சில நண்பர்களுடன் நாங்கள் தண்ணீர் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, காற்றடைக்கப்பட்ட தளங்களால் செய்யப்பட்ட மிதக்கும் தடைப் பாதையில் நடக்க முயற்சித்தோம். துள்ளலான, வழுக்கும் தளங்கள் மீது நேராக நடந்துசெல்வது என்பது சாத்தியமற்றது. சரிவுகள், பாறைகள் மற்றும் பாலங்கள் வழியாக நாங்கள் தள்ளாடியபோது, நாங்கள் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விழுந்து கூச்சலிட நேரிட்டது. என் தோழிகளில் ஒருத்தி, முற்றிலும் களைத்துப்போய், மூச்சு விடுவதற்காக “கோபுரம்” ஒன்றில் சாய்ந்து இளைப்பாறினாள். அவளுடைய உடல் எடை தாங்க முடியாமல், மீண்டும் வழுக்கிக்கொண்டு வந்து தண்ணீரில் விழுந்தாள்.
தண்ணீர் பூங்காக்களில் காணப்படும் இதுபோன்ற பெலனில்லாத கோபுரம் போலில்லாமல், வேதாகம காலகட்டங்களில் ஒரு கோபுரம் மிகவும் பாதுகாப்பானதாக திகழ்ந்தது. நியாயாதிபதிகள் 9:50-51, தேபேஸ் மக்கள் தங்கள் நகரத்தின் மீது அபிமெலேக்கின் தாக்குதலிலிருந்து மறைந்து கொள்ள “பலத்த துருகத்திற்கு” எவ்வாறு விரைந்து ஓடினர் என்பதை விவரிக்கிறது. நீதிமொழிகள் 18:10இல், ஆசிரியர் தன்னை நம்புகிறவர்களை விடுவிக்கும் தேவனை பலத்த துருக்கமாய் உருவகப்படுத்துகிறார்.
இருப்பினும், சில சமயங்களில், நாம் சோர்வாக இருக்கும்போது அல்லது காயப்படும்போது தேவனுடைய பலத்த துருகத்தின் மீது சாய்வதற்குப் பதிலாக, பாதுகாப்பு மற்றும் ஆதரவிற்காக – தொழில், உறவுகள் அல்லது உடல் வசதிகளுக்காக வேறு விஷயங்களைத் தேட நேரிடுகிறது. செல்வத்தில் பலம் தேடும் ஐசுவரியவான்களிடமிருந்து நாம் வேறுபட்டவர்கள் அல்ல (வச. 11). ஆனால் காற்றடைக்கப்பட்ட கோபுரம் எனது சிநேகிதியை தாங்க முடியாதது போல், இந்த விஷயங்கள் நமக்கு உண்மையில் தேவையானதை கொடுக்க முடியாது. ஆனால் சர்வ வல்லமையுள்ள, சகலத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தேவன் நமக்கு மெய்யான ஆறுதலையும் பாதுகாப்பையும் தருகிறார்.
நீங்கள் எந்த “கோபுரங்களில்” சாய்ந்திருக்கிறீர்கள்? பலத்த துருக்கம், தேவனிடம் ஓடுவதை எப்படி நினைவூட்டுவது?
அன்புள்ள தேவனே, ஆறுதல் மற்றும் பாதுகாப்பிற்காக மற்ற காரியங்களை நம்புவதைப் பார்க்கிலும் உம்மிடம் ஓடிவர எனக்கு உதவிசெய்யும்.