குறிப்பாகக் கொண்டாட்டங்களின் போது இலைகள் மற்றும் செடிகள் தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. விருந்தாளிகளை வரவேற்பதற்காகத் திருமண மண்டபத்தின் நுழைவாயிலில் ஒளிரும் விளக்குகளுடன் பின்னிப்பிணைந்த வாழை மரங்கள் கட்டப்படுகின்றன. ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட மா இலைகள் கதவுகளை அலங்கரிக்கப் பயன்படுகின்றன. வாழை இலைகள் வண்ணமயமான, பல வகை உணவைப் பரிமாற ஒரு தட்டாகப் பயன்படுத்தப்படுகின்றன. மற்றும் தேங்காய் பனை அலங்காரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
யூதேயாவிலும் இலைகள் அவர்களின் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததாகத் தெரிகிறது. கழுதையில் ஏறி, இயேசு எருசலேமுக்குள் நுழைந்தபோது, பஸ்கா பண்டிகை நடந்து கொண்டிருந்தது. எகிப்திலிருந்து கிடைத்த விடுதலையைக் கொண்டாட உலகம் முழுவதிலுமிருந்து யூதர்கள் ஒன்றுகூடிய நேரம் அது. கொண்டாட்டம் மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகப் பனை ஓலைகளைப் பயன்படுத்துவது ஒரு பாரம்பரியமாக இருந்தது. ரோமாபுரியின் இரும்புப் பிடியின் கீழ், யூதர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு மோசே செய்ததைப் போல, ஒரு மேசியா எழும்பி தங்களைக் காப்பாற்றுவார் என்று ஏங்கினார்கள். எனவே, நாசரேத்திலிருந்து அற்புதம் செய்பவரான இயேசு உள்ளே வந்தபோது, அது நம்பிக்கை அதிகரித்தது (வ.37). அவர்கள் பனை மரக்கிளைகளுடன் வெளியே சென்று, கைகளை அசைத்து, ” ஓசன்னா!” அதாவது “எங்களை இரட்சியும்” (மத்தேயு 21:8-9) என்று ஆர்ப்பரித்தனர். ஆத்தும இரட்சகராகிய தம்முடைய குமாரன் மூலமாக ‘தங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வேண்டும்’ என்ற அவர்களுடைய விருப்பத்திற்குத் தேவன் உண்மையில் செவிகொடுத்தார்.
எதிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதை நாம் அடிக்கடி அறியாமல் இருக்கிறோம். நமது பொருளாதார, உடல் அல்லது உணர்ச்சிப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால், நாம் இரட்சிக்கப்பட்டோம் என்று நினைக்கலாம். ஆனால் நமக்குத் தேவையான உண்மையான இரட்சிப்பு நம் ஆத்தும இரட்சிப்பு. இயேசு தம்முடைய இரட்சிக்கும் வல்லமையையும் அன்பையும் நமக்குக் காட்ட மனித உருவில் வந்தார் (லூக்கா 19:10). அவர் சிலுவையில் தம்முடைய தியாகத்தின் மூலம் நம் ஆத்துமாக்களை இரட்சித்தார். அதனால் அவர் நம் மூலமாக, மீட்பருக்காக வேண்டிநிற்கும் பிறரின் ஆத்துமாக்களையும் இரட்சிப்பார்.
இயேசு உங்களை எவ்வாறு இரட்சித்தார்? தேவனின் இரட்சிக்கும் அன்பை மற்றவர்களுக்கு எந்த விதத்தில் நீங்கள் சாட்சியாக அறிவித்திடலாம்?
அன்பு இயேசுவே, நீர் எருசலேமுக்குள் பவனி வந்தபோது பலர் உமக்கு குருத்தோலைகளை அளித்தனர். உமது ஒளி என் மூலமாகப் பிறரைச் சென்றடைய என் வாழ்க்கையை உமக்களிக்க எனக்கு உதவும்.
