தீவிர மன இறுக்க நோயால் பாதிக்கப்பட்ட ரஞ்சித், தனது வாழ்நாள் முழுவதும் கேலிசெய்யப்படுவதை எதிர்கொண்டார். பாகுபாடு காட்டப்பட்டு அவமானப்படுத்தப்படுவோமோ என்ற பயம், ரஞ்சித் தன்னைச் சுற்றியிருப்பவர்களைக் கண்டு பயப்படும் நிலைக்கு இட்டுச்சென்றது. இருப்பினும், அவர் தொழில்நுட்ப ஆலோசகராக ஒரு நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டபோது இது மாறியது. அங்கு அவரது குழுவினரின் பொறுமையான மற்றும் குற்றப்படுத்தாத உரையாடல்கள், மக்கள் மற்றும் வாழ்க்கை பற்றிய ரஞ்சித்தின் கண்ணோட்டத்தை மாற்றியது.
ரோமாபுரியின் விசுவாசிகளிடம் உரையாற்றிய பவுல், கிறிஸ்துவைப் போல எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சில நடைமுறை வழிகாட்டுதல்களை வழங்குகிறார். விசுவாசத்தில் வலுவாக இருப்பவர்களை, பலவீனமானவர்களிடம் பொறுமையாக இருக்குமாறு அவர் வலியுறுத்துகிறார் (வ.1) மற்றும் கிறிஸ்துவின் சரீரத்தில் மெய்யான குழு உணர்வை ஊக்குவிக்கிறார். நம்மைப் பிரியப்படுத்துவதற்குப் பதிலாக அல்லது பிறரின் பலவீனத்தில் அவர்களை அவமானப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களைத் தாங்கும்படி (வ.1-2) அவர்களுக்கு நன்மை செய்வதன் மூலம் அவர்களிடம் இரக்கம் காட்டுமாறு பவுல் கூறுகிறார். அவ்வாறு செய்யும்போது, கிறிஸ்துவைப் போன்ற சுபாவத்தைக் காட்டுகிறோம் (வ.5). எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய பலவீனங்களில் இயேசு நம்மிடம் இரக்கம் காட்டுகிறார் (வ.3-7). சபைக்கும் நமக்காகவுமான பவுலின் ஜெபமும் ஆசீர்வாதமும் என்னவென்றால், தேவன் அருளும் “பொறுமை மற்றும் ஏகசிந்தை” கொண்டு நாமும் ஒருவருக்கொருவர் இயேசுவின் மாதிரியின்படியே இருக்கலாம் (வ.6) என்பதே. நாம் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, தேவனுக்கு மகிமையாகப் பரஸ்பர இணக்கத்துடன் வாழலாம் (வ.7).
ரஞ்சித்தின் குழுவினர் செய்ததைப் போல, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை நாம் ஏற்படுத்த முடியும். ரோமாபுரி சபையானது, இன்னும் தேவனைப் பற்றிய அறிவில் வளர்ந்து வருபவர்களுக்குப் பாரபட்சமற்ற சூழலை உருவாக்கும்படி ஊக்குவிக்கப்படுகிறது. இயேசுவின் சக சீடர்களின் பலவீனங்களைப் பற்றி நியாயம் தீர்ப்பதற்குப் பதிலாக, நம்முடைய உதவி தேவைப்படுபவர்களுக்கு ஊழியம் செய்யவும் பெலப்படுத்தவும் நம் பலத்தைப் பயன்படுத்தலாம்.
நீங்கள் பலவீனப்பட்டபோது தேவனின் இரக்கம் உங்களை எவ்வாறு பலப்படுத்தியது? இன்று உங்களைச் சுற்றியுள்ள யாருக்கு உங்கள் பொறுமை மற்றும் ஊக்கம் தேவைப்படக்கூடும்?
அன்பு கர்த்தரே, பலவீனர்களிடம் இரக்கம் காட்டுவதன் மூலம் உமது முன்மாதிரியைப் பின்பற்ற எனக்கு உதவும்.
