நான் இரட்சிக்கப்பட்டு , என் வாழ்வைத் தேவனுக்கு அர்ப்பணித்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் என் பத்திரிகைத் துறை வேலையைக்  கைவிடும்படி என்னை வழிநடத்துவதை உணர்ந்தேன். நான் என் பேனாவைக் கீழே போட்டு, என் எழுத்து காணாமல் போனதால், ஒரு நாள் தேவன் தனது மகிமைக்காக எழுத என்னை அழைப்பார் என்று என்னால் உணர முடியவில்லை. எனது தனிப்பட்ட வனாந்தரத்தில் நான் அலைந்து திரிந்த ஆண்டுகளில், யாத்திராகமம் 4 இல் உள்ள மோசே மற்றும் அவரது கோலின் கதையால் நான் உற்சாகமடைந்தேன்.

பார்வோனின் அரண்மனையில் வளர்க்கப்பட்டு, பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருந்த மோசே, எகிப்தை விட்டு ஓடிப்போய், தேவன் அவனை அழைத்தபோது ஒரு மேய்ப்பனாக இருளில் வாழ்ந்து கொண்டிருந்தான். தேவனுக்குக் கொடுக்க தன்னிடம் எதுவும் இல்லை என்று மோசே நினைத்திருக்க வேண்டும், ஆனால் அவருடைய மகிமைக்காக யாரையும் எதையும் பயன்படுத்த முடியும் என்பதை அவன் கற்றுக்கொண்டான்.

“கர்த்தர் அவனை நோக்கி: உன் கையில் இருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான். அதைத் தரையிலே போடு என்றார்” (யாத்திராகமம் 4:2-3). மோசேயின் சாதாரண கோல் சர்ப்பமாக மாறியது. அவர் சர்ப்பத்தைப் பிடித்தபோது, ​​தேவன் அதை மீண்டும் கோலாக மாற்றினார் (வ. 3-4). இஸ்ரவேலர்கள், “ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்” (வ. 5). மோசே தனது கோலை கீழே எறிந்துவிட்டு, அதை மீண்டும் கையில் எடுத்தது போல, ​​தேவனுக்குக் கீழ்ப்படிந்து ஒரு பத்திரிகையாளராக நான் எனது வேலையை விட்டேன். பின்னர், எனது பேனாவை மீண்டும் எடுக்க அவர் என்னை வழிநடத்தினார், இப்போது நான் அவருக்காக எழுதுகிறேன்.

தேவனால் பயன்படுத்தப்பட நம்மிடம் அதிகம் இருக்க வேண்டுமென்றில்லை. அவர் நமக்குக் கொடுத்த தாலந்துகளை கொண்டே நாம் அவருக்குச் சேவை செய்யலாம். எவ்வாறு ஆரம்பிப்பது என்று தெரியவில்லையா? உங்கள் கையில் என்ன இருக்கிறது?