பதின்ம வயதினர்களாக, எங்களுடைய அம்மா இயேசுவை ஏற்றுக்கொள்ள தீர்மானித்த முடிவை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவருக்குள் நாங்கள் கண்ட மாற்றங்களை எங்களால் மறுக்க முடியவில்லை. அவரிடத்தில் அதிக மனநிறைவும் மகிழ்ச்சியும் காணப்பட்டது. திருச்சபையிலும் உண்மையாய் ஊழியம்செய்ய ஆரம்பித்தார். வேதத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு அதிகம் இருந்ததினால் வேதாகமக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். சில வருடங்களுக்குப் பிறகு, என் சகோதரி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தாள். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து நானும் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் தந்தையும் எங்களுடன் சேர்ந்தார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் என் அம்மாவின் தீர்மானம் எங்களுடைய குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் படிப்படியாய் பாதித்தது.
அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு தனது கடைசி நிருபத்தை எழுதி, இயேசுவின் மீதான விசுவாசத்தில் நிலைத்திருக்க ஊக்குவித்தபோது, தீமோத்தேயுவின் ஆவிக்குரிய பாரம்பரியத்தைக் குறித்து குறிப்பிடுகிறார். “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்” (2 தீமோத்தேயு 1:5).
அம்மாக்கள் மற்றும் பாட்டிகளே, உங்கள் முடிவுகள் தலைமுறைகளை பாதிக்கலாம்.
தீமோத்தேயுவின் அம்மாவும் பாட்டியும் எவ்வளவு அழகாக அவருடைய விசுவாசத்தை வளர்க்க உதவினார்கள். அதனால் அவர் தேவனுடைய அழைப்பிற்கு பாத்திரவானாய் மாறினார்.
இந்த அன்னையர் தினத்திலும் இதற்கு பின்னரும், இயேசுவைப் பின்பற்ற முடிவு செய்த தாய்மார்களை கௌரவிப்போம்.
நம் அன்புக்குரியவர்களுக்காக ஆவிக்குரிய சுவடை விட்டுச் செல்வோம்.
இன்று எந்த ஆவிக்குரிய ஸ்திரீயை நீங்கள் கனப்படுத்த விரும்புகிறீர்கள்? எந்த வகையான ஆவிக்குரிய சுவடை மற்றவர்களுக்கு மற்றவர்களுக்காக நீங்கள் விட்டுச் செல்ல விரும்புகிறீர்கள்?
அன்பான தகப்பனே, ஆவிக்குரிய தாயாருக்காய் நன்றி. மற்றவர்களுக்கு ஆவிக்குரிய சுவடுகளை விட்டுச் செல்ல எனக்கு உதவிசெய்யும்