ஒரு பழைய நாட்டுப்புறக் கதையில், ஒரு பெண் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவாள், ஒரு நீளமான குச்சியின் இருமுனைகளிலும் இருவாளிகள் இருக்கும், ஒன்று புதிய உறுதியான வாளி, மற்றொன்று விரிசலுள்ள பழைய வாளி. அவள் வீட்டுக்கு வருகையில், புதிய வாளி நிறைந்திருக்கும், ஆனால் பழைய வாளியோ கிட்டத்தட்ட காலியாக இருக்கும். பழைய வாளி குற்ற உணர்ச்சியோடு அவளிடம் மன்னிப்பு கேட்டது. அதைத் திரும்பிப் பார்த்த அந்த பெண், அவளுடைய வழிப்பாதையை அதற்குச் சுட்டிக்காட்டி, “நீ இருக்கும் திசையில், இந்த வழியெங்கும் பூத்திருக்கும் பூக்களைக் கண்டாயா? நீ அவற்றிற்குத் தினமும் நீர்பாய்ச்சுகிறாய், நதிக்குப் போகும் என் பயணத்தையே நீ அழகாக்கிவிட்டாய்” என்றாள்.

இளமையைப் போற்றி புகழும் ஒரு உலகில் நாம் வாழ்கிறோம். இது இளையது, உறுதியானது, வடுக்களற்ற புதியதும், திறனுள்ளதாயும் இருக்கிறது. எனினும் வேதாகமம்; விரிசலுள்ளதும், தண்ணீர் நிற்காததுமான பழையவற்றிலிருந்தும் வலுவற்றதிலிருந்தும் வெளிப்படும் நீதி நிறைந்த ஒரு அழகைக்குறித்து நமக்குச் சொல்கிறது. முதிர்ந்த பாடல் எழுத்தாளர், “நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்” (சங்கீதம் 92:12) என்றார்.

இப்படியிருக்க, முதுமை என்றால் ஞானம் என்று எப்போதும் அர்த்தமாகாது. ஆனால், இளமை நம் வாழ்க்கைக்குத் தர இயலாத படிப்பினைகளை முதுமை கற்றுத்தரும். காரணம், முதியவர்கள் கொஞ்சம் அதிக காலம் வாழ்ந்துள்ளனர், கொஞ்சம் அதிக அனுபவம் கொண்டுள்ளனர், மேலும் தேவனுக்குள் செழிக்கும்படியான விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் கொஞ்சம் ஆழமாய் வேரூன்றியுள்ளனர். இத்தகைய முதியோர், “முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்” (வ.14).

நமது வாழ்க்கையில், முதியவர்கள் தொடர்ந்து அற்புதமான கனி தருகின்றனர். அதனைக் கவனிக்கவும், அவர்களுக்காக அக்கறைப்படவும் நேரம் ஒதுக்குவோமாக.