என் பேத்தி இலியானா ஏழு வயதாக இருந்தபோது, ​​குவாத்தமாலாவில் உள்ள ஒரு அனாதை இல்லத்தைப் பற்றிய காணொளியை அவள் பள்ளியில் பார்த்தாள். அவள் அம்மாவிடம், “அவர்களுக்கு உதவ நாம் அங்குச் செல்ல வேண்டும்” என்றாள். அவள் பெரியவளான பின் அதைப் பற்றி யோசிப்போம் என்று அவளுடைய அம்மா பதிலளித்தார்.

இலியானா ஒருபோதும் மறக்கவில்லை, அவளுடைய பத்தாம் வயதில்  ​​அவளுடைய குடும்பம் அனாதை இல்லத்திற்கு உதவச் சென்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் திரும்பிச் சென்றனர், இந்த முறை இலியானாவின் பள்ளியிலிருந்து மற்ற இரண்டு குடும்பங்களையும் அழைத்துச் சென்றனர். இலியானாவுக்கு பதினைந்தாம் வயதில், ​​அவளும் அவளுடைய அப்பாவும் மீண்டும் குவாத்தமாலாவுக்குச் சேவை செய்யச் சென்றனர்.

சிறுபிள்ளைகளின் ஆசைகளும் கனவுகளும், பெரியவர்களின் சிந்தனையின் பாரத்தைச் சுமந்திருக்காது என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். ஆனால் வேதம் அத்தகைய வேறுபாட்டைக் காட்டவில்லை. சாமுவேலைப் போலவே தேவன் சிறுபிள்ளைகளை அழைக்கிறார் (1 சாமுவேல் 3:4). சிறுபிள்ளைகளின் விசுவாசத்தை இயேசு கனப்படுத்துகிறார் (லூக்கா 18:16). மேலும் பவுல், ஜனங்கள் “இளமையைக்குறித்து” (1 தீமோத்தேயு 4:12) அசட்டைபண்ணாதபடிக்கு இளைய விசுவாசிகள் இருக்கவேண்டும் என்று கூறினார்.

எனவே, நாம் நம் பிள்ளைகளை வழிநடத்த அழைக்கப்பட்டுள்ளோம் (உபாகமம் 6:6-7; நீதிமொழிகள் 22:6), அவர்களின் விசுவாசம் நம் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி என்பதை உணர்ந்து (மத்தேயு 18:3) அவர்களுக்கு இடறல் செய்வதைக் குறித்து கிறிஸ்து எச்சரித்துள்ளார் (லூக்கா 18:15) என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகளிடம் நம்பிக்கையின் தீப்பொறியைக் கண்டால், பெரியவர்களாகிய நம் வேலை அதைத் தூண்டும்படி உதவுவதாகும். தேவன் நம்மை நடத்துவதுபோல, ​​இயேசுவை நம்புவதற்கும் அவருக்காகச் சேவை செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை நோக்கி அவர்களை ஊக்குவிக்கலாம்.