செய்தியாளர்
“நான் உனக்கு ஒர செய்தி வைத்திருக்கின்றேன்” என்று கூறி, நான் பங்கு பெறும் கருத்தரங்கில் பணிபுரியும் ஒரு பெண்மணி என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தாள். நான் சற்று அதிர்ச்சியடைந்ததோடு, உணர்ச்சிவசப்பட்டேன். ஆனால், நான் அதில் உன் சகோதரிக்கு குழந்தை பிறந்துள்ளது” என்ற செய்தியை வாசித்து மகிழ்ந்தேன்.
செய்திகள் நல்லதாகவோ, கெட்டதாகவோ அல்லது சாவால்களைத் தரும் வார்த்தைகளாகவோ இருக்கலாம். பழைய ஏற்பாட்டில், தேவன் தமது தீர்க்கதரிசகளை நம்பிக்கைத் தரும் செய்திகளைக் கொடுக்கவும் நியாயத்தீர்ப்பினை வழங்கவும் பயன்படுத்தினார். ஆனால், நாம் அச்செய்திகளை சற்று ஆழ்ந்துபார்த்தால், அவருடைய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் கூட மனந்திரும்பலுக்கும், சுகமளிக்கவும், மீட்கப்படவும் வழிநடத்துவதாகயிருக்கும்.
இரண்டு வகையான செய்திகளை மல்கியா 3ல் காணலாம். தேவன் ஒரு செய்தியாளரை அனுப்பி, அவன் தனக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான் என வாக்களிக்கின்றார். யோவான் ஸ்நானகன் மெய்யான செய்தியாளரின் வருகையை முன்னறிவிக்கின்றார் (மத். 3:11). “அந்த உடன்படிக்கையின் செய்தியாளர்” இயேசுகிறிஸ்து (மல். 3:1) அவர் தேவனுடைய வாக்குத்தத்ததை நிறைவேற்றுவார். “அவர் புடமிடுகிறவனுடைய அக்னியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும்” இருப்பார் (வச. 2). அவர் தமது வார்த்தையை நம்புகிறவர்களைச் சுத்திகரிப்பார். தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம் ஜனங்களைச் சுத்திகரிப்பார். ஏனெனில், அவர் தம் ஜனங்களின் நல்வாழ்வின் மீது அக்கரை கொண்டுள்ளார்.
தேவனுடைய செய்தி, அன்பு, நம்பிக்கை மற்றும் விடுதலையைக் கொடுக்கும் செய்தி. அவர் தம் குமாரனையே செய்தியாளராக அனுப்புகின்றார். அவர் நம் மொழியில் பேசுகின்றார். சில வேளைகளில் நம்மைத் திருத்தும் செய்தியைத் தருகின்றார். ஆனால், எப்பொழுதும் நம்பிக்கையைத் தரும் செய்தியையே தருகின்றார். நாம் அவருடைய செய்தியை முற்றிலும் நம்பலாம்.
ஒரு கிறிஸ்மஸ் கடிதம்
ஒவ்வொரு கிறிஸ்மஸ் காலத்திலும் என்னுடைய நண்பனொருவன், அந்த ஆண்டில் நடந்த எல்லாக் காரியங்களைக் குறித்தும், எதிர்கால கனவுகளைப்பற்றியும் தன் மனைவிக்கு நீண்ட கடிதம் எழுதுவான். தான் அவளை மிகவும் நேசிப்பதாகவும் அதற்கான காரணம் என்னவென்றும் எழுதுவான். தன்னுடைய ஒவ்வொரு மகளுக்கும் இதேப்போன்று கடிதம் எழுதுவான். அவனுடைய அன்பின் வார்த்தைகள் மறக்கமுடியாத கிறிஸ்மல் பரிசாக அமையும்.
உண்மையான கிறிஸ்மஸ் அன்பின் கடிதம் எதுவெனில், ‘வார்த்தை மாம்சமானார்’ என்பதே. யோவான் இந்த உண்மையை சுவிசேஷத்தில் முக்கியப்படுத்திக் காட்டியுள்ளார். “ஆதியிலே வார்த்தையிருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது” (யோவா. 1:1) பழங்கால கிரேக்கத் தத்துவங்கள் வார்த்தையை ஓர் உன்னத மனம் அல்லது உண்மையோடு இணைக்கப்படல் எனக் குறிப்பிடுகின்றன. ஆனால், யோவான் வார்த்தையை ஒரு மனிதனாக வெளிப்படுத்துகின்றார். தேவக் குமாரனாகிய இயேசு ஆதியில் தேவனோடு இருந்தார் (வச. 2). இந்த வார்த்தை பிதாவினுடைய “ஒரே பேரானக் குமாரன்” மாம்சமாகி, நம்மிடையே வாசம்பண்ணினார் (வச. 14) வார்த்தையாகிய இயேசுவின் மூலம் தேவன் தம்மை முழுமையாக வெளிப்படுத்தினார்.
வேத அறிஞர்கள் இந்த அழகிய மர்மத்தோடு பல நூற்றாண்டுகளாகப் போராடிக் கொண்டிருந்தனர். நாம் முழுமையாக புரிந்து கொள்ளாவிடினும் வார்த்தையாகிய இயேசு நம்முடைய உலகின் இருளை நீக்க வந்த மெய்யான ஒளி (வச. 9). நாம் அவரை நம்புவோமேயாகில் நாம் தேவனுடைய அன்புப் பிள்ளைகள் என்கின்ற பரிசைப் பெற்று அநுபவிக்கலாம்.
இயேசுவே நமக்குத் தரப்பட்ட அன்பின் கடிதம் அவர் வந்து நம்மிடையே வாசம் பண்ணுகின்றார். இது ஓர் ஆச்சரியமான கிறிஸ்மஸ் பரிசு.
கண்ணுக்குப் புலப்படாத ஊழியம்
ஒரு பெரிய கல்வித்திட்டம் எனக்கு மிக மன அழுத்தத்தைத் தந்தது. குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க முடியுமா என்று அதிக கவலைப்பட்டேன். சவாலான அந்த நேரத்தில் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டிருந்த என் நண்பர்களிடமிருந்து மூன்று உற்சாகக் குறிப்புகளைப் பெற்றேன். ஒவ்வொரு குறிப்பும் “இன்று ஜெபம் செய்யும்போது தேவன் உன்னைப் பற்றி நினைவுபடுத்தினார்” என்று தெரிவித்தது. என் மன நிலையைப்பற்றித் தெரியாமலேயே இந்த நண்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டதால் தாழ்மையையும், உற்சாகத்தையும் ஒருசேர உணர்ந்தேன். தேவன் அவரின் அன்பின் தூதுவர்களாக அவர்களை உபயோகப்படுத்தியதாக நம்பினேன்.
கொரிந்து சபை மக்களுக்குக் கடிதம் எழுதியபோது ஜெபத்தின் வல்லமையை பவுல் அப்போஸ்தலர் அறிந்திருந்தார். “விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவி” செய்ததுபோல தேவன் மரணத்தினின்றும் எங்களைத் தப்புவிப்பார் என்றார் (2 கொரி. 1:10-11). தேவன் அவர்கள் ஜெபங்களைக் கேட்டபோது, அநேகர் ஸ்தோத்திரம் செலுத்தியதால் அவர் மகிமைப்படுத்தப்படுவார் (வச. 11). மன்றாட்டு ஊழியத்தில் பவுலின் ஆதரவாளர்களும், என் நண்பர்களும் ஈடுபட்டார்கள். இந்த மன்றாட்டு ஊழியத்தை ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் “கனி கொடுப்பதின்மூலம் பிதாவை மகிமைப்படுத்தும், கண்ணுக்குப் புலப்படாத ஊழியம்” என்கிறார். நமது சிந்தையையும், இருதயத்தையும் இயேசுவில் ஒருமுகப்படுத்தும்போது, நாம் எப்படி ஜெபிக்கிறோம் என்பது உள்பட எப்படி அவர் நம்மை சீர்படுத்துகிறார் என்பதும் நமக்குத் தெரியும். மன்றாட்டு என்ற உண்மையான வெகுமதியை நாம் நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், முன்பின் தெரியாதவர்களுக்கும்கூட அளிக்க அவர் நமக்கு உதவுகிறார்.
யாருக்காகவேனும் ஜெபம் செய்ய தேவன் உங்கள் சிந்தையையும் இருதயத்தையும் ஏவி இருக்கிறாரா?
நரிகளைப் பிடித்தல்
கடலை ஒட்டி வசிக்கும் என் தோழியுடன் தொலைபேசியில் பேசும்போது, பின்னணியில் கேட்ட கடல் பறவைகளின் சத்தத்தைக் குறித்த என் சந்தோஷத்தை அவளிடம் தெரிவித்தேன். “அவற்றை நான் வெறுக்கிறேன்” என்றாள். ஏனென்றால் அவளுக்கு அந்தப் பறவைகள் தினமும் இடையூறு தருவதாக இருந்தன. லண்டன்வாசியான நான் நரிகளைப்பற்றி இதே மனப்பாங்கு கொண்டிருக்கிறேன். என் கண்களுக்கு அவை அழகிய விலங்குகளாகத் தெரிவதில்லை. மாறாக, தாங்கள் செல்லும் வழியில் அசிங்கம் செய்து நாற்றத்தை ஏற்படுத்தும் சுற்றித்திரியும் விலங்குகளாகப் பார்க்கிறேன்.
பழைய ஏற்பாட்டின் உன்னதப்பாட்டு புத்தகத்தில் நரிகளைப் பற்றிப் படிக்கிறோம். இதில் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான அன்பு வெளிப்படுகிறது. இது தேவனுக்கும் அவர் ஜனங்களுக்கும் இடையிலான அன்பை வெளிப்படுத்துவதாக சில வேதாகம விளக்க உரையாளர்கள் நம்புகிறார்கள். சிறு நரிகளைப் பற்றி எச்சரிக்கும் மணப்பெண், அவற்றைப் பிடிக்கும்படி மணமகனிடம் கூறுகிறாள் (2:15). ஏனென்றால் திராட்சப்பழங்களை விரும்பும் நரிகள், இளம் செடிகளை சேதப்படுத்தக்கூடும். தங்கள் திருமண வாழ்க்கையை எதிர்நோக்கி இருக்கும் மணப்பெண், தீங்கு விளைவிக்கும் எந்த விலங்கும் தங்கள் அன்பின் உடன்படிக்கைக்கு இடையூறு ஏற்படுத்துவதை விரும்பவில்லை.
“நரிகள்” எப்படி நமக்கும் ஆண்டவருக்கும் இடையிலான உறவை சேதப்படுத்தமுடியும்? என்னைப் பொறுத்தவரை, அநேக வேண்டுகோள்களுக்கு சரி என்று சொல்லும்போது, என்னால் சமாளிக்க முடியாமல், மனதளவில் அதிக சோர்வுற்று மகிழ்ச்சியில்லாமல் இருப்பேன். அல்லது மனிதர்களுக்கு இடையிலான பிரச்சினைகளைப் பார்க்கும்போது, விரக்தி அல்லது கோபம் ஏற்படும். நான் அடைக்க மறந்த வாசல் வழியாக அல்லது வேறு ஏதோ வழியில் அவை உள்ளே நுழைந்துவிடும் இப்படிப்பட்ட “நரிகளின்” பின்விளைவுகளைக் கட்டுப்படுத்தும்படி நான் தேவனிடம் கேட்கும்போது – அவரது அன்பின் பிரசன்னத்தையும், வழிநடத்துதலையும் உணர்ந்து, அவரைக்குறித்த அன்பிலும், நம்பிக்கையிலும் வளர்கிறேன்.
நீங்கள் தேவனை கிட்டிச்சேராமல் தடுக்கும் விஷயங்களைக் குறித்து நீங்கள் எப்படி ஆண்டவரின் உதவியை நாடலாம்?
எதிர்பாராத இரக்கம்
ஒரு பெரிய அங்காடியில், தான் வாங்கிய பொருள்களுக்குக் கட்டணம் செலுத்துவதற்காக என் தோழி வரிசையில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு முன்னால் நின்றவர் அவளுடைய கட்டணத்தில் 14 டாலர் குறையும் விதமாக ஒரு ரொக்கச்சீட்டைக் கொடுத்தார். சரியாக தூக்கம் இல்லாமல் நின்ற என் தோழிக்கு இந்த நற்செயல் அழுகையை வரவழைத்தது. பின்னர் அழுததை நினைத்து சிரிக்கத் தொடங்கினாள். அதிகம் சோர்வாயிருந்த தருணத்தில், எதிர்பாராத இந்த இரக்கம், அவள் மனதைத் தொட்டு, அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. வேறொரு நபர் மூலமாக கடவுள் அவளுக்குக் காட்டிய கிருபைக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தினாள்.
எபேசுவில் உள்ள புறஜாதியாரான கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில், பவுல் கொடுப்பது குறித்து எழுதுகிறார். கிருபையால் இரட்சிக்கப்பட்டதால், அவர்களுடைய பழைய வாழ்க்கையை ஒழித்து, புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். நாம் கடவுளுடைய சாயலாக உருவாக்கப்பட்டு, அவர் “செய்கையாக” இருப்பதால், இந்த இரட்சிக்கும் கிருபையில் இருந்து நற்கிரியைகளைச் செய்ய நமக்கு ஆர்வம் பிறக்கிறது (2:10). அந்த அங்காடியில் உள்ள மனிதனைப்போல, நாமும் நம்முடைய அன்றாட செயல்களின்மூலம் கடவுளின் அன்பைப் பகிர முடியும்.
அவருடைய கிருபையைப் பகிர நாம் பொருள்களாகக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய செயல்களின்மூலமும் நாம் அவருடைய அன்பைப் பகிர முடியும். ஒருவர் நம்மோடு பேசும்போது அவர்கள் சொல்வதை கவனமாகக் கேட்க நேரம் ஒதுக்கலாம். நம்மிடம் பணி புரிபவர்களிடம் ‘எப்படி இருக்கிறீர்கள்’ என்று கேட்கலாம். தேவையில் இருக்கும் ஒருவருக்கு உதவலாம். மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது, நாம் சந்தோஷத்தைப் பெறுகிறோம் (அப்போஸ்தலர் 20:35).
சிதறியவற்றை சேகரித்தல்
டான்சானியத் தலைநகர் டோடோமாவில் தரிசாகக் கிடக்கும் ஒரு நிலத்தை என் சிநேகிதி ரூத் பண்படுத்த விரும்பினாள். அங்குள்ள விதவைகளின் தேவைகளை உணர்ந்த ரூத், அவர்கள் நலனுக்காக அந்த தரிசு நிலத்தை சீர்ப்படுத்தி விவசாயம் செய்யவும், கோழி வளர்க்கவும் கூடிய இடமாக மாற்ற நினைக்கிறார். பிறர் தேவை அறிந்து அவர்களுக்கு உதவவேண்டும் என்ற அவளது தொலைநோக்குப் பார்வைக்குக் காரணம் அவள் தேவன்மீது வைத்திருக்கும் அன்பு. மேலும் அவள் பெயர்கொண்ட வேதாகமத்தின் ரூத் அவளுக்கு ஒரு தூண்டுகோல்.
எளியவர்களும், அயல் தேசத்தாரும் வயல்களின் ஓரத்தில் சிந்திய கதிர்களை சேகரித்துக்கொள்ள கர்த்தரின் சட்டம் அனுமதித்தது. (லேவியராகமம் 19:9-10). வேதாகம ரூத் ஒரு அயல்தேசத்தாள். எனவே அவள் தனக்கும், தன் மாமியாருக்கும் சாப்பிட சேகரிக்கும்படியாக வயலில் அனுமதிக்கப்பட்டாள். நெருங்கிய உறவினரான போவாஸின் வயலில் அவள் சிதறிய கதிர்களைப் பொறுக்கியதால் அவளுக்கும், நகோமிக்கும் வீடும், பாதுகாப்பும் கிடைத்தது. அன்றைய தினத்தின் வேலையாக, வயல் ஓரங்களில் உள்ள சிதறிய கதிர்களை சேகரிப்பதற்கு, ரூத் தன் முயற்சி மற்றும் புத்திகூர்மையை உபயோகித்தாள். கர்த்தர் அவளை ஆசீர்வதித்தார்.
என் தோழி ரூத்தின் ஆர்வமும், வேதாகம ரூத்தின் அர்ப்பணிப்பும், கர்த்தர் எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை எப்படிக் காக்கிறார் என்பதை உணர்த்தி, அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்த என்னைத் தூண்டுகின்றன. சமூகத்தில் உள்ளவர்களுக்கு உதவவும், அது ஜீவனுள்ள நம் தேவனுக்கு நன்றிசெலுத்தும் விதமாக அமையவும், அவர்கள் எனக்குத் தூண்டுதலாக அமைகிறார்கள். கர்த்தரின் கருணையை நாம் மற்றவர்களுக்குக் காண்பிப்பதன்மூலம் நாம் எவ்வாறு தேவனை சேவிக்கமுடியும்?
அவர் உள்ளங்கைகளில் வரையப்பட்டிருக்கிறோம்
சார்ல்ஸ் ஸ்பர்ஜன் 1800ஆம் ஆண்டை ஒட்டிய காலக்கட்டத்தில் லண்டன் தேவாலயத்தில் “இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” என்ற ஆழ்ந்த பொருள் நிறைந்த ஏசாயா 49:16ஆம் வசனத்தைப் பிரசங்கிப்பதை அதிகம் விரும்பினார். “இந்த வசனத்தை நூற்றுக்கணக்கான தடவை பிரசங்கிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வசனம் ஒரு பொக்கிஷம் போன்றதாக இருப்பதால், நாம் இதை மீண்டும் மீண்டும் தியானிக்க முடியும்.
கர்த்தர் இஸ்ரவேலுக்கும், தம் ஜனத்திற்கும் கொடுத்த வாக்குத்தத்தம், மற்றும் பிதாவின் குமாரனாகிய கிறிஸ்து நமக்காக சிலுவையில் மரித்தது ஆகியவற்றிற்கு உள்ள அழகான தொடர்பை ஸ்பர்ஜன் சுட்டிக்காட்டுகிறார். “அவர் கைகளில் உள்ள காயங்கள் என்ன?... வரைவதற்கு, செதுக்குபவர் ஆணியையும், கத்தியையும் பயன்படுத்தினார். உண்மையிலேயே அவரது ஜனம், அவரது உள்ளங்கைகளில் வரையப்பட, அவர் சிலுவையில் அறையப்பட வேண்டும்”, என்று ஸ்பர்ஜன் குறிப்பிடுகிறார். தம் ஜனத்தை, தம் உள்ளங்கைகளில் வரைய தேவன் வாக்குக் கொடுத்தபடியால், நாம் நம் பாவத்தில் இருந்து விடுவிக்கப்படும்படியாக, இயேசு தன் கரங்களை சிலுவையில் நீட்டி, ஆணிகளைத் தன் கரங்களில் அடிக்கப்பெற்றார்.
ஆண்டவர் நம்மை மறந்துவிட்டார் என்று எப்போதாவது நாம் நினைக்க நேர்ந்தால், தேவன் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் நம் நினைவுக்கு வர, நம் உள்ளங்கைகளைப் பார்த்தாலே போதும். நமக்காக அவர் தமது கைகளில், அழிக்கமுடியாத தழும்பைப் பெற்றுள்ளார். நம்மை அந்த அளவுக்கு அவர் நேசிக்கிறார்.
கற்பாறையின் மேல் கட்டப்பட்ட வீடு
பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற தன்னுடைய வீட்டின் முன்னறை இறங்கிக் கொண்டிருக்கின்றது, சுவரில் வெடிப்புகள் தோன்றியுள்ளன, அவ்வறையின் ஜன்னல் திறக்க முடியாததாகிவிட்டது என என்னுடைய நண்பன் கூறினான். இந்த அறை அஸ்திபாரமிடாமல் சேர்க்கப்பட்ட அறையென பின்னர் தெரிந்துகொண்டோம். இந்த கீழ்த்தரமான வேலையை சரி செய்வதற்கு, கட்டுமானர் பல மாதங்கள் வேலை செய்து ஒரு புதிய அஸ்திபாரத்தைப் போட்டார்.
அவர்கள் அந்த வேலையை முடித்த பின்னர், நான் அதைப் பார்வையிட்ட போது சுவரிலிருந்த வெடிப்பு மறைந்து, ஜன்னல் திறக்கக்கூடியதாக இருந்தது. மற்றபடி எந்த ஒரு மாறுபாட்டையும் நான் அதில் காண முடியவில்லை. ஆனால், ஓர் உறுதியான அஸ்திபாரம் போடப்பட்டுள்ளது என்பதை உணர முடிந்தது.
இந்த உண்மை நம் வாழ்க்கைக்கும் பொருத்தமானது.
இயேசு தன்னுடைய உபதேசத்திற்குச் செவி கொடுக்காததின் விளைவை விளக்க, ஒரு புத்திசாலியும் ஒரு முட்டாளும் ஆகிய இரு கட்டுமானர்களைப் பற்றிய உவமையைச் சொல்கின்றார் (லூக். 6:46-49). இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதை அப்படியே விட்டு விடுகிறவர்களைப் போலல்லாமல், இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவி கொடுத்துக் கீழ்ப்படிகிறவன் கற்பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டின மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான். புயல் காற்று வீசிய பொதும் அந்த வீட்டை அசைக்கக் கூடாமற் போயிற்று. அப்படியே அவர்களுடைய விசுவாசமும் எந்நிலையிலும் அசைக்கப்படுவதில்லை.
இயேசுவின் வார்த்தைகளை கவனித்து, கீழ்படிந்தால் மெய்யான சமாதானத்தைப் பெற்றுக் கொள்வோம். அவர் நம் வாழ்விற்கு ஓர் உறுதியான அஸ்திபாரமாயிருக்கிறார். வேத வசனங்களை வாசிப்பதன் மூலமும், ஜெபத்தின் வழியாகவும், பிற கிறிஸ்தவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதன் மூலமாயும் அவர் மீதுள்ள நமது அன்பை உறுதிப்படுத்துவோம். பெருவெள்ளம் போல நீரோட்டம் நம் வீட்டின் மீது மோதினாலும், நாம் காட்டிக் கொடுக்கப்படுவதாலோ, வேதனையாலோ அல்லது ஏமாற்றத்தாலோ எதுவாயினும் நம்முடைய உறுதியான அஸ்திபாரத்தை அசைக்க முடியாது என்ற நம்பிக்கையோடிருப்போம். நமது இரட்சகர் நமக்குத் தேவையான ஆதரவைத் தருவார்.
நாம் இயேசுவைக் காண்போம்
நான் எனது பிரசங்க பீடத்திலிருந்து அடக்க ஆராதனைக்கான ஜெபங்களைச் சொல்லிக் கொண்டே கீழே நோக்கிய போது ஒரு பித்தளை தகட்டில் யோவான் 12:21ல் உள்ள வாசகம் பதிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன், “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்பதே அந்த வாசகம். நாம் கண்ணீரோடும், புன்னகையோடும் நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் இந்தப் பெண், இதற்கு எத்தனைப் பொருத்தமானவள், நாம் இயேசுவை அவளில் கண்டோமே என நான் நினைத்துப்பார்த்தேன். அவள் தன் வாழ்வில், அநேக ஏமாற்றங்களையும், சவால்களையும் சந்தித்த போதும், கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை ஒருபோதும் கைவிட்டதேயில்லை. தேவனுடைய ஆவியானவர் அவளில் வாசம் பண்ணியதாலேயே நாம் இவளில் இயேசுவைக் காண முடிந்தது.
இயேசு எருசலேமிற்குள் பயணம் செய்த போது, நடந்தவற்றை, யோவான் நினைவிற்குக் கொண்டுவருகிறான் (யோவா. 12:12-16). சில கிரேக்கர்கள் இயேசுவின் சீடனான பிலிப்புவிடம் வந்து, “ஐயா, இயேசுவைக்காண விரும்புகிறோம்” (வச. 21). என்றனர். அவர்கள் இயேசுவின் சுகமளிக்கும் வல்லமையும், அவர் செய்த அற்புதங்களையும் குறித்துக் கேள்விப்பட்டிருக்கலாம். எனவே அவரைக் காண ஆவலாய் இருந்தனர். அவர்கள் யூதரல்லாததால் தேவாலயத்தின் உட்பிரகாரத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுடைய வேண்டுதல் இயேசுவை அடைந்த போது, அவர் நான் மகிமைப்படும் நேரம் வந்துவிட்டது என தெரிவிக்கின்றார் (வச. 23). இதன் மூலம் அவர் அநேகருடைய பாவங்களுக்காக மரிக்கப் போகிறார் எனபதைக் குறிப்பிட்டார். அவர் தன்னுடைய பணியை நிறைவேற்றுவது யூதர்களுக்காக மட்டுமல்ல,
புறஜாதியினருக்காகவும் தான். (வச. 20). அப்பொழுது அவர்கள் இயேசுவைக் காண்பார்கள்.
இயேசு மரித்தபின்பு, அவரைப் பின்பற்றுபவர்களில் வாசம் பண்ணும்படி பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார் (14:16-17). அவர் நம்மில் வாசம் பண்ணி, செயல்படுவதாலேயே அவரில் அன்புகூரவும், அவருக்குப் பணி செய்யவும் முடிகிறது. நம்மைச் சுற்றியிருப்பவரும் நம்மில் இயேசுவைக் காண்கின்றனர். என்ன ஆச்சரியம்!