பிரிட்டிஷ் ஓவியர் ஜான் மார்ட்டின் (1789-1854) நாகரிகங்களின் அழிவை சித்தரிக்கும் அபோகாலிப்டிக் நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றவர். இந்த அற்புதமான காட்சிகளில், மனிதர்கள் அழிவின் அளவைக் கண்டு வியப்படைகிறார்கள்; நெருங்கி வரும் அழிவுக்கு எதிராக பெலனற்றவர்களாக இருக்கிறார்கள். இவருடைய ஒரு ஓவியம், “நினிவேயின் வீழ்ச்சி,” இருண்ட உருளும் மேகங்களின் கீழ் பெருகிவரும் அலைகளின் அழிவிலிருந்து மக்கள் தப்பி ஓடுவதை சித்தரிக்கிறது.
மார்ட்டின் ஓவியம் வரைவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தீர்க்கதரிசியான நாகூம் நினவேக்கு விரோதமான நியாயத்தீர்ப்பை அறிவித்தார். தங்கள் சுய ஆதாயத்திற்காய் மற்றவர்களை ஒடுக்குகிறவர்களின் மீதான தேவ கோபத்தை அறிவிக்கும்பொருட்டு, மலைகள் நடுங்குவது, மலைகள் உருகுவது, பூமி நடுங்குவது போன்ற உருவகங்களை நாகூம் பயன்படுத்துகிறார் (நாகூம் 1:5). பாவத்திற்கான தேவனுடைய கோபாக்கினையில் கிருபை இடம்பெறாமல் இல்லை. தேவனுடைய வல்லமையைக் குறித்த மற்றவர்களுக்கு நினைவூட்டும் நாகூம், தேவனை “நீடிய சாந்தமுள்ளவர்” (வச. 3) என்றும் “தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்” (வச. 7) என்றும் சித்தரிக்கிறார்.
நியாயத்தீர்ப்பு செய்தியை வாசிப்பது கடினமாய் தோன்றலாம். ஆனால் தீமையை மேற்கொள்ளாத உலகம் பயங்கரமானதாக இருக்கும். நியாயத்தீர்ப்பு செய்தியோடு நாகூம் முடித்துவிடவில்லை. தேவன் ஒரு நல்ல மற்றும் நீதியான உலகத்தை விரும்புகிறார் என்பதை அவர் நமக்கு நினைப்பூட்டுகிறார்: “இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது” (வச. 15). அந்த நற்செய்தி இயேசுவாகும். அவர் பாவத்தின் விளைவுகளை சுமந்தார். அதனால் நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடிகிறது (ரோமர் 5:1, 6).
ஒடுக்கப்பட்டவர்களை தேவன் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? அநீதிக்கு எதிரான அவருடைய கோபத்தைப் பற்றிய உங்கள் புரிதல், ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க உங்களை எப்படித் தூண்டுகிறது?
தகப்பனே, உலகம் முழுவதும் அநீதியாய் அவதிப்படுபவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன்.