விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. எபிரெயர் 11: 1

பாடகர் குழுவாக நாங்கள் பார்வையிட சென்ற இடங்களின் மனநிலை, சூழல், மற்றும் அமைதியின் அடிப்படை உணர்வு, அது எப்பொழுதும் வித்தியாசமாக இருந்தது. நோயாளிகளுக்கு உற்சாகத்தைத் தரும்படியாக நாங்கள் மருத்துவமனைகளுக்குச் சென்று, வழக்கமான கிறிஸ்துமஸ் பாடல்களை பாடியபோது ஒவ்வொரு வார்டுக்கும் அவர்கள் எங்களைப் பின்தொடர்ந்தனர். குழந்தைகள் வார்டில், சிறியவர்களைப் பார்த்தோம். அவர்கள் ஒரு நோய் அல்லது மற்ற காரணங்களுக்காக கிறிஸ்துமஸ் அன்று மருத்துவமனை படுக்கையில் இருந்தனர். ஆனால் கொஞ்ச நேரம் நாங்கள் அங்கு இருந்தபோது, அவர்களின் கண்கள் பிரகாசித்தன, அவர்களின் சிறிய கரங்கள் தட்டின, முகத்தில் புன்னகையுடன், அவர்கள் பாடல் ஒலியை ரசித்தனர்.

எங்கள் பட்டியலில் இந்த கடைசி இடம், வித்தியாசமாக உணர்ந்தது. அந்த இடம் குணமடைவதற்கான இடமல்ல; அது ஓய்வின் இடமாக இருந்தது. அது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வேலை செய்யும் இடமோ அல்லது நான் சுகம் பெற்று வெளியேற்றப்படுவேன் என்று எதிர்பார்க்கப்படுகிற இடமோ அல்ல. நோயாளிகள் உலகத்திலிருந்து வெளியேற காத்திருக்கும், மார்ஃபின் (morphine) மற்றும் வலி நிவாரணி மருந்துகளின் இடமாக இருந்தது. அது ஒரு பராமரிப்பு.

நாங்கள் ஒற்றை வரிசையில் மேலே சென்றோம். புற்றுநோயின் அணுக்களால் பாதிக்கபட்டதினாலோ அல்லது நேசித்தவரின் இழப்பின் வலியினாலோ – அதிகம் பாதிக்கபட்ட மக்கள் இருந்த வார்டில் நாங்கள் கூடினோம். “அது போன்ற ஒரு இடத்தில் நாம் என்ன பாடுவோம்?” என்று நான் நினைத்தேன். எங்கள் நினைவிலிருந்து பல கிறிஸ்துமஸ் பாடல்கள் மங்கிவிட்டன, நான் பாடகர் குழுவிற்கு “சைலண்ட் நைட்” என்று கூறினேன். நாங்கள் சோட்டோ வோஸ் (மிகவும் மெல்லிய குரலில்) பாடினோம் – நாங்கள் “ஸ்லீப் இன் ஹவென்ளீ பீஸ்” என்று பாடி முடித்தோம், அது மிகவும் பொருத்தமானது என்று தோன்றியது. சிறிது நேரத்திற்கு பிறகு அந்த அமைதியை அழுகையின் தேம்பல் உடைத்தது. பிரியமான ஒருவர் தன் கடைசி தடையை தாண்டினார். சைலன்ட் நைட், பாடிக்கொண்டிருக்கும் பொழுது கர்த்தர் அவரை பரத்திற்கு அழைத்துக்கொண்டார்.

பவுல் 1 தெசலோனிக்கேயர் 4:13ல், “நம்பிக்கை அற்ற மற்றவர்களை போல” நாமும் நமக்கு பிரியமானவர்களுக்காக துக்கப்பட கூடாது என்கிறார். கிறிஸ்துமஸ் நேரத்தில் நாம் யாரையாவது இழப்பது அல்லது பிரிந்திருப்பது உண்மையாகவே கடினமானதுதான். ஆனால், கிறிஸ்மதுஸின் அர்த்தத்தை அதனால் வலுவிழக்கச் செய்யமுடியாது. கிறிஸ்து மனித உருவை ஏற்று, அவருடன் நித்தியமாக ஒன்றாக இருக்க செய்யும் நம்பிக்கையின் வழியை நமக்கு உண்டுபண்ணினார்; கரையின் அடுத்த முனையிலே நமக்கு பிரியமானவர்களை சந்திப்போம் என்ற நம்பிக்கையை உண்டுபண்ணியிருக்கிறார். எனவே இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கு நம்பிக்கை இல்லாததாக தோன்றினால், கிறிஸ்துவின் நம்பிக்கை உங்களில் எழட்டும். தேவன் கொடுத்த இந்த வாழ்க்கைக்காக நன்றியுடன் இதை கொண்டாடுவோம், அவர் நம்மில் ஏவின நம்பிக்கையை உறுதியாய் பற்றிக்கொண்டிருப்போம்.

அன்புள்ள பிதாவே நம்பிக்கையற்ற நேரத்தில், நீரே என் நித்திய நம்பிக்கை; உமக்குள்ளே நான் வாழ்கிறேன், அசைகிறேன் மற்றும் அர்த்தத்தை கண்டடைகிறேன். உமக்கு நன்றி. ஆமென்.

– பாஸ்டர் சிசில் கிளெமென்ட்ஸ்