2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ்-ம் அர்ஜென்டினாவும் மோதியபோது, அது “வரலாற்றில் மிகப் பெரிய உலகக் கோப்பைப் போட்டி” என்று பலர் அழைக்கும் ஓர் நம்பமுடியாத போட்டியாக இருந்தது. கூடுதல் நேரத்தின் இறுதி நொடிகள் நிறைவடைந்தபோது, கோல் 3-3 என சமநிலையில் இருந்ததனால் கால்பந்து அணிகள் பெனால்டி உதைக்கு அனுப்பப்பட்டன. அர்ஜென்டினா வெற்றி இலக்கை எட்டியதையடுத்து, நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் மூழ்கியது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான அர்ஜென்டினா மக்கள் புவெனஸ் அயர்ஸ் நகரில் கூட்டங்கூடினர். இந்த ஆரவாரமான, மகிழ்ச்சியான காட்சியைக் காட்டும் ட்ரோன் கேமரா காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது. ஓர் பிபிசி செய்தியறிக்கை நகரம் மகிழ்ச்சியில் எவ்விதம் மூழ்கியது என்பதை விவரித்தது.

மகிழ்ச்சி எப்போதும் ஓர் அற்புதமான பரிசு. ஒரு நகரமும் அதிலுள்ள மக்களும் நீடித்த மகிழ்ச்சியை எவ்விதம் அனுபவிக்கக்கூடும் என்று நீதிமொழிகள் விவரிக்கிறது. “நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்” (நீதிமொழிகள் 11:10) என்று நீதிமொழிகள் கூறுகிறது. மனுஷீகத்தைக் குறித்த தேவனுடைய தெய்வீகத் திட்டத்தின்படி வாழ்கிறவர்கள், சமூகத்தில் நல்ல பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். அவ்வாறு செய்யும்போது தேவனுடைய நீதி ஆளுகை செய்கிறது என்கிற  நற்செய்தியை மக்கள் பெறுகின்றனர். பேராசை குறைகிறது. ஏழைகளுக்கு ஆதரவு கிடைக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். எப்பொழுதெல்லாம் தேவனுடைய திட்டத்திற்கேற்ற வாழ்க்கைமுறை செழித்தோங்குகிறதோ, அப்போது நகரத்தில் மகிழ்ச்சியும் “ஆசீர்வாதமும்” தங்கும் (வச. 11).

நாம் தேவனுடைய வழிகளை உண்மையாக பின்பற்றினால், அதன் விளைவு அனைவருக்கும் நன்மை அளிப்பதாய் இருக்கும். நாம் வாழும் முறை நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை சிறப்பாகவும், முழுமையாகவும் மாற்றும். உலகை பண்படுத்துவதற்கான தெய்வீக முயற்சியில் ஓர் அங்கத்தினராய் செயல்படுவதற்கு தேவன் நம்மை அழைக்கிறார். நகரத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர அவர் நம்மை அழைக்கிறார்.