எஸ்தர் “பென்” கிம்சந்த், குஜராத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த 20 ஆம் நூற்றாண்டின் எழுத்தாளர். அவர் தனது எழுத்துக்கள் மூலம் மாநிலத்தில் பெண்களின் உரிமைகளை ஆதரித்தார். நல்ல கல்வி பெண்களை அவர்களின் குடும்பங்களிலும் சமூகங்களிலும் மரியாதைக்குரிய இடங்களில் வைக்க உதவும் என்று அவர் எழுதினார். எஸ்தர் தன் திறமைகளை தனக்குத்தானே வைத்துக் கொள்ளவில்லை அல்லது தன் சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்தவில்லை. மாறாக, தன்னைச் சுற்றியுள்ளவர்களை மேம்படுத்துவதற்காக அவற்றைப் பயன்படுத்தினாள். பேதுருவின் நிருபம் ஆசியா மைனர் முழுவதும் அகதிகளாகச் சிதறியிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது (1 பேதுரு 1:1). “ஒருவரையொருவர் ஆழமாக நேசிக்கவும்” மற்றும் “ஒருவருக்கொருவர் உதவிசெய்யவும்” அவர்கள் பெற்ற “எந்த ஈவையும்” பயன்படுத்தவும் அவர் அவர்களைத் தூண்டினார் (வ.10). இந்த ஈவுகளைக் குறித்து உரிமை பாராட்டாமல், அவர்களுடைய ஆவிக்குரிய வரங்களை “தேவனுடைய பற்பல கிருபை” என்று கருதும்படி பேதுரு அவர்களை வலியுறுத்தினார். தேவனுக்குச் சொந்தமானவற்றை ஜாக்கிரதையுடன் நிர்வகிக்கும் “நல்ல உக்கிராணக்காரர்போல” இருக்கும்படி அவர் அவர்களை உற்சாகப்படுத்தினார். அவர்கள் “தேவனுடைய வாக்கியங்களின்படி” பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு பேசவும், “தேவன் தந்தருளும் பெலத்தின்படி” ஜனங்களுக்குச் சேவை செய்யவும் அறிவுறுத்தினார். அதனால் அவர்களின் செயல்களிலும், அவற்றின் மூலமாகவும் தேவன் மகிமைப்படுவார் (வ.11) . இத்தகைய முறையில் நாம் செய்யும் எல்லாவற்றிலும் தேவனுக்கு மகிமையைச் சேர்க்கிறோம். எஸ்தர் மற்றும் ஆதிச்சபையைப் போலவே, நம்மிடமும் ஈவுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ஈவுகள், நமக்குச் சாதாரணமாய் தோன்றினாலும், தேவனுடைய ராஜ்யத்தை விரிவாக்க உதவலாம். இது உணவைத் தயாரிப்பதோ, கேள்விகளுக்குப் பதிலளிப்பதோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு நம் வீடுகளைப் பகிர்வதோ கூட இருக்கலாம். நாம் பேசவும் செயல்படவும் தேவைப்படுகையில், நாம் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்து தேவனுக்கு மகிமை சேர்க்க வேண்டும் (வ.11). இப்படியாக, நம்மிடம் உள்ள ஈவுகள் எதுவாக இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தி பிறரை முன்னேற்றுவோம்.