1998 ஆம் ஆண்டு வெளியான டிஸ்னி திரைப்படமான முலான், பேரரசரின் இராணுவத்தில் காயமடைந்த தந்தையின் இடத்தைப் பிடிப்பதற்காக இரவில் பதுங்கிச் சென்று ஆணாக வேடமிடும் ஒரு பெண்ணின் கதையைக் காட்டுகிறது. அவளது செயல்களைக் கண்டறிந்ததும், முலானின் குடும்பத்தினர் மௌனமாக இருக்கிறார்கள், அதிகாரிகளிடம் தெரிவிப்பது அவளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று பயந்தார்கள். அவள் உயிருடன் திரும்புவாள் என்று அவர்கள் நம்புகிறார்கள், பிரார்த்தனை செய்கிறார்கள். போர் முடிந்து பேரரசு காப்பாற்றப்பட்ட பிறகு, முலான் வீட்டிற்கு வருகிறாள். தன் துணிச்சலுக்காகப் பேரரசர் கொடுத்த நினைவுப் பரிசுகளை அவள் தந்தையிடம் வழங்குகிறாள். “அவை எங்கள் குடும்பத்தைக் கௌரவிக்கும் பரிசு” என்று அவர் கூறுகிறார். அவளுடைய தந்தை பரிசுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவளைக் கட்டிப்பிடித்து, “உன்னை ஒரு மகளாக வைத்திருப்பதே மிகப்பெரிய பரிசு மற்றும் கெளரவம்” என்று பதிலளித்தார்.

முலானைப் போலவே, இயேசுவின் சீடர்களும் தேவனுக்காகச் செய்யக்கூடிய எல்லாவற்றையும் பற்றி உற்சாகமாக இருந்தனர். “உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது” என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள் (வ.17). இயேசு அவர்களின் வெற்றியை ஒப்புக்கொண்டார், ஆனால் உடனே அவர்களின் கவனத்தைத் திருப்பினார். “ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்” (வ.20) என்றார். இயேசுவைப் பொறுத்தவரை, பிசாசுகள் மீது “அதிகாரம்” செலுத்துவதை விட (வ.19-20) நித்திய ஜீவனுக்கான உத்தரவாதமே கொண்டாடுவதற்கான மிக பெரிய காரணமாக இருந்தது. அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் உலகம் பெருமிதம் கொள்ளும்போது, தேவஜனங்கள் நித்திய வாழ்வின் நிச்சயத்தைப் போற்றுகிறார்கள்.

தேவன் நமக்களித்துள்ள வரங்கள் மற்றும் உடைமைகளால் சில சமயங்களில் நாம் வல்லமையுள்ளவர்களாக உணரலாம். ஆனால் நாம் மகிழ்ச்சியடைவதற்கான காரணம் பூமியில் நமக்கு வல்லமை அல்லது ஈவுகள் உண்டாயிருப்பதற்காக இருக்கக்கூடாது. இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் நமது வாழ்க்கை இத்துடன் முடிவடையவில்லை என்பதே பெரிய ஈவும் கனமும் ஆகும். நம்முடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டுள்ளன, நமக்கு நித்திய ஜீவன் உண்டு.