நீலகிரி மலைகளில் ஏறும் போது யூகலிப்டஸ் தைல மரங்களின் இனிமையான வாசனை உங்கள் உணர்வுகளை நிரப்புகிறது. ஆனால் தைல மரம் இந்த மலைகளுக்குச் சொந்தமானது அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆங்கிலேய வணிகர்களுக்கு கோடைக்காலத்தைத் தாங்கக்கூடியதாக மாற்றுவதற்காகக் காலனித்துவ காலத்தில் பயிரிடப்பட்ட ஒரு ஆக்கிரமிப்பு இனமாகும். அப்பாவித்தனமாய் தோன்றும் ஒரு செயல் இப்போது சூழலியலில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்துகிறது, ஏனெனில் விலங்குகள் அதன் விஷ இலைகளைச் சாப்பிட முடியாது. உணவு தேடி வயல்கள் மற்றும் பயிர்களை இவை தாக்குகின்றன, இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இவற்றைத் திருப்பி தாக்குகின்றனர். பூர்வீக வகை தாவரங்களை மீண்டும் அறிமுகப்படுத்த இப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், முந்தைய தவறுகள் இன்னும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
கலாத்திய சபைக்கு நிருபம் எழுதியவர், மாம்ச இச்சையைத் திருப்திப்படுத்துவதற்கு எதிராக அவர்களை எச்சரிக்கிறார் (வ.16). விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் (வ.19-21) போன்றவை மாம்ச இச்சைகள் என்று அவர் வரையறுக்கிறார். ஒரு ஆக்கிரமிப்பு இனத்தைப் போலவே, இந்த வெளித்தோற்றத்தில் பாதிப்பில்லாத பாவங்கள் வேரூன்றி, இறுதியில் நமக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனினும், நாம் “ஆவிக்கேற்றபடி” நடந்துகொண்டால் மேற்கொள்ள முடியும் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார் (வ.17). அப்போது நாம் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகிய கனிகளைக் கொடுப்போம் (வ.22-23).
பாவத்தின் ஆக்கிரமிப்பு விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ளும்போது, நமக்கு நம்பிக்கை உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசு நமக்காக அனுப்பிய ஆவியானவர், சரியான பாதையில் நடக்க நமக்கு உதவ வல்லவர் (2 கொரிந்தியர் 5:5). மாம்சமும் ஆவியும் எப்போதும் முரண்படுவதால் முதலில் கடினமாக இருக்கலாம் (வ.17), ஆனால் இயேசுவில் நாம் பாவத்தின் ஆக்கிரமிப்பை மேற்கொள்ள முடியும்.
உங்கள் வாழ்க்கையில் பாவத்தின் ஆக்கிரமிப்பு ஆற்றலை நீங்கள் எவ்வாறு எதிர்க்க முடியும்? ஆவியுடன் நடக்க உங்களுக்குத் தேவனின் உதவி தேவைப்படும் உங்கள் வாழ்க்கையின் சில பகுதிகள் யாவை?
பரலோகத் தகப்பனே, என் ஆத்துமாவை ஆக்கிரமிக்கும் எல்லா பாவங்களையும் என்னிடமிருந்து அகற்றி, உமக்குப் பிரியமான நற்கனிகளை தர எனக்கு உதவும்.
