வீட்டில் மீன் குழம்பு செய்ய மட்டுமே பயன்படுத்தும் மண் பானை உள்ளது. அது மற்ற பானைகளிலிருந்து வித்தியாசமாகத் தெரியாது. நாங்கள் அதில் மீன் சமைக்க ஆரம்பிக்கும் முன் அது எந்த வகையிலும் தனித்துவமானதாக இல்லை. இருப்பினும், இப்போது வேறு எந்த உணவையும் தயாரிப்பதற்கு அதனைப் பயன்படுத்த முடியாது, ஏனென்றால் அதில் நாம் எதைச் சமைத்தாலும் அதில் கொஞ்சம் “மீன்” வாசம் இருக்கும். ஆயினும்கூட, இது நீர்வாழ் உயிர் உணவுகளுக்கான எங்களுடைய பிரேத்யேகமான பானையாகும், ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அதில் சமைக்கும்போது, குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில், நாம் வீட்டில் பயன்படுத்தும் வெவ்வேறு பானைகளைப் பற்றிப் பேசுகிறார். சில பாத்திரங்கள் “கனத்திற்கு” என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன, சில “கனவீனத்திற்குமானவை” (வ.20) என்று அவர் விளக்குகிறார். பின்னர், பவுல் தேவஜனங்களுக்கு ஒப்பாக இதனைப் பயன்படுத்துகிறார் (வ.14). தேவஜனங்கள் விசேஷித்த நோக்கங்களுக்காகப் பிரித்தெடுக்கப்பட்டுள்ளனர், எனவே அவர்கள் எந்த நற்கிரியையும் செய்ய “எஜமானுக்கு உபயோகமானதாக” (வ.21)இருக்க முடியும் என்று அவர்களுக்குத் தொடர்ந்து நினைப்பூட்டுமாறு (வ.14) தீமோத்தேயுவிடம் கூறுகிறார். இப்போது அவர் அவர்களை விசேஷித்தவர்களாக்கியதால், அவர்கள் சண்டையிடுதல், அவபக்தியான பேச்சு, தீய இச்சைகள் மற்றும் புத்தியீனமான வாக்குவாதங்களிலிருந்து விலகி வாழ அழைக்கப்பட்டனர் (வ.14-24). அவர்கள் “நீதி, விசுவாசம், அன்பு மற்றும் சமாதானத்தை அடையவும்” மற்றும் “எல்லாரிடத்திலும் சாந்தமாகவும்” (வ.21-22) தேவனால் அங்கீகரிக்கப்பட்டவர்களாகப் பிரித்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

பவுலின் செய்தி நமக்கும் பொருந்தும். கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கையிடும் நாம் அவரால் அறியப்பட்டும் தெரிந்துகொள்ளப்பட்டும் இருக்கிறோம் (வ.19). நாம் இயேசுவை விசுவாசிக்கும்போது, நாம் ஒவ்வொருவரும் தேவனின் பயன்பாட்டிற்காகப் பிரித்தெடுக்கப்பட்ட ஒரு விசேஷித்த பாத்திரமாக மாறுகிறோம். தேவனின் சுபாவத்தைப் பிரதிபலிக்காத விஷயங்களை நாமும் கைவிட வேண்டும் என்பதே இதன் பொருள் (வ.19). அதற்குப் பதிலாக, நாம் “எஜமானுக்கு உபயோகமானதாக” இருக்கும் பொருட்டு, தேவன் விரும்புவதைச் செய்வதற்கு நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். நமது எஜமான் பயன்படுத்தக்கூடிய மண்பாண்டங்களாக இருப்போம் (1 கொரிந்தியர் 4:7).