மிகவும் சிரமப்பட்டு, மருத்துவ மாணவியான கிருபா, ஒரு கிராமத்தைச் சேர்ந்த சூம்பின விரல்களுடைய ஒரு மூதாட்டியை மருத்துவ முகாமுக்கு வரும்படி சம்மதிக்க வைத்தாள். அங்கு ஒரு மூத்த மருத்துவர் அவளைப் பார்த்து, சில மருந்துகளைக் கொடுத்தனுப்பினார். அவள் பின்னர் கிருபாவைத் தனியாக அழைத்து, “அவர்களுடைய குறைபாடுகள் மிகவும் கடுமையானவை, நாம் ஒன்றும் செய்ய முடியாது. மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முன் ஏதாவது செய்ய முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.
சீரடைவதற்கான நம்பிக்கை மருத்துவத்தில் எப்போதும் இல்லை என்ற கசப்பான உண்மையை கிருபா படித்துக்கொண்டாள். ஆனால் இந்த நம்பிக்கையின்மைக்கு மத்தியிலும் கூட, இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவகிருபையில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது.
ஆவிக்குரிய நோயின் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் இஸ்ரவேல் இருந்தபோது, ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்தார். நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுவதால் இஸ்ரவேல் அழிக்கப்படும் என்றும், ஜனங்கள் சிறைப்பட்டுப்போவார்கள் என்றும் கூறினார் (வ.12). கிமு 722 இல் இஸ்ரவேல் ஜனங்கள் அசீரியாவுக்கு சிறைப்பட்டுப் போனபோது ஆமோஸின் தீர்க்கதரிசனம் நிறைவேறியது (2 இராஜாக்கள் 17:6). இருப்பினும், ஆமோஸ் அழிவை முன்னறிவித்தபோது, அவர் நம்பிக்கையையும் அளித்தார். “கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்” (வ.6) என்றார். எப்படி என்பதை விளக்க, “நீங்கள் தீமையை வெறுத்து நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்” (வ.15) என்றார். அவர்கள் இதைச் செய்தால், அவர்கள் பிழைப்பார்கள், தேவனின் பிரசன்னம் மற்றும் இரக்கத்தை அனுபவிப்பர் என்று ஆமோஸ் கூறினார் (வ.15-16).
ஆமோஸ் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்வது போல், நாமும் தேவனைச் சார்ந்து, அவரைத் தேடி, நன்மை செய்வோம், அதனால் நாமும் அவருடைய நன்மையை அனுபவிப்போம். நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து நன்மை செய்யும்போது, நம்முடைய மிகவும் நம்பிக்கையற்ற சூழ்நிலைகளைக் கூட அவர் அற்புதமாக மாற்றுவார் (ஆதியாகமம் 50:20). உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும், நினைவில் கொள்ளுங்கள்: தேவனில் இன்னும் நம்பிக்கை உண்டு.
காரியங்கள் கடினமாகும்போது, நீங்கள் யாரிடம் செல்வீர்கள்?
தேவனைத் தேடி நன்மை செய்வதென்பது எப்படி இருக்கும்?
ஆண்டவரே, நான் உம்மிடம் வருகிறேன், ஏனென்றால் என் நம்பிக்கை உம்மில் உள்ளது. நான் நம்பிக்கையுடன் வாழ, எனக்கு ஜீவனளித்து,
நீதியின் பாதையில் என்னை நிலைப்படுத்தும்.
