ஜூலை 14, 2023 அன்று, விண்வெளி ஆராய்ச்சி அரங்கில் உள்ள மேல்தட்டு நாடுகளுடன் இந்தியா இணைந்தது. சந்திராயன்-3 இன் அந்த வெற்றிகரமான திட்டமானது இந்தியாவிற்கு ஒரு வெற்றி மட்டுமல்ல, இது உலகில் இதுவரை ஏவப்பட்ட மிகவும் செலவு குறைந்த செயற்கைக்கோள் ஆகும். குறைந்த பொருட்செலவு, ஆனால் வெற்றிகரமான இந்த செயல் முயற்சியைப் பற்றிப் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இன்டர்ஸ்டெல்லர் மற்றும் கிராவிட்டி போன்ற விண்வெளி பற்றிய சில ஆங்கில திரைப்படங்களை விட இந்தியாவின் உண்மையான விண்வெளி ஆய்வு மலிவானது என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

நமக்கான இன்றைய வசனப்பகுதியில், விசுவாசிகள் தங்கள் இரட்சிப்புக்காக இயேசு செலுத்திய கிரயத்தைக் கருத்தில் கொள்ள அழைக்கப்படுகிறார்கள். நாம் இயேசுவைப் பற்றி அறியாமல் இருந்தபோது நாம் கொண்டிருந்த “இச்சைகளின்படி” நடக்க வேண்டாம் (வ.14) என்று ஆசிரியர் நம்மை அறிவுறுத்துகிறார். நமக்களிக்கப்பட்ட “வீணான நடத்தையினின்று” (வ.18) தேவன் நம்மை இரட்சித்தார். மாறாக, நமது மீட்பிற்கான பெரும் விலைக்கிரயத்தைப் பற்றி அறியாமல் இருக்க கூடாது என்று ஆசிரியர் விசுவாசிகளை ஊக்குவிக்கிறார். தேவனுக்கும் கூட இந்த கிரயச்செலவு மிக அதிகம். இது ” கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே” (வ.19) வாங்கப்பட்டது. கிறிஸ்து நமக்காகச் செலுத்திய விலைக்கிரயத்தை நாம் உணரும்போது, கிறிஸ்து நமக்களிக்கும் பரிசுத்த வாழ்க்கையை நாம் உண்மையாக மதிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் முடியும் (வ.15).

நமது நவீன யுகத்தில் நாம் எடுக்கும் பல தீர்மானங்களின் மையத்தில் செலவு கணக்கீடு உள்ளது. ஆனால், தேவனுடனான நமது உறவை மீட்டெடுக்கக் கிறிஸ்து செலுத்திய செலவீட்டை நாம் ஒருபோதும் குறைக்க முடியாது. மேலும் என்னவென்றால், நமக்கு அருளப்பட்ட இந்த மீட்பிற்காக நாம் ஒருபோதும் அவருக்கு எதையும் திரும்பச் செலுத்த முடியாது. ஆகையால், அவர் கட்டளையிட்டபடி தேவனையும் ஒருவரையொருவர் நேசிப்பதையும், ஜீவன் தரும் கிறிஸ்துவின் பலியைக் கனப்படுத்தும் வாழ்க்கை வாழ்வதையும் தெரிந்துகொள்வோம் (வ.22).