நான் மனச்சோர்வடைந்தால் அல்லது விரக்தியடைந்தால், நான் என் வீட்டின் மொட்டை மாடியில் தனித்திருக்க விரும்புகிறேன். அங்கே, நான் தாராளமாக ஜெபிக்கவும் கண்ணீர் சிந்தவும் முடியும். ஆனால், அங்கே நின்று, குளிர்ந்த இரவுக் காற்றால் சூழப்பட்ட நான், பச்சை, நீலம், சிவப்பு மற்றும் மஞ்சளாக மின்னும் விளக்குகளின் திரளை அடிக்கடி பார்த்து வியக்கிறேன். அவை என் மனதில் உள்ள குழப்பத்தை மறக்கச் செய்கின்றன. தெளிந்த இரவு வானத்தின் அழகு, என் கவனத்தை எனது பிரச்சினைகளிலிருந்து நம் சிருஷ்டிகரின் மகத்துவத்திடமாய் மாற்றுகிறது.

யோபு தனது துன்பங்களுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியாதபோது, தேவன் தன்னிடம் பேசும்படி ஜெபித்தார் (யோபு 13:20-22). தர்க்கரீதியான கேள்விகளுக்கு விடையளிக்குமாறு யோபுவிற்கு சவாலிட்டு தேவன் பதிலளித்தார். தேவன் குவித்த பல ‘நீ அறிவாயா?’ என்ற கேள்விகளால் யோபு திணறினார். அக்கேள்விகளைக் கேட்டதன் மூலம், தேவன் யோபுவின் கவனத்தை அவனது பிரச்சினைகளிலிருந்து பிரபஞ்சத்தின் அற்புதமான காரியங்களிடமாய் திருப்பினார் (யோபு 38-41). தேவ வல்லமையாலும் ஞானத்தாலும் மூழ்கிப்போன யோபு, வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் தனது தகுதியின்மை மற்றும் பலவீனத்தை ஒப்புக்கொண்டார் (40:4), மேலும் தேவனின் வழிகளும் ஞானமும் தனது புரிதலுக்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்ந்து அவர் மனந்திரும்பினார் (42:5-6).

நாம் விரும்பியபடி காரியங்கள் நடக்காதபோது, நம் மனதில் கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. யோபுவைப் போலவே, நாமும் அவற்றைத் தேவனிடம் கொண்டுசென்று, நம் உணர்ச்சிகளை அவரிடம் நேர்மையாகத் தெரிவிக்கலாம். இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவனின் குரல் நம் வாழ்வில் இடியாக ஒலிப்பதை நாம் கேட்காமல் இருக்கலாம். ஆனால் காற்றில் பறக்கும் பறவைகள், கொல்லைப்புறத்தில் கிளைகளை அசைக்கும் மரங்கள் அல்லது இரவு வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் ஆகியவற்றை நோக்கி நம் பார்வையைத் திருப்பும்போது, அவற்றையெல்லாம் பராமரிக்கும் தேவன் நம் வாழ்க்கையையும் கட்டுப்படுத்துகிறார் என்பதை நிச்சயித்துக்கொள்வோம் (மத்தேயு 6:26-27).