மார்ச் 24, 2023 அன்று தனது வானிலை முன்னறிவிப்பின் போது மிசிசிப்பியில் உள்ள ஒரு வானிலை ஆய்வாளர், ஆறு எளிய மற்றும் ஆழமான வார்த்தைகளைப் பேசியதற்காகப் பிரபலமானார். மேட் லௌபன், கடுமையான புயலை ஆய்வு செய்துகொண்டிருந்தார், அமோரி நகரத்தை பேரழிவுகரமான சூறாவளி தாக்கப் போகிறது என்பதை உணர்ந்தார். அப்போதுதான் உலகமெங்கும் கேட்கப்பட்ட, “அன்புள்ள இயேசுவே, தயவுசெய்து அவர்களுக்கு உதவும். ஆமென்” என்ற ஜெபத்தை லௌபன் தொலைக்காட்சி நேரலையில் இடைநிறுத்தி ஜெபித்தார். அந்த ஜெபம்தான் தங்களைப் பாதுகாப்பாய் மறைத்துக்கொள்ள உணர்த்தியதாக சில பார்வையாளர்கள் பின்னர் கூறினர். அவரது தன்னிச்சையான மற்றும் இதயப்பூர்வமான ஜெபம், எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற உதவியிருக்கலாம்.
நம்முடைய ஜெபங்களும் மாற்றத்தை ஏற்படுத்தும். அவை நீளமாக இருக்க வேண்டியதில்லை. அவை குறுகியதாகவும் இனிமையாகவும் மற்றும் நாளின் எந்த நேரத்திலும் ஜெபிக்கக் கூடியதாக இருக்கலாம். நாம் வேலையிலிருந்தாலும் சரி, நேரமின்றி இயங்கிக்கொண்டிருந்தாலும் சரி அல்லது விடுமுறையிலிருந்தாலும் சரி, நாம் “இடைவிடாமல் ஜெபிக்கலாம்” (1 தெசலோனிக்கேயர் 5:17).
நாள் முழுவதும் நாம் ஜெபிப்பதைக் கேட்கத் தேவன் விரும்புகிறார். நாம் கவலைக்கும் பயத்திற்கும் அடிமைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நம்முடைய எல்லா கரிசனைகளையும் கவலைகளையும் தேவனிடம் கொண்டு செல்ல முடியும் என்பதை அப்போஸ்தலன் பவுல் நமக்கு நினைவூட்டுகிறார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலிப்பியர் 4:6-7).
நாம் ஒரு வறட்சியான நாளை அனுபவித்தாலும், அல்லது வாழ்க்கையின் உண்மையான அல்லது அடையாளப்பூர்வமான புயல்களால் தாக்கப்பட்டாலும், நாள் முழுவதும் இடைநிறுத்தி, ஜெபிக்க நினைவில் கொள்வோம்.
நாள் முழுவதும் ஜெபிப்பதில், நீங்கள் எவ்வாறு அதிக எண்ணமுடையவர்களாக இருக்க முடியும்? கடந்த வருடங்களில் உங்கள் ஜெப வாழ்க்கை எவ்வாறு வளர்ந்திருக்கிறது?
பரலோக தகப்பனே, நான் எந்த நேரத்திலும் உம்மிடம் ஜெபிக்க முடியும் என்பதற்காக நன்றி.