கலாவதி தனது கொள்ளுப்பேரனான ராஜேஷுக்காக  பின்னிக்கொண்டிருந்த கம்பளிச்சட்டையை முடிப்பதற்குள் இறந்துவிட்டார். அதை நிறைவுசெய்ய மற்றொரு ஆர்வமுள்ள பின்னல்காரரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. “நிறைவு செய்பவர்கள்” எனப்பட்ட தன்னார்வ கைவினைஞர்களையும்,  தங்கள் பணிகளை முடிப்பதற்கு முன்னரே இந்த வாழ்க்கையை விட்டு வெளியேறினவர்களின் அன்புக்குரியவர்களையும் இணைக்கும் ஒரு நிறுவனத்திற்கு நன்றி. “நிறைவு செய்பவர்கள்” துக்கப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு பணியை முடிக்க தங்கள் நேரத்தையும் திறமையையும் அன்புடன் செலவிடுகின்றனர்.

தேவன் எலியாவின் பணிக்காகவும்கூட ஒரு “நிறைவு செய்பவரை” நியமித்தார். இஸ்ரவேலர்கள் தேவனின்  உடன்படிக்கையை நிராகரித்து தீர்க்கதரிசிகளைக் கொல்வதைக் கண்டு அந்தத் தீர்க்கதரிசி தனிமையாகவும் மனச்சோர்வுடனும் இருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தேவன் எலியாவிடம் “எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” (1 இராஜாக்கள் 19:16) என அறிவுறுத்தினார். தேவனுடைய சத்தியத்தைப் பிரகடனப்படுத்துவதற்கான பணியானது எலியாவின் மரணத்திற்குப் பின்னரும் தொடரும் என்பதை இது உறுதி செய்தது.

எலியாவுக்குப் பின் தேவனின் தீர்க்கதரிசியாகத் தொடரும்படி தேவன் அவரை அழைத்தார் என்று எலிசாவுக்கு காண்பிக்க, எலியா “அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்” (வ. 19). தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமான செய்தி தொடர்பாளர் ஒருவரின் அதிகாரத்தைக் குறிக்க ஒரு தீர்க்கதரிசியின் சால்வை பயன்படுத்தப்பட்டதால் (பார்க்க 2 இராஜாக்கள் 2:8), இந்த செயல் எலிசாவின் தீர்க்கதரிசிக்கான அழைப்பைத் தெளிவாக்கியது.

இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக, தேவனின் அன்பைப் பிறருடன் பகிரவும், “[அவருடைய] புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு” (1 பேதுரு 2:9) அழைக்கப்பட்டிருக்கிறோம். இப்பணியானது நம் ஆயுளை விட அதிகமாக இருப்பினும், அவர் இப்பணியை ஆதரிப்பார் என்றும், அவரை அறிவிக்கும் உன்னதமான வேலைக்கு பிற “நிறைவு செய்பவர்களை” தொடர்ந்து அழைப்பார் என்றும் நாம் நிச்சயம் நம்பலாம்.