ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவுளி துறை மாணவர்கள், தெற்கு குஜராத்தின் பாரம்பரிய ரோகன் கலையைப் பயன்படுத்தி, ஊக்கமான வாசகங்களைக் கொண்ட டீ-ஷர்ட்களை சுவாரஸ்யமாக வடிவமைத்திருந்தனர். இந்த கலைஞர்கள் எண்ணெய் மற்றும் காய்கறி சாயங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்துகின்றனர், மேலும் ஒரு தூரிகை மூலம் அவர்கள் விசித்திரமான வடிவங்களை வரைகிறார்கள். குணமாகுதலைக் கருப்பொருளாகக் கொண்டு, இந்த நவீன டி-ஷர்ட்களின் தொகுப்பு அந்த பண்டைய கலை வடிவத்தைக் குறிப்பாகக் கவலை, மன அழுத்தம் அல்லது மனசிதைவிற்கு உள்ளானவர்களுக்காக பயன்படுத்தினர். அவற்றை அணிந்தவர்கள் தங்கள் நம்பிக்கையின்மைக்கு மத்தியில் நம்பிக்கை பெறுவார்கள் என்றெண்ணினர்.
ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சிக்குப் பிறகு அவர்களது நிர்வாணத்தை மூடி முதலில் உடுத்துவித்ததின் மூலம் அவர்களின் நம்பிக்கையற்ற சூழ்நிலைக்குத் தேவனும் பதிலளித்தார். சர்ப்பத்தினால் தவறாக வழிநடத்தப்பட்ட அவர்கள், தடைசெய்யப்பட்ட பழத்தை புசிக்கத்தக்கதாக கண்டனர் (வ.6). விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியது. அது அவர்களின் கண்களைத் திறந்து, அவர்களின் பாவத்தை அவர்களுக்கு உணர்த்தியது. பயம், குற்ற உணர்வு மற்றும் அவமானம் போன்ற உணர்வுகளை முதன்முறையாக அனுபவித்ததால், அத்தி இலைகளின் ஆடைகளால் அவர்களின் நிர்வாணத்தை போதுமான அளவு அவர்களால் “மறைக்க” முடியவில்லை (வ.7). எனவே, தேவன் தம் கிருபையால் அவர்கள் அணிவதற்கு “தோல் உடைகளை” உண்டாக்கினார் (வ.21). அவர்களின் உடனடித் தேவையைச் சந்தித்தார்.
தேவன் நம் அனைவருக்கும் என்ன செய்தார் என்பதற்கு இது ஒரு அடையாளம். நம்முடைய பாவம் வெளிப்பட்டபோது, தேவன் கிருபையாக தம்முடைய குமாரனாகிய இயேசுவைத் தம்முடைய “இரட்சிப்பின் வஸ்திரங்களாலும்” அவருடைய “நீதியின் சால்வையை” கொண்டும் (ஏசாயா 61:10) நம்மை மூடிக்கொள்ளும்படி நம்மிடம் அனுப்பினார். பயம், துக்கம், குற்ற உணர்வு, அவமானம் அல்லது சீர்கேடு போன்ற உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளும்போது, தேவன் நமக்கு ஏற்கனவே செய்ததை நாம் நினைவில் கொள்வோம். அவருடைய தியாகத்தால் நாம் மூடப்பட்டுள்ளோம். எனவே, நாம் அவரில் வஸ்திரம் தரித்து பூரணமாக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிந்து நம்பிக்கை கொள்ளலாம்.
உங்கள் நம்பிக்கையின்மைக்கு மத்தியில் நம்பிக்கையைக் கண்டறியத் தேவன் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்? இயேசுவின் மூலம் தேவனின் நீதியை அணிவதன் அர்த்தம் என்ன?
அன்புள்ள ஆண்டவரே, நான் பாவத்தால் சோதிக்கப்படும்போது அல்லது புண்பட்டுக் கவலையுறும்போது, தயவாய் உமது நம்பிக்கையால் என்னை உடுத்துவியும்.
