எனது ஊரில் உள்ள ஒரு சிறிய குடும்ப பல்பொருள் அங்காடி புத்தாண்டின் போது ஏழை மக்களுக்குப் பரிசுகளை வழங்க முடிவு செய்தது. அந்த அங்காடியே பொருட்களுக்குரிய விலையைச் செலுத்தியது, அதன் பணியாளர்கள் சில அத்தியாவசிய பொருட்கள், உடைகள் மற்றும் உணவுகளால் கடையை நிரப்பினர். அழைக்கப்பட்ட ஏழை மக்கள் கடைக்குள் நுழைந்தபோது, “விலைப்பட்டிகள் இல்லை, உங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்று உங்களுக்கு எல்லாம் இலவசம்!” என்று அறிவிக்கும் குரல் கேட்டது. புதிய ஆடைகள், புதிய உணவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவதை அவர்கள் கண்டதேயில்லை என்பதால், அவர்களின் நன்றியுணர்வு மெய்யாகவே மேலோங்கியது.
தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக முற்றிலும் இலவசமான ஒரு பரிசை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்று அப்போஸ்தலன் பவுல் கூறுகிறார். பாவம் மற்றும் மரணத்தின் வல்லமையிலிருந்து நம்மை இரட்சித்த இயேசுவின் மூலம் தேவனே இந்த பரிசுக்கான விலையைச் செலுத்தினார், ஆகையால் நாம் அவருடன் என்றென்றும் வாழ முடியும் (ரோமர் 6:23). தேவன் அதற்கான விலையை முன்கூட்டியே செலுத்தியதின் மூலம் நமக்கு இரட்சிப்பை இலவசமாக்கினார். கிறிஸ்துவின் இரத்தமே விலை. அவர் நம்மைக் கிரயத்தால் மீட்டுத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டதால், நாம் இனி நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல, நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் (1 கொரிந்தியர் 6:20). நமது பிரயத்தனம் இந்த விலையேறப்பெற்ற பாக்கியத்தை வாங்கியிருக்க முடியாது (எபேசியர் 2:8-9). அவருடைய மிகுந்த அன்பினால்தான் நமக்கும், விசுவாசத்தோடு அவரிடம் திரும்புகிற அனைவருக்கும் இரட்சிப்பு இலவசமாக அருளப்படுகிறது.
கொடுக்கப்பட்ட பொருட்களுக்கு அங்காடியின் உரிமையாளர்கள் பணம் கொடுத்தது போல், இயேசுவானவர் சிலுவையில் நம் இடத்தை எடுத்துக்கொண்டு நமது இரட்சிப்புக்கான விலையைச் செலுத்தினார். அவா்கள் அதைச் செய்ததால், ஏழை மக்கள் தங்களுக்குத் தேவையானதை எந்தச் செலவுமின்றி பெற்றுக் கொண்டது போல நாமும் இலவசமாக இரட்சிப்பு என்ற பரிசை பெறலாம். அவருடைய இரட்சிப்பை நமக்கு இலவசமாக வழங்கும்படி அவர் எடுத்த அன்பான தீர்மானத்திற்கு அவர்களைப் போலவே நாமும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்
– ரவி எஸ். ரத்ரே
தேவனின் ‘விலைப்பட்டி இல்லா’ பரிசு உங்கள் வாழ்க்கையை எவ்வாறு ஊக்குவிக்கிறது? தேவனின் இரட்சிப்பின் பரிசுக்கு உங்கள் நன்றியை எவ்வாறு காட்டுகிறீர்கள்?
தேவனே, உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கொடுக்கப்பட்ட இரட்சிப்பின் ஈவுக்காக உமக்கு நன்றி.
