மர்ம புதிர்களை விடுவிப்பதென்பது என்னையும் சேர்த்து பலரைக் கவர்ந்த ஒன்றாகும். லடாக்கின் லே அருகே உள்ள ஒரு மலையில், வாகனங்கள் கீழ்நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, தானாக மேல்நோக்கிச் செல்கின்றன. “கிராவிட்டி ஹில் (புவியீர்ப்பு மலை)” என்று பிரபலமாக அழைக்கப்படும் இவ்விடத்திற்கு, மக்கள் இது ஒரு மாயத்தோற்றமாக இருக்கலாம் அல்லது மலைக்கு வலுவான காந்தப்புலம் இருக்கலாம் அல்லது நிலப்பரப்புதான் மனதளவில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறது என்றெல்லாம் கருதுகின்றனர். காரணம் எதுவாக இருந்தாலும், ஒன்று நிச்சயம், இந்த நிகழ்வு புவியீர்ப்பு விதிகளுக்கு எதிரானது போல் தெரிகிறது. இது ஒரு மர்மம்.
அப்போஸ்தலனாகிய பவுல், அவருடைய காலத்தில் நன்கு அறியப்பட்ட அறிஞராக இருந்தார், அவருடைய உயர்ந்த அறிவு, ஞானம் மற்றும் கல்வி நிலைப்பாட்டை மேன்மையாக எண்ணிட அவருக்கு எல்லா தகுதியும் இருந்தன (வ.1-2). ஆயினும்கூட, அவர் பயத்துடனும் நடுக்கத்துடனும் கொரிந்தியர்களிடம் வந்தார், ஏனெனில் அவர் சாட்சியிட்ட “இரகசியமானது” அவரது அறிவுத் திறனைக் காட்டிலும் உன்னதமானதாக இருந்தது. இந்த “இரகசியம்” மனிதக்குலத்தைப் பாவத்திலிருந்து மீட்பதற்கான தேவனின் புரிந்துகொள்ள முடியாத திட்டமாகும், மேலும் இது அவருடைய குமாரனாகிய இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. இதைத் திட்டமிடுவதிலிருந்த தேவஞானம் ஒரு இரகசியமாகும், இது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் (வ.5-10).கிறிஸ்துவை நமது இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, நாமும் இந்த மாபெரும் “இரகசியத்தின்” ஒரு அங்கமாகி விடுகிறோம். இதைத் தேவனே நமக்குள் ஏற்படுத்துகிறார். தேவனின் ஞானம் பூமிக்குரிய எந்த ஞானத்தையும் விட பெரியது, பரிசுத்த ஆவியானவர் மூலம் அது நமக்குக் கிடைக்கிறது. வாழ்க்கையின் பலவழிச் சாலையில் குடும்பம், நண்பர்கள் அல்லது சகாக்களின் ஞானத்தைச் சார்ந்துகொள்ள நாம் தூண்டப்படுகையில், சகல ஞானத்தின் மூலாதாரமான பரிசுத்த ஆவியானவரை (கொலோசெயர் 1:9) அண்டிக்கொள்வதில் தவறாதிருப்போமாக. ஏனென்றால் மனிதனின் ஞானம் நல்லது, தேவனின் ஞானம் சிறந்தது, அவருடைய பிரசன்னமும் எப்போதும் நம்மோடு உண்டு.
– ரெபேக்கா விஜயன்
தேவஞானத்தின் அவசியத்தை நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் ஞானத்தை எவ்வாறு தேடுகிறீர்கள்?
இயேசுவே, நான் எப்போதும் உமக்கு நேராய் திரும்ப முடியும் என்பதை அறிவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உமது ஆவியின் மூலம் உமது இரகசியமான ஞானத்தைப் பெற எனக்கு உதவும்.
