இந்தியாவின் சில பகுதிகளில் உள்ள பதினேழாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பரங்கியர் என்று அழைக்கப்பட்டனர், இது மதம் மாறியவர்களை அவர்களின் போர்த்துகீசிய எஜமானர்களுடன் இணைத்து “கீழ் சாதி” என்றழைக்கும் இழிவான வார்த்தையாகும். ராபர்ட் டி நோபிலி தனது இத்தாலிய அந்தஸ்தைப் பயன்படுத்தி இந்தியக் கிறிஸ்தவர்களை “உயர் சாதியினர்” மத்தியில் அங்கீகாரம் பெற முயன்றார். அவர் தனது கறுப்பு நிற ஆசாரிய உடையை, ஒரு பூசாரியின் காவி நிற உடையாக மாற்றிக் கொண்டார், சரளமாகத் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் கற்றார், ஒரு பிராமண சமையல்காரரை வேலைக்கு அமர்த்தினார் மற்றும் இந்நாட்டவரைப் போல மர காலணிகள் அணிந்தார். ஆர்வத்துடன், பலர் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த “வெள்ளை சாமியாரின்” வார்த்தைகளைக் கேட்கத் தேடி வந்தனர்.
நியாயசாஸ்திரிகளும் பரிசேயர்களும் பங்கேற்ற ஒரு கலவையான கூட்டத்தில், இயேசு தம் சீடர்களையும் தம்மைப் பின்பற்றுபவர்களையும் தங்கள் தலைவர்களைப் போலிருக்க வேண்டாமென்று எச்சரித்தார் (வ.3). வரலாற்று ரீதியாக, இந்த தலைவர்கள் எல்லோரையும் விட தங்களைச் சிறந்தவர்களாகக் கருதினர். ஜனங்கள் தங்களைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வித்தியாசமாக உடையும் அணிந்தனர். ஆனால் இயேசு, “நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்; நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்” (வ.8) என்று கூறி சமதளத்தை ஏற்படுத்தினார். சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தினார். நாம் பெரும்பாலும் சமூக அந்தஸ்தை நம்மை அறியாமலேயே பின்பற்றுகிறோம். ஆனால் நமது பிறப்பு, கல்வி, செல்வம், பாலினம் அல்லது வயது காரணமாக நாம் கூறும் உயர்ந்த நிலை கிறிஸ்துவில் எடுபடாது. பவுல் எழுதுவது போல், “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்” (கலாத்தியர் 3:28). நமது பின்னணி நம் அடையாளத்தைத் தீர்மானிக்காது, கிறிஸ்துவே தீர்மானிக்கிறார். ஏனென்றால், பிலிப்பியர் 3:8-ல் நாம் வாசிக்கிறபடி, கிறிஸ்துவை அறிவதே நம்முடைய மிகப் பெரிய ஆதாயம். வேறு எதுவும் முக்கியமில்லை.
எல்லோரையும் சமமாகப் பார்க்க இயேசு உங்களுக்கு எவ்வாறு உதவுகிறார்? கிறிஸ்துவில் பாகுபாட்டிற்கு எந்த அடிப்படையும்
இல்லை என்பதன் பொருள் என்ன?
அன்பு இயேசுவே, உம் விலையேறப்பெற்ற இரத்தத்தால் வாங்கப்பட்ட சகோதர சகோதரிகளாக ஜனங்களை நீர் பார்ப்பதுபோல் பார்க்க எனக்கு உதவும்.
