ஒரு நண்பர் தனது திருமண உறுதிமொழியை மீறினார். அவரே தனது குடும்பத்தை அழிப்பதைப் பார்ப்பது வேதனையாக இருந்தது. அவர் தனது மனைவியுடன் சமரசம் செய்ய முயன்றபோது, என்னிடம் ஆலோசனை கேட்டார். அவர் வார்த்தைகளில் அல்ல செயல்களில் காட்ட வேண்டுமென்றும்; தனது மனைவியை நேசிப்பதிலும் பாவத்தின் எந்த வடிவத்தையும் அகற்றுவதில் முனைப்புடன் இருக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன்.
கர்த்தருடன் செய்த உடன்படிக்கையை மீறி அந்நிய தேவர்களைப் பின்பற்றியவர்களுக்கு எரேமியா தீர்க்கதரிசி இதே போன்ற ஆலோசனை வழங்கினார். அவரிடம் திரும்புவது நல்ல துவக்கமாக இருந்தாலும், அது மட்டும் போதாது (எரேமியா 4:1). அவர்கள் சொல்லோடு அவர்கள் செயல்களையும் இசைவாகச் சீரமைக்க வேண்டும். அது அவர்களின் “அருவருப்பான விக்கிரகங்களை” அகற்றுவதைக் குறிக்கிறது (வ. 1). எரேமியா, அவர்கள் “உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும்” அர்ப்பணித்தால், தேவன் தேசங்களை ஆசீர்வதிப்பார் என்றார் (வ. 2). மக்கள் வெற்று வாக்குறுதிகளை அளிப்பதுதான் பிரச்சனை. அவர்களின் இருதயம் அதிலே இல்லை.
தேவனுக்கு வெறும் வார்த்தைகள் வேண்டாம்; அவருக்கு நம் இருதயங்கள் வேண்டும். இயேசு கூறியது போல், “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” (மத்தேயு 12:34). அதனால்தான், எரேமியா தனக்குச் செவிகொடுப்பவர்களை “நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்” (எரேமியா 4:3) என்று ஊக்கப்படுத்துகிறார்.
துரதிர்ஷ்டவசமாக, பலரைப் போலவே, எனது நண்பரும் சரியான வேதாகம அறிவுரைகளுக்குச் செவிசாய்க்கவில்லை, அதன் விளைவாக அவரது திருமண வாழ்வை இழந்தார். நாம் பாவம் செய்யும்போது, அதை ஒப்புக்கொண்டு அதிலிருந்து திரும்ப வேண்டும். தேவனுக்கு வெற்று வாக்குறுதிகள் வேண்டாம்; அவருடன் உண்மையிலேயே இசைந்திருக்கும் ஒரு வாழ்க்கையை விரும்புகிறார்.
உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதிகளில் உங்கள் வார்த்தைகள் செயல்களுடன் பொருந்தவில்லை? உங்களின் எந்த போக்கை மாற்ற வேண்டும்?
தகப்பனே, நான் நம்புவதாகக் கூறுபவையோடு எனது செயல்கள் முரண்படுவதற்காக என்னை மன்னியும்.