ரித்தி பழங்குடி குடும்பத்தில் பிறந்தவள். அவளால் நடக்க முடியாமல் இருந்தது. ஆனால் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அவளுக்காக ஜெபித்தபோது, அவள் அற்புதமாகக் குணமடைந்தாள். மூன்று வயதிற்குள்ளாகவே, அவள் மழலை மொழியில் பாடவும், ஜெபத்தில் இணையவும் தொடங்கினாள். இது அவளது கிராமத்தில் உள்ள பல குழந்தைகளையும் இவ்வாறாகச் செய்யத் தூண்டியது. ரித்தி, குறுநடை போடும் மழலை, தனது கிராமத்தில் தேவனின் வல்லமைக்கு முதல் சாட்சியானாள். அவளால், பல குழந்தைகளும் அவளுடைய முழு குடும்பமும் தேவன் மீது விசுவாசம் கொண்டுள்ளனர்.
தேவ வல்லமைக்குச் சாட்சியாக மாறிய மற்றொரு சிறுமியைப் பற்றி வேதாகமம் பேசுகிறது. அவள் பெயர் குறிப்பிடப்படாத இஸ்ரவேல் சிறுமி, ஆராமிய வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டு, ஆராமின் படைத் தளபதி நாகமானின் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் அவனது மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள் (வ.2). ஆனால், தன் எஜமான் குஷ்டரோகத்துடன் வாழ்வதைக் கண்டதும், பெயர் குறிப்பிடப்படாத இந்த சிறுமி தைரியம் கொண்டு தன் எஜமானியிடம், “சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசி.. இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்” (வ.3) என்றாள். நாகமான் தீர்க்கதரிசி எலிசாவைப் பார்க்கச் சென்று அவருடைய வார்த்தைகளுக்குச் செவிசாய்த்தபோது, அவனுடைய மாம்சம் புதுப்பிக்கப்பட்டு, “ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்” (வ.14). குணமடைந்த நாகமான் தேவ வல்லமைக்குச் சாட்சியாகவும் அவருடைய விசுவாசியாகவும் ஆனார் (வ.14-17).
ரித்தி மற்றும் இஸ்ரவேல் சிறுமியைப் போல, உங்கள் வயது அல்லது நிலைமை எதுவாக இருந்தாலும், நீங்கள் தேவனின் உன்னதமான நம்பிக்கையை சுமக்கும் பாத்திரமாக இருக்கலாம். இயேசு சிறு பிள்ளைகளை தம்முடைய ராஜ்யத்திற்குரியவர்களாக அங்கீகரித்தபோது அவர்களின் திறனையும் அங்கீகரித்தார் (மத்தேயு 19:14). தேவனின் ராஜ்யத்தில் வயது வரம்புகள் இல்லை. வேதாகமம் சொல்வது போல், “குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்” (சங்கீதம் 8:2).
குழந்தைகளால் நீங்கள் எந்தெந்த வழிகளில் உந்தப்பட்டீர்கள்? குழந்தைகளின் இதயங்களில் நாம் எப்படி விசுவாசத்தை விதைக்க முடியும்?
கர்த்தாவே, உமது ராஜ்யத்தில் உள்ள சிறு குழந்தைகளைக் கூட உமது புகழ் பாடுவதற்கு நீர் அழைப்பது ஆச்சரியமாக இருக்கிறது! உமது வல்லமைக்குச் சாட்சியாக இருக்க எங்களுக்குத் தைரியம் தாரும்.
