இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.
அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.
எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.
நீங்கள் எதற்க்காகிலும் ஜெபித்தும், ஒருவேளை தேவன் உங்கள் விண்ணப்பங்களைப் புறக்கணிப்பதாக எப்போது உணர்ந்தீர்கள்? அந்தக் காத்திருப்பு நேரத்தில் நீங்கள் என்ன பாடத்தைக் கற்றுக்கொண்டீர்கள்?
அன்பு தேவனே, உம்மீது நம்பிக்கை வைத்து, ஜெபத்தில் பொறுமையைக் கற்றுக்கொள்ள எனக்கு உதவும்.