எதிர்பாராத இடங்களில் சுவிசேஷம்
நான் நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு, அதிக முறை திரைப்படங்களிலும் டிவியிலும் பார்த்த ஹாலிவுட், கலிபோர்னியா போன்ற இடங்களை தற்போது நேரில் பார்க்கிறேன். லாஸ் ஏஞ்சல்ஸ் மலையடிவாரத்தில், எனது ஹோட்டல் ஜன்னலில் இருந்து பார்த்தபோது, அந்த மகத்தான வெள்ளை எழுத்துக்கள், புகழ்பெற்ற அந்த மலைப்பகுதி முழுவதும் கெம்பீரமாய் படர்ந்திருப்பதை பார்க்கமுடிந்தது.
வேறு ஒன்றையும் நான் பார்த்தேன். அதின் இடது பக்கத்தின் கீழே சிலுவை ஒன்று தென்பட்டது. அதை நான் எந்த திரைப்படத்திலும் பார்த்ததில்லை. அந்த தருணத்தில் நான் என் ஹோட்டலிலிருந்து வெளியேறி, அங்கிருந்த திருச்சபையில் இருக்கும் ஒரு சில மாணவர்களை அழைத்துக்கொண்டு இயேசுவைக் குறித்து அறிவிக்க புறப்பட்டேன்.
ஹாலிவுட் போன்ற இடங்கள் தேவனுடைய இராஜ்யத்திற்கு முற்றிலும் விரோதமான கேளிக்கை ஸ்தலமாய் நாம் பார்க்கலாம். ஆனால் அங்கேயும் கிறிஸ்துவின் பிரசன்னம் இருப்பதை நான் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
பரிசேயர்கள், இயேசு கடந்து சென்ற இடங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அவர்கள் எதிர்பார்த்த இடங்களுக்கு அவர் செல்லவில்லை. மாறாக, அசுத்தமான வாழ்க்கை வாழ்ந்த ஆயக்காரரோடும் பாவிகளோடும் நேரம் செலவழித்தார் (வச. 15). யாருக்கு கிறிஸ்து அவசியப்பட்டாரோ அவர்களோடு இயேசு இருந்தார் (வச. 16-17).
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, இன்றும் எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத மனிதர்கள் மத்தியில் கிறிஸ்து தன்னுடைய நற்செய்தியை பிரஸ்தாப்படுத்துகிறார். அந்த ஊழியப்பணியில் நாமும் பங்கேற்பதற்கு கிறிஸ்து நமக்கும் அழைப்பு விடுக்கிறார்.
அனைத்தும் இயேசுவுக்காக
ஜெஃப் பதினான்கு வயதாக இருந்தபோது, அவரது அம்மா அவனை ஒரு பிரபல பாடகரை பார்க்க அழைத்துச் சென்றார். அவருடைய காலகட்டத்தில் வாழ்ந்த மற்ற பாடகர்களைப்போலவே, அமெரிக்க பாப் மற்றும் நாட்டுப்புற பாடகரான பி.ஜே. தாமஸ், இசைக்காக சுற்றித் திரியும்போது தன்னையே அழித்துக்கொள்ளும் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தார். அந்த வாழ்க்கை முறை, அவரும் அவருடைய மனைவியும் இயேசுவை அறிவதற்கு முன்பாக இருந்தது. அவர்கள் கிறிஸ்துவின் விசுவாசிகளாக மாறியபோது அவர்களின் வாழ்க்கை தீவிரமாக மாறியது.
அந்த இரவு இசை நிகழ்ச்சியின்போது, திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை தன்னுடைய பாடல் திறமையின் மூலம் ஈர்க்க முற்பட்டார். அவருக்கு தெரிந்த சில பரீட்சயமான பாடல்களை பாடிய பின்பு, கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் “இயேசுவின் பாடல் ஒன்று பாடு” என்று கேட்க, அவர் எந்தவித தயக்கமுமின்றி, “நான் நான்கு பாடல்களையும் கிறிஸ்துவுக்காகத் தான் பாடினேன்” என்று சொன்னாராம்.
அவருடைய பழைய வாழ்க்கை மாற்றப்பட்டு சில தசாப்தங்கள் கடந்துவிட்டன. எனினும், நாம் செய்யும் அனைத்தும் இயேசுவுக்காக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த அந்த தருணத்தை ஜெஃப் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். மத சம்பந்தப்படாத விஷயங்களைக் கூட இயேசுவுக்காக செய்யவேண்டும் என்று அவர் கருதுகிறார்.
சில சமயங்களில் நாம் வாழ்க்கையில் செய்யும் காரியங்களைப் பிரித்து புரிந்துகொள்ளுகிறோம். வேதாகமத்தைக் படியுங்கள். நீங்கள் இரட்சிக்கப்பட்ட சம்பவத்தை பகிர்ந்துகொள்ளுங்கள். ஒரு பாடலைப் பாடுங்கள். புனிதமான பொருட்களை சேகரியுங்கள். புற்களை வெட்டுங்கள். ஓட்ட பயிற்சி செய்யுங்கள். நாட்டுப்புறப் பாடலைப் பாடுங்கள். இவைகள் மதச்சார்பற்ற விஷயங்கள்.
கொலோசெயர் 3:16இல் போதித்தல், பாடல் பாடுதல், நன்றியுள்ளவர்களாயிருத்தல் போன்ற செய்கைகளில் தேவன் வாசம்பண்ணுகிறார் என்று பார்க்கிறோம். ஆனால் 17ஆம் வசனத்தில், “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்(யுங்கள்)” (கொலோசெயர் 3:17) என்று தேவனுடைய பிள்ளைகளுக்கு வலியுறுத்துகிறார்.
நாம் அனைத்தையும் அவருக்காகவே செய்கிறோம்.
எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?
“ஐயோ!” எனக்கு முன்பாக போய்க்கொண்டிருந்த பழுதுபார்க்கும் லாரி திடீரென்று திரும்பியதால் நான் அலறினேன்.
அந்த வாகனத்தில் பின்புறம் “எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?” என்று கேட்டு அதற்கு கீழ் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டேன். நான் ஏன் அழைக்கிறேன் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். நான் என் விரக்தியை கோபமாய் வெளிப்படுத்தினேன். டிரக்கின் நம்பரை குறித்துக்கொண்டாள். பின்னர் அவள், “எப்போதும் நன்றாக வாகனம் ஓட்டும் ஒருவரைக் குறித்து சொல்லுவதற்கும் நீங்கள் எங்களை அழைக்கலாம்” என்று சோர்வுடன் சொன்னாள்.
அவளுடைய அந்த சோகமான வார்த்தைகள் என்னை தடுமாறச் செய்தது. என் தவறை நான் உணர்ந்தேன். எனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக, நான் பேசிய கோபமான வார்த்;தைகள் அந்த கடினமான வேலை செய்யும் பெண்ணை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கவேண்டும் என்று யோசித்தேன். என்னுடைய விசுவாசத்திற்கும் கனிகொடுக்கும் ஜீவியத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு அற்றுபோனதாக அவ்வேளையில் நான் உணர்ந்தேன்.
நம்முடைய செய்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைத் தான் யாக்கோபு நிருபம் வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1:19-20இல் “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” என்று வாசிக்கிறோம். மேலும் அவர், “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்றும் ஆலோசனை கூறுகிறார்.
நாம் யாரும் நேர்த்தியானவர்கள் இல்லை. சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை என்னும் வாகனத்தை ஓட்டும்போது, நம்முடைய கடினமான வாழ்க்கைப் பாதையில் அவர் நம்முடைய கடினமான சுபாவங்களை மாற்றுவார் என்று நம்பி அவரை சார்ந்துகொள்ள முற்படுவோம்.
களைகளுக்கு நீர்ப்பாசனம்
இந்த வசந்த காலத்தில், எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தை களைகள் காடுபோல் வளர்ந்திருந்தது. அதில் பெரிதாய் வளர்ந்திருந்த ஒரு களையை நான் பிடுங்க முயற்சித்தபோது, அது என்னை காயப்படுத்தும் என்று நான் அஞ்சினேன். அதை வெட்டுவதற்கு நான் ஒரு மண்வெட்டியைத் தேடிக்கொண்டிருந்தவேளையில், ஒன்றைக் கவனிக்க முற்பட்டேன். என்னுடைய மகள் அந்த களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். “நீ ஏன் களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாய்?” என்று நான் அதிர்ச்சியில் கேட்டேன். அவள் ஒரு கசப்பான புன்னகையோடு, “அது எவ்வளவு பெரிதாய் வளருகிறது என்று பார்க்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தாள்.
களைகள் நாம் விரும்பி வளர்க்கிற ஒன்றல்ல. ஆனால் சிலவேளைகளில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடைபண்ணுகிற நம்முடைய சுய விருப்பங்கள் என்னும் களைகளுக்கு நாமே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம்.
பவுல், கலாத்தியர் 5:13-26இல் இதைக் குறித்து எழுதுகிறார். அதில் மாம்சீக வாழ்க்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் ஒப்பிடுகிறார். அவர் சொல்லும்போது, நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்தால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் களைகள்-இல்லா வாழ்க்கையை சுதந்தரித்துவிடமுடியாது என்கிறார். களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துவதற்கு “ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள்” என்று ஆலோசனை சொல்லுகிறார். மேலும் தேவனோடு நடக்கும்போது “மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” (வச. 16) என்றும் அறிவுறுத்துகிறார்.
பவுலின் போதனைகளை முழுவதுமாய் அறிந்துகொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு முயற்சி. அவரின் எளிமையான வழிநடத்துதலை நான் நேசிக்கிறேன். நம்முடைய சுய இச்சைகளையும் சுயவிருப்பங்களையும் நாம் நீர்பாய்ச்சி வளர்ப்பதற்கு பதிலாக, தேவனோடு உறவுகொள்வதின் மூலம் நாம் கனிகொடுத்து, தேவ பக்தியின் அறுவடையை ஏறெடுக்கமுடியும் (வச. 22-25).
கிருபையின் மறுதொடக்கம்
கடந்த பல தசாப்தங்களாக திரைப்பட சொற்களஞ்சியத்தில் ஒரு புதிய சொல் நுழைந்துள்ளது, அது "மறுதொடக்கம்". திரைத்துறை பாணியில், ஒரு பழைய கதையை அதை மறுதொடக்கம் செய்து ஆரம்பிப்பதாகும். சில மறுதொடக்கங்கள் ஒரு அசகாய சூரனை பற்றியோ கற்பனை படைப்பு போன்றோ பழக்கமான கதையை மீண்டும் கூறுகின்றன. மற்ற மறுதொடக்கங்கள் அதிகம் அறியப்படாத கதையை எடுத்து புதிய வழியில் அக்கதையை மறுபரிசீலனை செய்கின்றன. ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மறுதொடக்கம் என்பது மீண்டும் செய்வது போன்றது. இது ஒரு புதிய தொடக்கம், பழையதான ஒன்றுக்கு புதிய வாழ்வு கொடுக்கப்படுகிறது.
மறுதொடக்கங்களை உள்ளடக்கிய மற்றொரு கதை உள்ளது, அது நற்செய்தி கதை. அதில், இயேசு தம்முடைய மன்னிப்பு, பரிபூரணம் மற்றும் நித்திய ஜீவனுக்கு நம்மை அழைக்கிறார் (யோவான் 10:10). புலம்பல் புத்தகத்தில், எரேமியா நமக்குத் தேவனின் அன்பு ஒவ்வொரு நாளையும் கூட ஒரு வகையில் மறுதொடக்கம் செய்கிறதை நமக்கு நினைவூட்டுகிறார்: " நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.” (3:22-23).
தேவனின் கிருபையானது, ஒவ்வொரு நாளையும் அவருடைய உண்மைத்தன்மையை அனுபவிக்க ஒரு புதிய வாய்ப்பாக ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது. நம்முடைய சொந்த தவறுகளின் விளைவுகளுடன் நாம் போராடினாலும் அல்லது வேறு பல கஷ்டங்களைச் சந்தித்தாலும் தேவனின் ஆவியானவர் ஒவ்வொரு புதிய நாளிலும், மன்னிப்பு, புதிய வாழ்க்கை மற்றும் நம்பிக்கையை அருள முடியும். ஒவ்வொரு நாளும் ஒரு வகையான மறுதொடக்கம் ஆகும். நமது சிறந்த இயக்குநரின் வழியைப் பின்பற்றுவதற்கான ஒரு வாய்ப்பு. அவர் நம் கதையை அவரது பெரிய கதையில் ஒன்றாய் பின்னுகிறார்.
முற்றிலும் தூய்மையாக்கப்பட்ட
சமீபத்தில், விருந்தினர் வருவதற்கு முன்பு நானும் என் மனைவியும் எங்கள் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தோம். எங்கள் சமையலறையின் வெள்ளை தரையில் சில கருப்பு கறைகளை நான் கவனித்தேன். அதை முழங்கால் ஊன்றி தேய்க்க வேண்டியிருந்தது.
ஆனால் எனக்கு விரைவில் ஒன்று தோன்றியது: நான் எவ்வளவு அதிகமாகத் துடைத்தாலும், மற்ற கறைகளை நான் கவனித்தேன். நான் நீக்கிய ஒவ்வொரு கறையும் மற்றதை மிகவும் தெளிவாக்கியது. திடீரென்று எங்கள் சமையலறையின் தளத்தைச் சுத்தமாக்குவது இயலாமல்போனது. நான் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், என்னால் இந்த தரையை முழுமையாகச் சுத்தம் செய்ய முடியாது என்று ஒவ்வொரு முறையும் நான் உணர்ந்தேன்.
சுய சுத்திகரிப்பு பற்றி வேதம் கூறுகிறது. பாவத்தை நாம் சொந்தமாகக் கையாள்வதில் நாம் எடுக்கும் சிறந்த முயற்சிகள் எப்போதும் தோல்வியடையும் . தேவனுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர்கள், அவருடைய இரட்சிப்பை அனுபவிக்கக் கூடாமல் இருப்பதால் (ஏசாயா 64:5) விரக்தியடைந்த ஏசாயா தீர்க்கதரிசி, “நாம் எல்லாரும் அசுத்தமானவர்களைப் போல் ஆனோம், எங்களுடைய நீதியான செயல்களெல்லாம் அழுக்கான துணியைப் போலிருக்கிறது”(வ. 6) என்றெழுதினார்.
ஆனால் தேவனின் கருணையின் மூலம் எப்போதும் நம்பிக்கை இருப்பதை ஏசாயா அறிந்திருந்தார். ஆகையால், "நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர்" (வ. 8) என்று கெஞ்சினார். ஆழமான கறைகள் "உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்" வரை நம்மால் முடியாததைத் தேவன் ஒருவரே சுத்தம் செய்ய முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார் (1:18).
நம் ஆத்துமாக்களில் படிந்திருக்கும் பாவத்தின் கறைகளையும், அழுக்கையும் நாம் துடைக்க முடியாது. அதிர்ஷ்டவசமாக, நம்மை முழுமையாகச் சுத்திகரிக்கும் பலியாக மாறின அவரில் நாம் இரட்சிப்பைப் பெறலாம் (1 யோவான் 1:7).
காபி வாசனை
நான் என்னுடைய நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, என்னுடைய இளைய மகள் கீழே இறங்கி வந்தாள். அவள் என் மடியில் அமர்ந்து குதித்து விளையாடினாள். ஒரு அப்பாவாக, நான் அவளை இறுக்கி, அவளுடைய முன்நெற்றியில் முத்தமிட்டு தகப்பனுடைய அன்பை வெளிப்படுத்தினேன். அவள் மகிழ்ச்சியில் கூச்சலிட்டாள். அவள் தன் புருவத்தை சுருக்கி, மூக்கை உறிஞ்சி நான் காபி குடிக்கும் கோப்பையை உற்று பார்த்துவிட்டு, “அப்பா, உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனால் உங்களுடைய வாசனை எனக்கு பிடிக்கவில்லை” என்று சொன்னாள்.
என்னுடைய மகள் அந்த விமர்சனத்தை கிருபையோடும் சத்தியத்தோடும் முன்வைத்தாள். அவள் என்னை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் சிலவற்றை சொல்லுவதற்கு அவள் ஏவப்பட்டாள். நம்முடைய உறவுகளில் அதுபோன்ற சில காரியங்களை நாம் வெளிப்படையாய் சொல்லவேண்டியிருக்கிறது.
எபேசியர் 4ஆம் அதிகாரத்தில், ஒருவருடைய தப்பிதங்களை அவர்களிடம் நேரடியாய் சொல்வதற்கு தயங்குபவர்களுக்கு பவுல் சொல்லுகிறார்: “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்(குங்கள்)” (வச. 2). மனத்தாழ்மை, சாந்தம் மற்றும் நீடிய பொறுமை ஆகியவைகள் நம் உறவின் அஸ்திபாரமாய் திகழ்கிறது. தேவனுடைய வழிநடத்துதலோடு இதுபோன்ற குணாதிசயங்களை பிரஸ்தாபப்படுத்தும்போது, “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு” (வச. 15), “பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி” (வச. 29) பேசுவோம்.
யாரும் பலவீனங்களையும் குழுப்பங்களையும் எதிர்கொள்ள விரும்புவதில்லை. நம்முடைய சுபாவங்களில் ஏதோ நாற்றம் வீசும்போது, கிருபையோடும் உண்மையோடும் தாழ்மையோடும் மென்மையாக பேசக்கூடிய உண்மையுள்ள நண்பர்களைக் கொண்டு தேவன் அதை நமக்கு தெரியப்படுத்துவார்.
அமளியினூடே கிருபை
நான் எதிர்பாராதவிதமாக ஒரு குட்டித்தூக்கம் போட்டேன். அறைகள் அதிர்வது போல, கீழறையில் என் மகன் கிட்டாரைச் சத்தமாக வாசித்தான். அமைதியில்லை, சமாதானமில்லை, தூக்கம் போனது. சிலநிமிடங்களில் எனது மகள் "வியத்தகு கிருபை" என்ற பாடலை தனது பியானோவில் வாசிக்க, இனிமையான இசை என் காதுகளை வருடியது.
பொதுவாக எனது மகன் கிட்டாரை வாசிக்கையில், எனக்குப் பிடிக்கும். ஆனால் அந்த நொடியில், எனக்கு எரிச்சலூட்டி அமைதியைக் குலைத்தது. இருப்பினும் உடனே ஜான் நியூட்டனின் பாடல் வரிகள், அமளியின் மத்தியில் மேற்கொள்ளும் கிருபையை எனக்கு ஞாபகப்படுத்தியது. நமது வாழ்வின் புயல்கள் எவ்வளவாய் இரைந்தாலும், தேவையற்றதாக நம்மைத் திசைதிருப்பினாலும்; கிருபையைக் குறித்த தேவனின் குறிப்புகள் உண்மையாயும் தெளிவாயும் உள்ளன. எப்போதும் நம்மீதிருக்கும் அவருடைய கவனமான கரிசனையை நினைப்பூட்டுகின்றன.
இந்த உண்மையை நாம் வேதத்தில் பார்க்கிறோம். சங்கீதம் 107:23–32 இல், கப்பலோட்டிகள் தங்களை எளிதாய் அழிக்கக்கூடிய பெரும்புயலை எதிர்த்து கடுமையாய் போராடுகின்றனர். "அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது." (வ.26). ஆயினும் நம்பிக்கையிழக்காமல், "கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்." (வ. 28). இறுதியாக, "அமைதலுண்டானதினிமித்தம அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்." (வ. 30) என்று வாசிக்கிறோம்.
அமளியின் நேரங்களில், இரைச்சலும் பயமும் அணைகளைத்தாண்டி, நமது ஆத்துமாக்களில் புயலுண்டாக்கலாம். ஆனால், நாம் தேவனை நம்பி அவரிடம் ஜெபிக்கையில் தேவைகளைச் சந்திக்கும் அவரது கிருபையின் பிரசன்னத்தை நாம் அனுபவிப்போம். அவரது நிலையான அன்பென்னும் புகலிடம் அடைவோம்.
பந்தயத்தில் ஓடுதல்
தனது மனைவி, மகன் மற்றும் மகளை இழந்த தொடர் சோகங்களுக்குப் பிறகு, தனது 89ஆம் வயதில் ஃபாஜா சிங் தன்னுடைய ஆர்வமான ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தார். பஞ்சாபி-இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த சிங், டொராண்டோ வாட்டர்ஃபிரண்ட் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தினை நிறைவு செய்த முதல் 100 வயது நபர் என்னும் சாதனையை நிகழ்த்தினார். அவரது ஆரோக்கியமான உணவு, உடல் வலிமை, மன ஒழுக்கம் போன்றவைகள் அவரது சாதனைக்கு உதவியிருக்கலாம். ஆனால் அவர் தன்னுடைய 5 வயது வரை நடக்கமுடியாமல் இருந்தவராம். அதினால் அவரை எல்லோரும் “குச்சி” என்ற கிண்டல் செய்வார்களாம். ஆனால் தற்போது அவருடைய சாதனையைக் கண்டவர்கள் அவரை “முண்டாசிட்ட புயல்காற்று” என்று அழைக்கின்றனர்.
அப்போஸ்தலனாகிய பவுலும் தனது நாட்களில் இதேபோன்ற ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் விளையாட்டு வீரர்களை அங்கீகரித்தார் (1 கொரிந்தியர் 9:24). ஆனால் அவர்கள் எவ்வளவு பயிற்சி செய்தாலும் இறுதியில் அவர்களின் வலிமை குன்றுவதையும் அவர் கண்டார். ஆனால் நித்தியத்தை பாதிக்கும் விதத்தில் இயேசுவுக்காக வாழ நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று போதித்தார். தற்காலிகப் பெருமைக்காக பாடுபடும் விளையாட்டு வீரர்கள் மிகவும் கடினமாக உழைக்க முடியும் என்றால், “அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு" வாழ்பவர்கள் எவ்வளவு அதிகமாக பிரயாசப்படவேண்டும் என்று பவுல் வலியுறுத்துகிறார் (வச. 25).
இரட்சிப்பைப் பெறுவதற்கு நாம் பயிற்சியளிக்கவில்லை. மாறாக, நமது இரட்சிப்பு எவ்வளவு மேன்மையானது என்பதை நாம் உணரும்போது, அது நமது வாழ்வின் முக்கியத்தவத்தை உணர்த்தி நம்முடைய ஓட்டத்தை எவ்வளவு நேர்த்தியாகவும் உண்மையாகவும் நிறைவுசெய்யவேண்டும் என்பதை உணர்த்துகிறது.