நானும் என் கணவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு, எனது தாய் மாமா எனது குடும்ப வரலாற்றை எங்களிடம் கூறினார். எனது தாத்தா பள்ளி ஒன்றின் பள்ளி முதல்வராக இருந்த போதிலும் அந்த வருமானம் அவரது ஏழு பிள்ளைகளுக்கு போதுமானதாக இல்லை என்று விளக்கினார். ஆயினும்கூட, அவர் தனது மூத்த குழந்தைகளின் உயர் கல்வியில் முதலீடு செய்தார், அவர்கள் கல்லூரிக்குச் செல்லும்போது பெரும்பாலும் மாமாக்கள் அல்லது அத்தைகளுடன் தங்கினர். இந்த மூத்தவர்கள் சம்பாதிக்கத் தொடங்கியபோது, அவர்கள் தங்கள் இளைய உடன்பிறப்புகளின் கல்விக்கு ஆதரவளிக்கத் தொடங்கினர். “நாங்கள் ஒருவருக்கொருவர் உதவுகிறோம், உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் நீங்கள் எங்களிடம் வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்றவர்களுக்குத் தேவைப்படும்போது அவர்களுக்கு உதவவும் தயாராக இருக்கிறோம்” என்று அவர் உற்சாகமாகக் கூறினார்.

யோவானும் தனது நிருபத்தில், “பிள்ளைகளே” என்று அழைத்தவர்களுக்கு இதே போன்ற அறிவுரைகளை வழங்குகிறார். அவர், “என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்” (வ.18) என்று எழுதுகிறார். இயேசு தனக்கென்று ஒன்றும் செய்யாமல் நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தபோது நம்மீது கொண்டிருந்த அன்பை அவர் நமக்கு நினைவூட்டுகிறார் (வ.16). உண்மையில், “அன்பு இன்னதென்று” (வ.16) என்றால் இயேசுவின் செயலே என்று யோவான் கூறுகிறார். அதை மனதில் கொண்டு யோவான், விசுவாசிகளை தங்கள் “பொருள் உடைமைகளை” ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள அழைத்தார் (வ.17). ஒரு விசுவாசி, இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என்று யோவான் கேட்கிறார்.

தன்னுடைய உடைமைகளைப் பதுக்கி வைப்பது விவேகமானது என்று உலகம் நமக்குச் சொல்கிறது. ஆனால் இவை பிறர்க்குச் சேவை செய்யக் கொடுக்கப்பட்ட வரங்கள் என்று வேதாகமம் சொல்கிறது (1 பேதுரு 4:10). உறவினராகவோ, நண்பராகவோ, சக சீடராகவோ அல்லது அந்நியராகவோ யாரேனும் ஒருவர் தேவையில் இருப்பதைக் கண்டால், செயலாலும் உண்மையாலும் அவர்களை நேசிப்போம். அவ்வாறு செய்வதன் மூலம், நம்மில் இருக்கும் தேவனின் அன்பை மற்றவர்களுக்குக் காட்டுகிறோம்.