவரை வெகுவாய் பாதித்தது.  
அவர் படுக்கைக்கு செல்லும் முன்பு, ஹ_ய்-லியாங் அவருக்கு பிரியமான சங்கீதம் 23ஐ வாசித்தார். அவரை வெகுவாய் பாதித்த வார்த்தைகள் “தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” (வச. 4) என்பதே. ஒரு மேய்ப்பன் ஆடுகளோடு இடைபடும் இயல்பான செய்கையை விடுத்து, அந்த ஆட்டின் அனைத்து காரியங்களிலும் தலையிட்டு அதைப் பாதுகாக்கும் மேய்ப்பனை இவ்வார்த்தை பிரதிபலிக்கிறது (வச. 2-5). அது ஹ_ய்-லியாங்கிற்கு ஆறுதலளித்தது.  
நமக்காக அல்லது நம்முடன் யாரோ இருக்கிறார்கள் என்பது தனிமையான நேரங்களில் மிகவும் ஆறுதலாயிருக்கிறது. தேவனுடைய தெய்வீக அன்பானது அவருடைய பிள்ளைகளின் மீது எப்போதும் இருக்கும் என்று வாக்களிக்கிறார் (சங்கீதம் 103:17). அவர் நம்மை விட்டு விலகுவதில்லை (எபிரெயர் 13:5). நம்முடைய சமையலறையிலோ, பேருந்தும் வேலைக்கு செல்லும்போதோ, ஜனநெருக்கடியான சந்தைகளிலோ, எங்கெல்லாம் நாம் தனிமையாய் உணருகிறோமோ, அங்கெல்லாம் நம் மேய்ப்பன் நம்மோடிருக்கிறார். “தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” என்று நாமும் சொல்வோம்.

உங்கள் வியாகுலங்கள் கேட்கப்பட்டது

“இயற்பியல்” என்ற புத்தகத்தில், ஆசிரியர்கள் சார்லஸ் ரிபோர்க் மான் மற்றும் ஜார்ஜ் ரான்சம் ட்விஸ் ஆகியோர், “யாருமில்லாத தனிமையான காட்டில் மரம் விழுந்தால், அந்த சத்தத்தைக் கேட்க அருகில் எந்த மிருகமும் இல்லையென்றால், அது ஒலி எழுப்புமா?” என்ற கேள்வியை கேட்கிறார்கள். பல ஆண்டுகளாக, இந்த கேள்வி, ஒலி, உணர்தல் மற்றும் இருப்பு பற்றிய தத்துவ மற்றும் அறிவியல் விவாதங்களைத் தூண்டியது. இருப்பினும், ஒரு உறுதியான பதில் இன்னும் கண்டறியப்படவில்லை.  
ஒரு நாள் இரவில் நான் சோர்ந்துபோய் கவலையாயிருந்த தருணத்தில், நான் யாரிடத்திலும் சொல்லாமல், இந்த கேள்வியைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தேன்: “உதவிக்கான என்னுடைய அழுகுரலுக்கு யாருமே செவிகொடுக்காத வேளையில், தேவன் அதைக் கேட்கிறாரா?” 
116-ம் சங்கீதத்தை எழுதியவர், மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டு, பாடுகள் அனுபவித்ததால், கைவிடப்பட்டவராக உணர்ந்திருக்கலாம். எனவே அவர் தேவனை அழைத்தார். அழைத்தால் அவர் கேட்கிறார், கேட்டு அவருக்கு உதவிசெய்வார் என்பதை அறிந்திருந்தார். “கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால்… அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால்..” அவரை தொழுதுகொள்வதாக சங்கீதக்காரன் அறிவிக்கிறான் (வச. 1-2). நம்முடைய வேதனையை யாரும் அறியாத நேரத்தில் தேவன் அறிகிறார். நம்முடைய அழுகுரலை யாரும் கேட்காதவேளையில் தேவன் கேட்கிறார்.  
கடினமான தருணங்களில் தேவன் தன்னுடைய அன்பையும் பாதுகாப்பையும் அருளுவார் என்று அறிந்து, இளைப்பாறலாம் (வச. 7). “இளைப்பாறுதல்” (மனோக்) என்பதற்கு பயன்படுத்தப்படும் எபிரெய வார்த்தையானது யாருமில்லாத பாதுகாப்பான ஓர் இடத்தைக் குறிக்கிறது. தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற உறுதியுடன் நாம் இளைப்பாறுதலையும் உதவியையும் பெற்றுக்கொள்ளலாம்.  
அந்த இரண்டு இயற்பியல் ஆசிரியர்கள் கேட்ட கேள்வியானது பல்வேறு பதில்களை கொண்டுவந்தது. ஆனால் தேவன் நம்முடைய வியாகுலத்தைக் கேட்கிறாரா? என்னும் கேள்விக்கு ஆம்! என்ற ஒற்றை பதில் மட்டுமே உள்ளது.  

சுவிசேஷத்திற்காக

1917 ஆம் ஆண்டு தனது 23ம் வயதில் நெல்சன் தனது சொந்த மாநிலமாகிய வெர்ஜீனியாவில் தனது மருத்துவப் படிப்பை முடித்தார். பிறகு சீனாவில் சுமார் இரண்டு மில்லியன் சீன குடியிருப்புகள் உள்ள ஒரு பகுதியில் "லவ் அண்ட் மெர்சி" என்ற அந்த ஒரே மருத்துவமனையில் புதிய கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார். அவர் தனது குடும்பத்துடன் 24 வருடங்கள் அப்பகுதியில் வசித்து, அம்மருத்துவமனையை நடத்தி , அறுவை சிகிச்சை செய்தும், ஆயிரக்கணக்கான மக்களிடம் நற்செய்தியைப் பகிர்ந்தும் வந்தார். அம்மக்களால் முன்னர் "அயல்நாட்டுப் பிசாசு" என்ற பெயர் பெற்ற அதே நெல்சன் பெல் இப்பொழுது "சீன மக்களை நேசிக்கும் பெல்" என்ற பெயர் பெற்றார். அவரின் மகள்தான் சுவிசேஷகர் பில்லி கிரஹாமின் மனைவி ரூத் ஆவார்.        

நெல்சன், திறமையான அறுவை சிகிச்சை நிபுணராகவும், வேதாகம ஆசிரியராக இருந்தாலும், அவருடைய பண்பும், வாழ்க்கை முறையும் தான் அநேக மக்களை இயேசுவிடம் திருப்பியது. புறஜாதியாருக்குத் தலைவனாய் கிரேத்தாவில் உள்ள சபையைக் கண்காணித்துக் கொண்டிருந்த அந்த இளம் தீத்துவுக்கு, பவுல் தனது கடிதத்தில் கிறிஸ்துவைப் போல் வாழ்வது மிகவும் முக்கியம் எனவும், அது சுவிசேஷத்தை அலங்கரிக்கிறதெனவும் குறிப்பிடுகிறார் (தீத்து 2 : 10). ஆனாலும் நாம் நமது சுயபலத்தில் இதைச் செய்வதில்லை. தேவனுடைய கிருபை நம்மை சுயக் கட்டுப்பாட்டோடும், நேர்மையோடும், தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்ந்து, விசுவாசத்தின் சத்தியத்தைப் பிரதிபலிக்கச் செய்கிறது (வ 1,12).

நம்மை சுற்றியுள்ள அநேகருக்கு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பற்றித் தெரியாது, ஆனால் அவர்களுக்கு நம்மைத் தெரியும். தேவன் தாமே நற்செய்தியை மற்றவர்கள் ஏற்கும் வண்ணம், நாம் பிரதிபலிக்கவும், வெளிப்படுத்தவும் உதவி செய்வாராக.-

தேவனில் அன்பைக் கண்டடைதல்

சிறுவயதில், “நீ பெரியவனாகி என்னவாக விரும்புகிறாய்?” என்று கேட்டாலே, முகில், "நான் மனோஜை போல இருக்க விரும்புகிறேன்" என்பான். முகிலின் மூத்த சகோதரன் தடகள வீரன், சகஜமாகப் பழகுபவன் மற்றும் மரியாதைக்குரிய மாணவன். மறுபக்கம் முகிலோ "நான் விளையாட்டில் மோசமானவன், பயந்தவன், கற்றல் குறைபாட்டுடன் போராடினேன். நான் எப்போதும் மனோஜுடன் நெருங்கிய உறவை விரும்பினேன், ஆனால் அவனோ விரும்பவில்லை. அவன் என்னை 'சலிப்பானவன்' என்று அழைத்தான்" என்றான்.

முகில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை, தனது மூத்த சகோதரனின் அன்பைப் பெறுவதிலேயே வீணாகச் செலவிட்டான். மாறாக, முகில் இயேசுவைப் பின்பற்றுபவனாக ஆனபோதுதான், தன் இரட்சகரின் அன்பில் இளைப்பாறிடக் கற்றுக்கொண்டான்.

யாக்கோபின் முதல் மனைவியான லேயாள், தன் வாழ்நாளின் பெரும்பகுதியில் தன் கணவனின் அன்பை நாடினாள் (ஆதியாகமம் 29:32-35). இருப்பினும், யாக்கோபு ராகேலிடம் பட்சமாய் இருந்தார். ஆனால் தேவன் லேயாளின் அவல நிலையைக் கண்டு அவள் வாழ்வில் நிராகரிக்கப்பட்டதற்கு ஈடுசெய்தார். அவர் அவளை ஒரு தாயாக அனுக்கிரகம் செய்து ஆசீர்வதித்தார், அக்காலத்தில் அவளுடைய கலாச்சாரத்தில் அது ஒரு பெரிய கனம் (வ.31). தன் கணவனால் கண்டுகொள்ளப்படாதவளாக, செவிகொடுக்கப்படாதவளாக இருந்த லேயாள்,  தேவனில் அன்புடன் பார்க்கப்பட்டாள், கேட்கப்பட்டாள் (வ.32-33). அவள் ஒரு மகளையும் ஆறு மகன்களையும் பெற்றெடுத்தாள், அவர்களில் ஒருவர் யூதா, இயேசுவின் முன்னோர். அவள் அவனுடைய பிறப்பின்போது, " இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்" (வ.35) என்று கூறினாள். லேயாள் கானானில் நீண்ட காலம் வாழ்ந்தாள், மேலும் யாக்கோபின் குடும்பத்துடன் கனத்துக்குரிய இடத்தில் அடக்கம் செய்யப்பட்டாள் (49:29-32).

நாம் நிராகரிப்பை அனுபவிக்கும் போது, ​​லேயாளின் கதையால் ஆறுதல் காண்போம். நாம் இழந்ததை ஈடுசெய்யும் தேவனின் அன்பில் நாம் இளைப்பாறலாம்.

தேவனின் வாக்குத்தத்தங்கள்

என் தந்தைக்கு நினைவாற்றல் குறைவதைப் பார்ப்பது எனக்கு வேதனையாக இருந்தது. ஞாபகமறதி நோய் கடூரமானது, இது ஜனங்களின் நினைவாற்றலை அளித்து அவர்களுடைய வாழ்க்கையைக் குறித்த ஞாபகங்களை முற்றிலும் அழிக்க வல்லது. ஒரு இரவு, ஒரு கனவு கண்டேன். அதன்மூலம் தேவன் என்னைத் திடப்படுத்தினார் என்று நான் நம்புகிறேன். அந்த கனவில், தேவனின் கரத்தில் ஒரு சிறிய பொக்கிஷ பெட்டி இருந்தது, அவர் என்னிடம் “உன் தந்தையின் நினைவுகள் எல்லாம் பத்திரமாக இதில் வைக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இது என்னிடமே இருக்கட்டும், பின் ஒருநாள் பரலோகத்தில் அவரிடமே இதைக் கொடுத்து விடுகிறேன்” என்றார்.

பின்வந்த ஆண்டுகளில், என் தந்தைக்கு நான் யாரென்றே மறந்துபோனபோதும்கூட, இந்த கனவு என்னைத் தேற்றியது. அவருடைய இந்த வியாதி தற்காலிகமானது என்பதையும் நினைவுகொள்வேன். அவர் தேவனுடைய பிள்ளையாக இருப்பதினால், அவர் ஒருநாளில் முழுமையாக புதுப்பிக்கப்படுவார்.

உபத்திரவத்தை பவுல் இலேசானதென்றும் தாற்காலிகமானதென்றும் (2 கொரிந்தியர் 4:17) விவரித்ததையும் நான் நினைவில்கொள்ள இது உதவியது. அப்போஸ்தலன் உபத்திரவத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை, அவரும் அநேக உபத்திரவங்கள் பட்டிருந்தார் (வ.7-12). நித்தியத்தின் வெளிச்சத்திலும், கிறிஸ்துவிலுள்ள நமது எதிர்கால மகிமையிலும் நமது பாடுகள் எல்லாம் தற்காலிகமாகவும், இலேசானதாகவும் தோன்றும் என்பதையே அவர் வலியுறுத்தினார். இயேசுவுக்குள் நாம் இப்போது பெற்றிருக்கும் அனைத்து மகிமையான ஆசீர்வாதங்களும், ஒருநாளில் நாம் அனுபவிக்கப்போகும் ஆசீர்வாதங்களும் நித்தியகாலத்திற்கும் பாடுகளைக்காட்டிலும் பெரிதானவையாக இருக்கும் (வ.17)

நாம் மனந்தளர வேண்டியதில்லை, காரணம் தேவனும் அவரின் வாக்குத்தத்தங்களும் நமக்குண்டு. நாம் பாடுபட்டாலும், நம்மை நாளுக்குநாள் புதிதாக்கும் (வ.16) அவரது வல்லமையை நம்பி விசுவாசத்தில் நாம் வாழமுடியும். அவருடைய நித்திய வாக்குகளை (வ.18) நோக்கியிருப்போமாக.

 

அறியாதவைகளை குறித்த பயம்

புத்தாண்டின் முதல் நாள் அதிகாலை 3 மணிக்கு, பயந்து விழித்தேன். வரப்போகும் ஆண்டு என்னைப் பயத்தால் மூழ்கடித்தது. குடும்பத்தில் உண்டான வியாதி, என்னை நீண்ட காலமாகச் சோர்வடையச் செய்திருந்தது, இப்போதோ எதிர்காலத்தைப் பற்றிய யோசனைகள் என்னைப் பயமுறுத்தியது. இன்னும் மோசமான விஷயங்கள் நடக்குமோவென்று நான் திகைத்தேன்.

அரங்கேறின மோசமான சம்பவங்கள் உண்டாக்கிய பயத்தை இயேசுவின் சீஷர்கள் புரிந்துகொண்டனர். அவர் மரிப்பதற்கு முந்தைய நாளே அவர்களின் எஜமானர் அவர்களை ஆயத்தப்படுத்தி உறுதியளித்திருந்தாலும், அவர்கள் இன்னமும் பயந்ததிருந்தனர். அவர் கைது செய்யப்பட்டபோது அவர்கள் தப்பி ஓடினர் (மத்தேயு 26:56); பேதுரு அவரை மறுதலித்தார் (யோவான் 18:15-17, 25-27), அவர்கள் ஒளிந்துகொண்டனர் (20:19). இயேசு கைது செய்யப்பட்டு சிலுவையில் அறையப்படுகையிலும், அவர் உபத்திரவப்பட்டபோதும் ஏற்பட்ட கிளர்ச்சியினால் உண்டான பயத்தனிமித்தம், அவர்கள் "திடன்கொள்ளுங்கள்" என்ற அவரது கட்டளைக்கும், "நான் உலகத்தை ஜெயித்தேன்" (16:33) என்ற அவரது வாக்குத்தத்தத்திற்கும் எதிராகச் செயல்பட்டனர்.

ஆனால் கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும், வாழ்வின் மீதும் மரணத்தின் மீதுமான அவருடைய அதிகாரத்தையும் வல்லமையையும் நிரூபித்தது. அவருக்கே இறுதி வெற்றி. நம்முடைய உலகத்தின் பாவ நிலைமை துன்பத்தைத் தவிர்க்க முடியாததாகச் செய்திருந்தாலும், ஞானமும் அன்பும் நிறைந்த நமது தேவனின் அதிகாரத்திற்கு அனைத்தும் கீழ்ப்பட்டவை என்ற சத்தியத்தில் நாம் இளைப்பாறலாம். இயேசுவின் பிரசன்னம் நம்மோடு உண்டு (16:32-33), அவருடைய சீடர்களோடுமிருந்தது, அதனால் நம்பிக்கையுடன் உலகிற்கு நற்செய்தியைப் பகிர்ந்தனர். தேவன் அனைத்தையும் ஆள்கிறார் என்ற வாக்குத்தத்தம், இந்தப் புத்தாண்டில் அவரை நம்புவதற்கும், எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று நமக்குத் தெரியாதபோதும் தைரியமாக இருப்பதற்கும், நம் உள்ளங்களைத் திடப்படுத்தட்டும்.

தேவன் என்னை அறிவார்

எங்கள் குழந்தைப்பருவ கதைப் புத்தகத்தை என் சகோதரி கண்டுபிடித்தபோது, ​​இப்போது எழுபதுகளில் இருக்கும் என் அம்மா மகிழ்ச்சியடைந்தார். தேனைத் திருடிய கரடியைக் கோபமான தேனீக் கூட்டம் துரத்திய கதையின் அனைத்து வேடிக்கையான சம்பவங்களும் அவருக்கு நினைவிலிருந்தன. மேலும், கரடி தப்பிப்பிழைப்பதை எதிர்பார்த்து நானும் என் சகோதரியும் எவ்வாறு சிரித்தோம் என்பதையும் அவள் நினைவு கூர்ந்தாள். "நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எப்பொழுதும் கதைகளைச் சொன்னதற்காக நன்றி" என்று நான் என் அம்மாவிடம் சொன்னேன். சிறுவயதில் நான் எப்படி இருந்தேன் என்பது உட்பட எனது முழு கதையும் அவளுக்குத் தெரியும். இப்போது நான் வளர்ந்த பின்னும், அவள் இன்னும் என்னை அறிந்திருக்கிறாள், புரிந்துகொள்கிறாள்.

தேவனும் நம்மை அறிவார். நம்மைக் காட்டிலும், எந்த மனிதனைக் காட்டிலும்  ஆழமாக அறிவார். அவர் நம்மை, "ஆராய்ந்து அறிந்திருக்கி(றார்)றீர்" (சங்கீதம் 139:1) என்று தாவீது கூறுகிறார். தமது அன்பினால் அவர் நம்மை ஆராய்ந்து, நம்மை முழுமையாகப் புரிந்துகொள்கிறார். தேவன் நம் நினைவுகளை அறிவார், நாம் வார்த்தைகளின் காரணங்களையும் அர்த்தங்களையும் புரிந்துகொள்கிறார் (வ. 2, 4). நம்மை நாமாக்கும்  ஒவ்வொரு காரணிகளையும் அவர் அந்தரங்கமாக அறிந்தவர், மேலும் நமக்கு உதவ  இந்த அறிவை பயன்படுத்துகிறார் (வ. 2-5). நம்மை அதிகம் அறிந்தவர் வெறுத்து விலகாமல், தமது அன்புடனும் ஞானத்துடனும் நம்மை நெருங்குகிறார்.

நாம் தனிமையானவராக, கண்டுகொள்ளப்படாதவராக   அல்லது மறக்கப்பட்டவராக உணரும்போது, ​​தேவன் எப்போதும் நம்முடன் இருக்கிறார், நம்மைக் காண்கிறார், நம்மை அறிவார் என்ற சத்தியத்தில் நாம் இடரற்றிருக்க முடியும் (வ. 7-10). பிறர் அறியா நமது அனைத்து பக்கங்களையும், இன்னும் பலவற்றையும் அவர் அறிவார். தாவீதைப் போலவே நாமும் நம்பிக்கையுடன், “நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர். . . . . உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்” (வ. 1, 10) எனலாம்.

ஜெபத்தில் தரித்திருத்தல்

அடுமணை (ரொட்டி சுடுதல்)  உதவியாளரான உஷா, முந்திரிப்பழ ரொட்டியைத் திருடுவதாக அவரது மேற்பார்வையாளர் குற்றம் சாட்டியபோது, ​​தன்னைத் தற்காத்துக் கொள்ள மிகவும் உதவியற்றவராக உணர்ந்தார். ஆதாரமற்ற தீர்ப்பு  மற்றும் அதற்கான சம்பளப் பிடித்தம் ஆகியவை அந்த  மேற்பார்வையாளரின் பல தவறான செயல்களில் இரண்டு மட்டுமே. "தேவனே, தயவாய் உதவும். அவளின் கீழ் வேலை செய்வது மிகவும் கடினம், ஆனால் எனக்கு இந்த வேலை தேவை", என உஷா ஒவ்வொரு நாளும் ஜெபித்தாள்.

இதேபோல் உதவியற்றவளாக உணர்ந்த ஒரு விதவையைப் பற்றி இயேசு கூறுகிறார், அவள் "எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும்" (லூக்கா 18:3) என்றிருந்தாள். தன் வழக்கைத் தீர்க்க அதிகாரம் உள்ள ஒரு நீதிபதியிடம் சென்றாள். அந்த நீதிபதி அநியாயம் செய்பவர் என்று தெரிந்திருந்தும், அவரை அணுகுவதில் விடாப்பிடியாக இருந்தாள்.

நீதிபதியின் இறுதி பதில் (வ.4-5) அன்புடனும் உதவியுடனும் விரைவாகப் பதிலளிக்கும் (வ.7) நம் பரலோகத் தகப்பனிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. விடாமுயற்சி, ஒரு அநீதியான நீதிபதி ஒரு விதவையின் வழக்கை விசாரிக்க செய்யக்கூடும் என்றால், நீதியுள்ள நீதிபதியாக இருக்கும் தேவன் நமக்காக எவ்வளவு அதிகமாகச் செய்ய முடியும்? (வ.7-8). "தம்மால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?" (வ.7) என்று நாம் அவரை நம்பலாம். மேலும், ஜெபிப்பதில் விடாமுயற்சியுடன் இருப்பது நமது நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். நம்முடைய சூழ்நிலைக்கு, தேவன் தமது  பரிபூரண ஞானத்தின்படி பதிலளிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதால் நாம் தொடா்ந்து நிலைத்திருக்கிறோம்.

இறுதியில், உஷாவின் மேற்பார்வையாளர் மற்ற பணியாளர்கள் தனது  நடத்தையைப் பற்றி புகார் செய்ததை அடுத்து ராஜினாமா செய்தார். நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது; ​நம்முடைய ஜெபங்களின் வல்லமையானது, அதனைக் கேட்டு நமக்கு உதவுகிறவரிடமே இருக்கிறது என்பதை அறிந்து, ஜெபிப்பதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக.