புறஜாதியைச் சேர்ந்த அவருடைய குடும்பத்தில், விக்ரம் மட்டுமே இயேசுவை ஏற்றுக்கொண்டிருந்தார். உள்ளூர் திருவிழாவில் பங்கேற்கும்படி அவரது பெற்றோர் அவரைக் கேட்டபோது, அதை எவ்வாறு சமாளிப்பது என்று அவர் கவலைப்பட்டார். எனவே, “தேவனே, நான் செய்ய வேண்டியதை போதித்தருளும்” என்று ஜெபித்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது பெற்றோர் தாங்களாகவே பிரச்சினையைத் தீர்த்தனர், அவர்களுடனான அவரது உறவும் பாதிக்கப்படவில்லை. விக்ரமின் கவலைகள் தீர்க்கப்பட்டன, மேலும் தனது ஜெபத்திற்குப் பதிலளித்த தேவனை ஸ்தோத்திரித்தார்.

ஒரு புதிய ராஜ்யத்தின் புதிய ராஜாவான யெரொபெயாம் கவலைப்பட்டபோது, அவன் அதைத் தேவனிடம் கொண்டு செல்லவில்லை. தேவன் இஸ்ரவேலை இரண்டு ராஜ்யங்களாகப் பிரித்திருந்தார்; யூதா மற்றும் இஸ்ரவேல். மேலும் யெரொபெயாமை இஸ்ரவேலுக்கு ராஜாவாக நியமித்தார் (1 இராஜாக்கள் 11:31-39). ஆனால் ஜனங்கள் தேவனை வணங்க எருசலேமுக்குச் சென்றபோது, அவர்கள் தங்கள் முன்னாள் ராஜாவான ரெகொயொமுடன் மீண்டும் சோ்ந்துகொள்வர் என்று யெரொபெயாம் கவலைப்பட்டான் (வ.26-27). யெரொபெயாம் தனக்கு முன் வழிகாட்டிய தேவனிடம் தனது கவலையைக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, தனது ஆலோசகர்களிடம் சென்றான் (வ.28). அவன் பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, “இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள்” என்றான். இது தேவனை கோபமூட்டியது மற்றும் இஸ்ரவேலின் ஆவிக்குரிய சீரழிவுக்கு வழிவகுத்தது.

நமது விசாரங்கள் தொடர்பாக யாரிடம் ஆலோசனை கேட்கிறோம் என்பது முக்கியம். யெரொபெயாமைப் போலவே நாம் மனித ஞானத்தை நம்புகையில், நாம் பிரயோஜனமுள்ளவையாக நினைக்கும் விஷயங்களைச் செய்யலாம், ஆனால் உண்மையில் அவை பிரயோஜனமற்றது (எரேமியா 17:9). நமது கிரியைகள் தேவனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தலாம் மற்றும் நமக்கும் நமது சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்கலாம். எனவே, நம் சுய ஞானத்தைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, விக்ரம் செய்ததைப் போல நம் கவலைகளைத் தேவனிடம் கொண்டு வர வேண்டும் (யாக்கோபு 1:5). ஏனென்றால், ஆதிமுதல் அந்தம் வரை அறிந்த ஆண்டவர், நம் நடைகளை ஸ்திரப்படுத்துவதாக வாக்களிக்கிறார்.