எனது பாட்டியின் நினைவு நாளில், நானும் எனது கணவரும் அவரது கல்லறைக்குச் சென்று அவரது கல்லறையில் ரோஜாக்களை வைத்தோம். என் கணவர் அவளைச் சந்தித்ததே இல்லை. எனவே, அவர் அவளைப் பற்றி என்னிடம் கேட்டபோது, நான் அவளுக்குப் பிடித்த பாடல்களைப் பாடினேன், அவளது விஸ்தாரமான கிறிஸ்துமஸ் சமையலைப் பற்றிப் பேசினேன், காட்டுக் காளான்களை எப்படித அறிவது என்று அவளுக்குத் தெரியும் என்று நான் அவரிடம் சொன்னபோது சிரித்தேன். அவள் சரீரப்பிரகாரம் எங்களுடன் இல்லாவிட்டாலும், அவளுடைய கல்லறைக்குச் சென்று அவளது கதைகளைப் பகிர்ந்துகொண்டது, அவளுடைய அன்பு, வாழ்க்கை மற்றும் உணவு பற்றிய நினைவுகளால் என் மனதை நிரப்பியது. இயேசு மரிப்பதற்கு முன், அவர் தனது சீடர்களுடன் ஒரு தாராளமான பஸ்கா விருந்தை பகிர்ந்து கொண்டார். அவர் விரைவில் பாடுபட்டு மரிப்பாா் என்று அவர்களிடம் கூறினார் (வ.15). உண்மையில், அதே இரவில் அவர் கைதுசெய்யப்படுவார் (லூக்கா 22:54). இந்த சூழ்நிலையில், இயேசு அப்பத்தை எடுத்து, தேவனை ஸ்தோத்திரித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “ இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார் (வ.19). “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது” (வ.20) என்று கூறி, ஒரு பாத்திரத்தில் திராட்சரசத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்.
மறுநாள் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் எழுந்தார், இறுதியில் பரலோகத்திற்குத் திரும்பினார். ஆயினும் இன்றும் கூட, அவருடைய சீஷர்களாகிய நாம் இன்னும் அவரை நினைவுகூரும் வகையில் அப்பம் பிட்டு, திராட்சரசம் பகிர்ந்து கொள்கிறோம், ஏனென்றால் அது இயேசுவினால் நிறுவப்பட்ட ஒரு அழகான நினைவுச்சம்பவமாகவும், மேலும் அவர் மீண்டும் வருவதற்கான நித்திய வாக்குறுதியாகவும் இருக்கிறது (வ.15-18). நாம் இயேசுவைச் சரீர ரீதியாகப் பார்க்கவோ தொடவோ முடியாமல் போகலாம், ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார் என்றும், அவருடைய அன்பு, வாழ்க்கை மற்றும் போஷிப்பால் ஒவ்வொரு நாளும் நம்மை நிரப்புகிறார் என்பதையும் நாம் அறிவோம். நாம் அப்பம் பிட்கும்போது, இயேசுவின் வாக்குறுதியை நினைவுகூர்ந்து, அவர் நம்மில் செயல்படவும் உள்ளிருந்து அவரைப் போல நம்மை மாற்றவும் அவரை அனுமதிப்போம்.
நீங்கள் கர்த்தருடைய பந்தியில் பங்குகொள்ளும்போது எதை நினைக்கிறீர்கள்? நீங்கள் வேறு எப்படியெல்லாம் இயேசுவை நினைவுகூர முடியும்?
இயேசுவே, நான் உம்மை நினைவுகூர ஒரு சிறப்பான வழியை ஏற்படுத்தியதற்காக உமக்கு நன்றி. நீர் இங்கே உள்ளீர் என்பதை அறிய எனக்கு உதவும். உமது அன்பு, வாழ்வு மற்றும் போஷிப்பால் என்னை நிரப்பும்.
