சிறுவயதில் கோடை விடுமுறையில் வேலூரில் உள்ள கோடைக்கால வேதாகம பள்ளிக்கு (விபிஎஸ்) சென்று வந்தேன். வெப்பநிலை சுமார் 45 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும். வானத்தில் மேகமோ, மரங்களில் இலையோ, தென்றல் வீசும் அறிகுறியோ இருக்காது. கொதிக்கும் வெயிலுக்கு இதமாக எங்களுக்கு இருந்த ஒரே நிவாரணம், எங்கள் புட்டிகளில் உள்ள தண்ணீரும் தன்னார்வலர்கள் வாளிகளில் கொண்டு வந்த பழச்சாறுகள் மட்டுமே. பழச்சாறு நிறைந்த ஒரு குவளை படியளப்பிற்கு நாங்கள் எங்கள் கோப்பைகளுடன் வரிசையில் நிற்போம். எவ்வளவு மெதுவாகக் குடிப்போம்! ஆயினும்கூட, எங்கள் கோப்பைகள் வறண்டு போகும், மேலும் நாங்கள் அதிகம் பெறத் தவிப்போம், அரிதாகவே இரண்டாவது முறையும் கிடைக்கும்.

வறண்டு போகத் தக்கதான கோடையில் திரவங்களுக்கான நமது தாகத்தைப் போலவே, பாழான அன்பற்ற உலகில் நாம் அனைவரும் அன்பிற்காகத் தாகம் கொள்கிறோம். நாம் பல்வேறு இடங்களில் அன்பைத் தேடுகிறோம், மேலும் அது பெரும்பாலும் அளந்து போடும்படிக்கு வறண்டு கிடக்கிறது அல்லது நிபந்தனைக்குட்பட்டு விலைகொடுத்து வாங்க வேண்டும் என்பதாகக் காண்கிறோம். ஆனால் ஒருபோதும் வறண்டு போகாத “ஜீவத்தண்ணீரின்” மூல ஆதாரம் இருப்பதாக வேதாகம நமக்குக் கற்பிக்கிறது (யோவான் 4:13-14). ஜீவத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது (யோவான் 7:39). அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியின் மூலம் “தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற(தாக)” (ரோமர் 5:5) நமக்குக் கூறுகிறார். இது அளந்து போடப்படுவதல்ல அல்லது நமது தகுதிக்கு தக்கதாகவும் அல்ல. மாறாக, அது எல்லையற்றது மற்றும் அளவிட முடியாதது.

நாம் அவருக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தபோதும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க அனுப்பியதன் மூலம் நம்மீதான தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார் (வ.8). இயேசுவின் பலியின் காரணமாக, அவரிடமிருந்து பிரிந்திருந்த தனிமையிலிருந்து நாம் இரட்சிக்கப்படுகிறோம், தேவனுடன் நாம் ஒப்புரவாக்கப்படுகிறோம். அவர் அவருடைய அன்பை நமக்குள் ஊற்ற, அது அன்பின் ஊற்றாக மாறும் (வ.10) . நீங்கள் அன்பிற்காகத் தாகமாக இருந்தால், தேவனிடம் செல்லுங்கள். அவரே அன்பு.