கௌரவால் தன் கண்களை நம்ப முடியவில்லை. “அவர்கள் ஏன் இந்த வெள்ளை உடையில் இருக்கும் நல்ல மாமாவை அடிக்கிறார்கள்” என்று எண்ணினான். அவன் இயேசுவைப் போல உடையணிந்த ஒரு நபர் தெருக்களில் ஊர்வலமாகச் செல்வதையும் , போலி இரத்தம் சொட்டச் சொட்டவும், வீரர்களைப் போல உடையணிந்தவர்களால் சாட்டையால் அடிக்கப்படுவதையும் கண்டான். அது ஒரு சபையின் புனித வெள்ளி பவனி. ஆனால் அந்த காட்சி கௌரவுக்கு மிகவும் நிஜமாக இருந்தது. கௌரவ் ஒரு மனநலிவு நோயாளி, மேலும் அவனது நிலை அவனை மிகவும் ஆர்வத்துடனும் இரக்கத்துடனும் இருக்கும்படி செய்தது. அம்மாவின் புடவையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, “அம்மா, தயவு செய்து அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்!” என்று புலம்பியபடியே அவன் இதயம் இரக்கத்தால் நிறைந்தது.
கௌரவரைப் போல இரக்கமுள்ளவர்களாக இருக்க நாம் அழைக்கப்படுகிறோம். சிலருக்கு எளிதில் இரக்கம் உண்டாகலாம் என்றாலும், மற்ற நமக்கோ அதைப் பயிற்சி செய்ய வேண்டும். கொலோசெ சபையினர்க்கு தங்கள் பழைய வாழ்க்கை முறையை “அகற்ற” வலுவாக வலியுறுத்தப்பட்டது. அழுக்காகவும் கந்தையாகவும் இருந்த ஆடையைத் தூக்கி எறிவது போல, கோபம், மூர்க்கம் , பொறாமை, வாயில் பிறக்கலாகாத தூஷணம், வம்பு வார்த்தைகள் (வ.8) ஆகியவற்றைக் கொண்டிருந்த தங்கள் உலகத்துக்குரிய சுபாவத்தைக் களைந்துவிடும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாறாக, இரக்கம், தயவு, மனத்தாழ்மை மற்றும்நீடிய பொறுமை (V.12)ஆகிய நற்பண்புகளை அணிந்துகொள்ள அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர், அவை ” இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும்” (சங்கீதம் 145:8). கொண்ட தங்கள் சிருஷ்டிகரைப் பிரதிபலிக்கின்றன.
இரக்கம், கருணை, தாழ்மை மற்றும் தயவு ஆகியவை இன்றைய உலகில் பெரும்பாலும் பலவீனங்களாகக் கருதப்படுகின்றன. ஆனாலும் இதைத்தான் மற்றவர்கள் நம்மில் பார்க்க வேண்டும், அனுபவிக்க வேண்டும் (வ.12). சக பணியாளர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான நமது அனுதின உறவுகளில் இந்த குணாதிசயங்களுடன் செயல்படுவது எப்போதும் எளிதானது அல்ல. ஆனால் சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாயினும் நாம் சரியாக எதிர்வினையாற்ற உறுதிகொள்ள வேண்டும், ஏனெனில் இந்த வழிமுறையில்தான் நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை உலகம் அறியும்.
நீங்கள் சரியாக எதிர்வினையாற்றுவது எப்போதாவது கடினமாக இருந்ததா? திவ்ய சுபாவங்களுடன் கடினமான சூழ்நிலையை நீங்கள் எப்போது எதிர்கொண்டீர்கள்?
அன்பு இயேசுவே, உமது சுபாவங்களை அணிந்து கொள்ள எனக்கு உதவும். ஒவ்வொரு நாளும் உம்மை போலவே இருக்க என் மனதையும் இதயத்தையும் திறந்தருளும்.
