மறைந்த எனது மனைவி ஃபெயித், பிறர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாள். அவளுடைய தாழ்மையும் ஊழியனைப் போன்ற மனப்பான்மையும், பலர் அவளிடம் நம்பிக்கை கொண்டு தனக்குக் காரியங்களை வெளிப்படையாகப் பேச உதவியது. அவள் பின்புலத்தில் தன்னை வெளிக்காட்டாமல் மறைந்தேயிருந்தாள், ஆனால் ஜனங்கள் இயேசுவைச் சிறப்பாகப் பின்பற்றுபவர்களாக இருக்க உத்வேகமளித்து தாக்கத்தை ஏற்படுத்தினாள். சத்தமின்றி பிறரிடம் தாக்கம் உண்டாக்கிய பின்புலத்தில் செயல்பட்டவர்களின் கதைகளால் வேதாகமம் நிரம்பியுள்ளது. தந்தைக்குப் பிடித்த மகனைக் கொல்வதைத் தவிர்க்க ஒரு சகோதரன் தன் உடன்பிறப்புகளை அசைத்தான் (ஆதியாகமம் 37:21-22). ஒரு பானபாத்திரக்காரன் ஒரு ராஜாவை அலங்கத்தின் சுவரை மீண்டும் கட்ட அனுமதிக்கும்படி அசைத்தான் (நெகேமியா 2). கிணற்றருகே இருந்த ஒரு சமாரியப் பெண் தன் கிராமத்தில் இயேசுவைப் பற்றிச் சொன்னாள் (யோவான் 4:29).

அவர்களைச் சாதாரணமாக நாம் நினைக்கலாம். ஆயினும்கூட, ரூபனின் செயலால் எகிப்தியர்களும் இஸ்ரவேலின் குடும்பமும் கடும் பஞ்சத்தையும் சமாளித்தனர் (ஆதியாகமம் 37:18-36). நெகேமியா ராஜாவின் ஆசியுடன் எருசலேமின் அலங்கங்களை மீண்டும் கட்டுவதற்காகத் தாயகம் திரும்பினார் (நெகேமியா 2). கிணற்றருகே இருந்த பெண் ஒரு முழு கிராமத்தையும் இயேசுவிடம் வந்து அவருக்குச் செவிகொடுக்கும்படி அசைத்தாள் (யோவான் 4). இவர்களில் எவரும் “மாம்சத்தின்படி ஞானிகளோ”, “வல்லவர்களோ”, “பிரபுக்களோ” அல்ல (1 கொரிந்தியர் 1:26). ஆனாலும் தேவன் அவர்களைப் பயன்படுத்தி பிறரை அசைத்தார் (வ.27-39).

பெரியவர்கள் சிறியவர்கள் என நாமும் மக்களை அசைக்கலாம். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறியது போல், “எல்லோரும் சிறந்தவர்களாக இருக்க முடியும், ஏனென்றால் அனைவராலும் ஊழியஞ்செய்ய கூடும். ஊழியம் செய்ய நீங்கள் கல்லூரி பட்டம் பெற்றிருக்க வேண்டியதில்லை. ஊழியம் செய்ய உங்கள் படிப்பும் செயலும் ஒத்துப்போக வேண்டிய அவசியமில்லை. உங்களுக்குக் கிருபையால் நிறைந்த உள்ளமும் அன்பினால் மறுரூபமான மனமுமே தேவை”. நாம் தேவனுக்கும் பிறருக்கும் ஊழியம் செய்யும்போது, பின்புலத்திலிருந்தாலும்கூட நம் தாக்கம் அதிகமாக இருக்கும்.