தேவன் ஊக்குவிப்பதை உணர்ந்து, ஒரு எழுத்தாளராக ஊழியத்தில் அவரைப் பின்தொடர நான் ஒரு நிறுவன வேலையைத் துறந்தேன். இருப்பினும், நான் உடனடி விளைவுகளைப் பார்க்கவில்லை. மாற்றமாகிக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வெளியீட்டாளர் என்னை நிராகரித்ததை போல எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. முற்றிலும் ஏமாற்றமடைந்த நான், “தேவன் ஏன் என்னை அழைத்தார்?” என்றும் விட்டுவந்த வேலைக்கே திரும்பவும் எண்ணினேன். அப்போதுதான் அவர்களுக்கு எனது புத்தகத்தைத் தயாரிப்பதில் மகிழ்ச்சியென்றும், நான் மேலும் அதனை எழுத வேண்டும் என்றும் மற்றொரு மின்னஞ்சல் வந்தது. அதுமுதற்கொண்டு, நான் கற்பனை செய்யாத வழிகளில் தேவன் என்னைப் பயன்படுத்துகிறார்.

என் பயணம் பேதுருவை எனக்கு நினைவுபடுத்துகிறது. அவர் தனது மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அவரை மறுதலித்தார் (மத்தேயு 26:69-75). அவர் தன்னை குறித்து முற்றிலும் ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும் (வ.75). இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, ஒருவேளை தன்னைத் திசைதிருப்பிக்கொள்ள, பேதுரு தனது சகாக்களுடன் மீண்டும் மீன்பிடிக்க பரீட்சயமான நீர்நிலைகளுக்குச் சென்றார் (யோவான் 21:3). விடிந்தபோது, அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை (வ.3). மாறாக, அவர்கள் கடற்கரையில் இயேசுவைக் கண்டார்கள் (வ.4). வலைகளை எங்கு வீச வேண்டும் என்று இயேசு அவர்களிடம் கூறி, காலை உணவுக்கு வரும்படி அழைத்தார் (வ.6-13)). அவர் பேதுருவின் பின்மாற்றத்தைக் கண்டிக்கவில்லை, மாறாக “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக” (வ.15) என்று பேதுருவின் அழைப்பைப் புதுப்பித்தார்.

தேவன் நம்மை அழைக்கும்போது, காரியங்கள் உடனே வாய்க்காமல் போகலாம். நம்மை நாமே நொந்துகொண்டு, விளைவுகளைக் குறித்து சந்தேகம் கொள்ளலாம். ஆனால் தேவன் நம்மைப் பயிற்றுவிக்கவும் சுத்தம் பண்ணவும் அந்த காலத்தைப் பயன்படுத்துகிறார், அதனால் அவர் நம்மை தம் மகிமைக்காகப் பயன்படுத்த முடியும் (யோவான் 15:2). எனவே, பலன்களைக் காணாதபோது, பின்னிட்டு, பரீட்சயமான தண்ணீருக்குத் திரும்பிச் செல்வதற்குப் பதிலாக, தேவனின் நேரத்தை நம்பி பொறுமையாகக் காத்திருப்போம்.