தன்னுடைய தேசம் எந்த ஒரு தூண்டுதலுமின்றி மற்றொரு தேசத்தின்மீது படையெடுத்ததை பற்றி எழுதிய “குற்றத்திற்காக” விசாரிக்கப்படுகையில், அந்த பத்திரிகையாளர் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டார். எனினும் அவர் தன்னை தற்காத்துக் கொள்ளவில்லை. மாறாக, தைரியமாகப் பேசினார். “நம் நாட்டை சூழ்ந்துள்ள இருள் மறையும் நாள் வரும், இரண்டும் இரண்டும் நான்குதான் அதுபோலவே ஒரு யுத்தத்தை யுத்தமென்று சொல்லி அதிகார மட்டத்தில் அங்கீகரிக்கப்படும்” என்று அவர் கூறினார். மேலும் கட்டுக்கடங்கா நம்பிக்கையுடன், அவர் தொடர்ந்தார்: “விறைக்கும் குளிர்காலத்திற்குப் பின்பு கூட வசந்த காலம் வருவதைப் போல அந்த நாள் தவிர்க்க முடியாமல் வரும்”

உலக நிகழ்வுகள் பெரும்பாலும் மீளமுடியா இருளாகவே தோன்றுகிறது. பொய்யும் வன்முறையுமே உலகத்தின் போக்கு. இது ஒன்றும் புதிதல்ல. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதக்காரன் தாவீது, தான் எதிர்பார்த்திருந்த மேசியாவைப் பற்றி, “கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று” (சங்கீதம் 2:2) என்று எழுதினார். தேவனோ வெறுமனே நகைக்கிறார் (வ. 4). அரியணைக்குரிய ராஜா ஒரு நாள் “இருப்புக்கோலால் அவர்களை நொறுக்(குவார்)கி” (வ. 9). தாவீது, “ராஜாக்களே, உணர்வடையுங்கள் பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள். பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். (வ. 10-11) என்று எழுதினார்.

இயேசுவைக் கைது செய்து, சிலுவையில் அறைந்தது தான் மிக மோசமான மனித உரிமை அட்டூழியமாகும், ஆனால் அந்த நீதியின் கேலிக்கூத்து மூலம்தான் கிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் வென்று நமக்கு நம்பிக்கையை அளித்தார். குளிர்காலத்தைப் பின்தொடர்ந்து வசந்தகாலம் வருவதைப் போல, இருள் கலைந்து, உலகத்தின் மெய்யான ஒளியின் முன் ஓடுகிறது. “அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்” (வ. 12).

-டிம் கஸ்டாப்சன்

எந்த நிகழ்வுகள் உங்களை விரக்தியடையச் செய்கிறது? இன்று உலகின் மெய்யான ஒளியை நீங்கள் எங்கே, எவ்வாறு அனுபவிக்கிறீர்கள்?

விலையேறப்பெற்ற இரட்சகரே, உமது ஒளி இந்த இருண்ட உலகத்தை நிரப்பி, உம்முடனான ஒரு எதிர்காலத்திற்கான நம்பிக்கையை எங்களுக்கு அருள்வதாக.

சங்கீதம் 2

1 ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள்
விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?
2 கர்த்தருக்கு விரோதமாகவும் அவர்
அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின்
ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள்
ஏகமாய் ஆலோசனைபண்ணி:
3 அவர்கள் கட்டுகளை அறுத்து
அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு
எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.
4 பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்;
ஆண்டவர் அவர்களை இகழுவார்.
5 அப்பொழுது அவர் தமது கோபத்திலே
அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே
அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.
6 நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய
சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை
அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.
7 தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர்
என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன்,
இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
8 என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை
உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை
உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
9 இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி,
குயக்கலத்தைப்போல் அவர்களை
உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
10 இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள்
பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.
11 பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள்,
நடுக்கத்துடனே களிகூருங்கள்.
12 குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள்
வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு,
அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே
அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை
அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

சங்கீதம் 2:12

அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.