பாஸ்டர் டாமியனின் தினசரி அலுவல் அட்டவணையில், வெவ்வேறு வாழ்க்கைப் பாதைகளைத் தெரிந்தெடுத்து மரணத்தை நெருங்கும் இரண்டு நபர்களை சந்திக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது. ஓர் மருத்துவமனையில் தன் குடும்பத்தாரால் விரும்பப்படும் ஓர் பெண் இருந்தாள். அவளது தன்னலமற்ற பொதுச்சேவை பலரின் அபிமானத்தை பெற்றதால் மற்ற விசுவாசிகள் அவளது அறையை நிரப்பி, ஆராதனை, பாடல், ஜெபம் என்று செய்தனர். மற்றொரு மருத்துவமனையில், பாஸ்டர் டாமியனின் தேவாலயத்தைச் சேர்ந்த இன்னொரு உறுப்பினரின் உறவினரும் இறக்கும் தருவாயில் இருந்தார். அவரது கடினமான இதயம் கடினமான வாழ்க்கைக்கு வழிவகுத்தது. மேலும் அவரது மோசமான முடிவுகள் மற்றும் தவறான செயல்களின் பின்னணியில் அவரது குடும்பம் வாழ்ந்துவந்தது. இந்த இரண்டு வெவ்வேறான சூழ்நிலைகள், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பதைப் பிரதிபலித்தது.
வாழ்க்கையில் தாங்கள் எங்கு செல்கிறோம் என்பதைக் கருத்தில்கொள்ளத் தவறியவர்கள் பெரும்பாலும் சங்கடமான, விரும்பத்தகாத, தனிமையான இடங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். நீதிமொழிகள் 14:12, “மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என்று கூறுகிறது. இளைஞர்கள் அல்லது வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது நலமுடையவர்கள், செல்வந்தர்கள் அல்லது வறியவர்கள் என யாராக இருந்தாலும், தங்களுடைய வாழ்க்கைப் பாதையை சரிசெய்வதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. அது நம்மை எங்கே கொண்டு செல்லும்? அது தேவனை கனப்படுத்துமா? அது மற்றவர்களுக்கு உதவக்கூடியதா அல்லது பாதிக்கக்கூடியதா? இயேசுவை விசுவாசிப்பவருக்கு இது சிறந்த பாதையா?
தேர்ந்தெடுப்புகள் மிகவும் முக்கியம். பரலோகத்தின் தேவன் அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக, “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28) என்று வாக்குப்பண்ணுகிறார்.
உங்கள் வாழ்க்கைப் பாதையைப் பற்றிய மறுபரிசீலனை அல்லது திருத்தம் உங்களுக்கு தேவைப்படுகிறதா? திருத்தங்களைச் செய்வதற்கு தேவனின் உதவியையும் தைரியத்தையும் கேட்பதிலிருந்து உங்களைத் தடுப்பது எது?
அன்புள்ள இயேசுவே, நீரே என் வாழ்வின் ஆதாரம். என் வாழ்க்கையை உம்மிடம் ஒப்படைத்து, உம்மை கனப்படுத்த எனக்கு தைரியத்தையும் வல்லமையையும் அருளும்.