தனது மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது அறியப்பட்டவுடன், அதை மேற்கொள்வதற்கான வழிமுறைகளில் அதிகமாக இருப்பது அதனை “எதிர்த்து போராடுவதேயென்று” கிறிஸ்டினா கோஸ்டா கவனித்தார். ஆனால் இந்த செயல்முறை விரைவில் சோர்வுறச்செய்வதையும் உணர்ந்தாள். அவள் “[தன்] சொந்த உடலுடன் ஒரு வருடத்திற்கு மேல் போராட விரும்பவில்லை.” மாறாக, அவளைக் கவனித்துக் கொள்ளும் நிபுணர்களின் குழுவிற்கும், அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தவர்களுக்கும் தன் நன்றியுணர்வைக் காட்டுவது அதிக பலனளிப்பதை அறிந்தாள். எவ்வளவு கடினமான போராட்டமாக இருந்தாலும் நன்றியுணர்வு மனச்சோர்வை எதிர்க்க உதவுவதோடு, “நமது மூளையை மறுசீரமைப்பு பெறும்படி கட்டமைக்க உதவும்” என்பதை அவள் நேரடியாக அனுபவித்தாள்.
கோஸ்டாவின் வாழ்விலிருந்து நன்றியுணர்வைக் கடைப்பிடிப்பது என்பது, விசுவாசிகள் கடமைக்காகச் செய்வது மட்டுமல்ல என்பதை அறிந்தேன். நாம் நன்றி செலுத்தத் தேவன் தகுதியானவர் என்பது உண்மைதான் என்றாலும், அது நமக்கு மிகவும் நல்லது. நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.” (சங்கீதம் 103:2) என்று கூறும்போது, தேவனின் மகத்துவமுள்ள செயல்களை நாம் நினைக்கிறோம். அவைகள் அவர் தரும் பாவமன்னிப்பை நமக்கு உறுதிப்படுத்தி, நம் உள்ளத்திலும், உடலிலும் சுகத்தைத் தருகிறது, அவருடைய படைப்புகளான நாம் “அன்பையும் இரக்கத்தையும்” மற்றும் மட்டற்ற நன்மைகளையும் அனுபவிக்க வழி செய்கிறது (வ.3-5).
நாம் அனைத்து துன்பங்களிலும் பூரண சுகத்தை இவ்வாழ்நாளில் பெறாவிடினும், நன்றியுணர்வு நமது இருதயத்தைப் புதுப்பிக்கும், ஏனென்றால் நித்திய நித்திய காலமாய் தேவனின் கிருபையும், அன்பும் நம்முடன் இருக்கிறது (வ.17).
நன்றியுணர்வின் மூலம் தேவனின் குணமாக்குதலை அனுபவித்துள்ளீர்களா? இன்று நீங்கள் எதற்காக நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்?
அன்புள்ள தேவனே, நன்றியுணர்வு மற்றும் நம்பிக்கைக்கான காரணங்களை எப்போதும் எனக்கு வழங்கியதற்கு நன்றி.